Published:Updated:

``பசுவும் காளையும் இணைந்தால் உரிமையாளருக்கு சிறை!''- கொதிக்கும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

நாட்டுக் காளைகளின் சத்துக்கள் குறைந்துவருவதால், அதைச் சரிசெய்யும் நோக்கில், வெளிநாட்டு இன மாடுகளின் அணுக்களை சினை ஊசி மூலம் நாட்டுப் பசுமாடுகளுக்கு செலுத்தி, தரமான கன்றுகளை உருவாக்கும் செயல்பாடுதான் இந்தச் சட்டத்தின் முதன்மை நோக்கம்.

தமிழக சட்டப்பேரவையில், தமிழ்நாடு காளை இனவிருத்திச் சட்டம் கடந்த வருடம் ஜூலை 18-ம் தேதி இயற்றப்பட்டது. நாட்டு மாடுகளின் தரத்தை உயர்த்தும் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தில், சில சிக்கல்கள் இருப்பதாக ஜல்லிக்கட்டு ஆதரவு இயக்கங்கள் புகார் கூறுகின்றன.

நாட்டுக் காளைகளின் சத்துக்கள் குறைந்து வருவதால், அதைச் சரிசெய்யும் நோக்கில், வெளிநாட்டு இன மாடுகளின் அணுக்களை சினை ஊசி மூலம் நாட்டுப் பசுமாடுகளுக்கு செலுத்தி, தரமான கன்றுகளை உருவாக்கும் செயல்பாடுதான் இந்தச் சட்டத்தின் முதன்மை நோக்கம். அதற்கு முன் தமிழ்நாட்டின் உம்பளச்சேரி மாடுகள், காங்கேயம் மாடுகளெல்லாம் எப்படி இனவிருத்திக்குத் தகுதியிழக்கின்றன என்பதையும் இந்தச் சட்டம் குறிப்பிடுகிறது.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

இந்தச் சட்டத்தின் 12-வது பகுதியின் தொடக்கத்திலேயே இது நாட்டு மாடுகளுக்கான சட்டம் என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது. "இனவிருத்தி செய்வதற்கான காளைகள் வைத்திருக்கும் விவசாயிகள், அந்த மாடுகளைப் பதிவு செய்ய வேண்டும்" என்கிறது இந்தச் சட்டம். அதுவும் 2 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். அதன்பின், மீண்டும் பதிவைப் புதுப்பிக்க வேண்டும்; குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை காளைகளுக்கு உடல் தகுதி மருத்துவச் சான்றிதழ் பெற வேண்டும்; அதன்படி, இனவிருத்திக்குத் தகுதியற்ற, நோய்வாய்ப்பட்ட காளைகளை அதிகாரி சொல்கிற விதத்தில் கொலை செய்ய வேண்டும். அதோடு, மாடுகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்குள் எந்த நேரம் வேண்டுமானாலும் அதிகாரிகள் நுழைய அனுமதி தருகிறது இந்தச் சட்டம்.

இனவிருத்திக்குத் தகுதியிழந்த மாடுகள் கொல்லப்பட்டு, தமிழ்நாட்டுப் பசுக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் ஜெர்ஸி, ஹோல்ஸ்டைன், பெர்சியன் இனக்காளைகளின் சினை ஊசியை செலுத்தி, புதிய கன்றுகளைப் பெறுவதும் அடங்குகிறது. அப்படிப் பிறக்கும் கன்றுகள், பசுக்கன்றுகளாகவே இருக்கும், கடைசி வரை இனப்பெருக்கம், சினை ஊசி மூலமாகவே நடைபெறும்.

மேற்கண்ட இந்த விதிகளுக்காகத்தான் தற்போது எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. இதுகுறித்து இயக்குநர் கௌதமன் பேசும்போது, "வைத்திருக்கும் மாடுகளுக்கு ஏறக்குறைய ஆதார் அட்டையைப் போல உரிமம் பெற வேண்டும். 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையத்தில் புதுப்பிக்க வேண்டும். எந்த விவசாயியால் அவரிருக்கும் கிராமத்தில் இணையத்தைத் தேடிச் சென்று, மாட்டை ஓட்டிச்சென்று, இந்தப் பதிவு முறைகளைச் செய்யமுடியும்? இடையில், அந்தக் காளைகளுக்கு மருத்துவச் சான்றிதழ் பெற வேண்டும். அந்தச் சான்றிதழ் எதற்கென்றால், சான்றிதழ் பெறப்பட்ட காளைகள் மட்டுமே இனவிருத்திக்கு உட்படுத்தப்பட முடியும். மீறி விவசாயிக்கு தெரியாமல் பசு மாட்டோடு காளை மாடு இணைந்துவிட்டால், விவசாயிக்கும் தண்டனை, மாட்டுக்கும் தண்டனை! அப்படி சான்றிதழுக்குத் தகுதிபெறாத மாட்டை விதையடிப்பு செய்தால் மட்டும் விவசாயி வைத்துக்கொள்ளலாம்.

