மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி நேற்று தொடங்கியது. அப்போட்டியில் 58 பேர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அமைதியாக நடந்துமுடிந்தது.

இந்த நிலையில், இன்று காலை பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது. விறுவிறுப்பாக நடந்த போட்டியில் வீரர்கள் சிறப்பாக விளையாடி பரிசுகளைப் பெற்றுவந்தார்கள். இதில் ஒன்பது மாடுகளைப் பிடித்து சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த அரவிந்த் ராஜ் என்ற வீரர் அடுத்த மாட்டை பிடிக்கச் சென்றபோது அவர் வயிற்றில் மாடு குத்தியது.
படுகாயம் அடைந்த நிலையில், அவர் உடனே மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார்.
மிகக் கவனமாக நடத்தப்பட்ட நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டியில் அரவிந்த் ராஜின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இச்சோக சம்பவம் மதுரை மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இதுவரை 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கின்றனர். இதில் செய்தியாளர் திருமலை சீனிவாசன் என்பவர், மாடு முட்டியதில் வயிற்றில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.