இயக்குநர் கௌதமன்
இயக்குநர் கௌதமன்

அந்த மாட்டை நாம் வேறெதற்கும் பயன்படுத்த முடியாது. அதிகாரிகள் எந்த நேரம் வேண்டுமானாலும் மாடு வைத்திருக்கும் தொழுவத்திற்கோ கொட்டகைக்கோ வந்து பரிசோதித்து, தகுதி இல்லையெனில் அழிக்க உத்தரவிடுவார்கள்; கொன்றுவிட வேண்டும். அடி மாட்டுக்கு, கறிக்கு அனுப்பிவிட வேண்டும், புதைத்துவிட வேண்டும் என்று அழிப்பைப் பல விதங்களில் குறிப்பிடுகின்றனர். ஏறக்குறைய மரண தண்டனையைக் குறிப்பிடுகிறது அரசாங்கம். சினை ஊசிகள் தருவார்களாம், அது ஒரு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுமாம். அதற்குள் இருக்கும் பெரும் சூழ்ச்சி, அதில் பிறக்கும் கன்றுகள் காளைகளாய் இருக்காது. எல்லாம் பசுக்களாகவே பிறக்கும். ஜல்லிக்கட்டு வேண்டுமென்றுதானே போராடுவீர்கள், நாங்கள் உங்கள் மாட்டையே ஒழித்துவிடுவோம் என்ன செய்வீர்கள் என்று அரசு கேட்கிறது. இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்ததற்குப் பின்னால், பெரும் அறிவியல் சூழ்ச்சி உள்ளது. இயற்கை விவசாயம் முற்றிலுமாக அழியும்.

பாடம் கற்றுத் தந்த உள்ளாட்சித் தேர்தல்... பாதையை மாற்றுமா நாம் தமிழர் கட்சி?

மேலும், இதன்மூலம் பிறக்கும் மாடுகளின் பால், அதைப் பருகும் மக்களுக்கு மலட்டுத்தன்மையை உருவாக்கும். அவர்களின் சட்டத்தின்படி எல்லாக் காளைகளும் கொல்லப்பட்டுவிட்டால், ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டே அழிந்துபோகும். ஜல்லிக்கட்டு நாயகன் என்று சுவரொட்டிகளில் பெருமைகொள்ளும் ஆட்சியாளர்கள், இந்தச் சட்டத்தை இயற்றி பெரும் துரோகத்தை இழைத்துள்ளனர். ரத்தம் சிந்திப் பெரும் வலிகளோடு பெற்ற அந்த ஜல்லிக்கட்டு உரிமை பறிபோகும் கொடுமை நடந்துகொண்டிருக்கிறது. நாட்டு மாடுகளை முழுமையாக ஒழிக்கும் சட்டமாக இது திகழ்கிறது. இது, இந்த மண்ணுக்கான பேராபத்து, நம் மக்களுக்கான பேராபத்து.

இயக்குநர் கௌதமன்
இயக்குநர் கௌதமன்

1961ல் கேரள அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தது, பால் வேண்டும் என்பதற்காக. இப்போது அங்கு, 100 காளை மாடுகள் கூட கிடையாது. கேரளா மலைப் பிரதேசம், மாடு இல்லையென்றால் அது அவர்களைப் பாதிக்கப்போவதில்லை. ஆனால் தமிழ்நாடு, விவசாயத்தை நம்பிய பூமி. ஏற்கெனவே காய்ந்துகொண்டிருக்கிறது. இந்தச் சட்டத்தால் இன்னும் மூன்று வருடங்களில் இங்கு காளைகள் இருக்காது. நாளைய மனிதர்கள் பிள்ளை பெற்றுக்கொள்ள அனுமதி வாங்க வேண்டும் என்பார்கள், நீ பிள்ளை பெற்றுக்கொள்ளத் தகுதியற்றவன், உன் மனைவிக்கு வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட ஊசி செலுத்தப்படும் என்பார்கள். மானமுள்ள தமிழர்கள் பொறுத்திருக்க மாட்டோம்!" என்று கோபத்தோடு பேசி முடித்தார்.

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவைத் தலைவர் ஜி.ஆர்.ஜெயகார்த்தி பேசும்போது, "நிறைய மாட்டின் உரிமையாளர்களுக்கும், ஜல்லிக்கட்டு அமைப்புகளுக்கும் இந்தச் சட்டத்தைப் பற்றி இன்னும் தெரியவில்லை. இந்தச் சட்டம் என்ன சொல்லுகிறதென்றால், வயலில் மேய்ந்துகொண்டிருக்கும் பசு மாடும் காளைமாடும் இணைந்துவிட்டால், அதன் உரிமையாளருக்கு 2 வருடம் சிறைத்தண்டனை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம். அதுமட்டுமின்றி, ஜல்லிக்கட்டுக்கு புதிது புதிதாகச் சட்டங்கள் கொண்டுவருகின்றனர். 4 அடிக்கு மேல் மாடுகள் இருக்கக்கூடாதாம், பொதுவாக காங்கேயம், புளிகுளம் போன்ற சில காளைகள் 5,6 அடி வரை வளரக்கூடியவை. இந்தச் சட்டம்குறித்து அனைத்துக் கட்சியினரையும் சந்தித்து வருகிறோம். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சரியான நேர அளவு தருவதில்லை. மதுரையில் மட்டும்தான் காலை 8 மணிமுதல் மாலை 4 மணி வரை அனுமதி அளித்திருக்கிறார்கள். நாமக்கல்லில் 2,3 மணிநேரம் மட்டுமே அனுமதி தருகிறார்கள். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இம்முறையும் ஜல்லிக்கட்டு நடத்த விடவில்லையென்றால், கடுமையான போராட்டம் நடக்கும்.

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் ஜி.ஆர்.ஜெயகார்த்தி
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் ஜி.ஆர்.ஜெயகார்த்தி

கடந்த வருடம் போல, 10 மணிக்கு தொடங்கிய போட்டியை, 12 மணிக்கெல்லாம் முடிக்கச் சொல்லி காவல்துறை வற்புறுத்தினால், அந்த இடத்திலேயே போராட்டம் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். அரசு அறிவித்திருக்கும் கெஜெட்டின்படி 75 வீரர்கள் மட்டுமே களத்தில் இருக்க வேண்டும் என்பது விதி. ஒரு மாட்டுக்கு 75 பேரெல்லாம் விளையாடுவதற்குப் போதுமானதாக இருக்காது. மாடு ஒழுங்காக விளையாடாது, யாரும் இல்லாமலிருந்தால் ஓடிவிடும். யாரைக் கேட்டு இதெல்லாம் இவர்கள் முடிவுசெய்கிறார்கள் என்று தெரியவில்லை. போட்டி நடத்தும் எங்களிடம் பொறுப்பைக் கொடுங்கள். மாட்டுக்கும் எங்கள் தெய்வத்துக்கும் மரியாதை செய்துவிட்டுத்தான் எங்களால் ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தொடங்க முடியும். ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்கள், அவசரப்பட்டு எங்கள் சடங்கு, சம்பிரதாயங்களைத் தடுக்கிறார்கள்" என்று கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் பேசினோம்...

'' இந்தச் சட்டத்தில் எந்தவிதமான குழப்பத்துக்கும் மற்றவர்களின் தலையீட்டுக்கும் இடமிருக்காது. காளைகள் அழிந்துவிடும் என்று அவர் கூறுவது முற்றிலும் தவறான கருத்து. இதில் எந்த விதமான அரசியல் கலப்படமும் இல்லாமல் நடந்துவருகிறது. சிலர், வேண்டுமென்றே அவர்கள் பெயர் வரவேண்டும் என்பதற்காகத் தவறான கருத்துகளைத் தெரிவித்துவருகிறார்கள். ஜல்லிக்கட்டு தொடர்பாக அரசு அதிகாரிகளும் காவல்துறையும், முறையான செயல்பாடுகளை மேற்கொண்டுவருகின்றார்கள். அது, மாவட்ட ஆட்சியர்கள் மேற்பார்வையில் நடைபெற்றுவருகிறது. பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெறும்'' என்றார்.

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது ஜல்லிக்கட்டு. பொங்கல் பண்டிகையின்போது, இந்தப் பிரச்னை பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கியதாகப் பெருமைகொள்ளும் மாநில, மத்திய அரசுகள்தாம்.

- ஜான் ஜே. ஆகாஷ்

அடுத்த கட்டுரைக்கு