Published:Updated:

`வண்டிகளுக்கு பச்சை, நீலம், ரோஸ் கலர் பெயின்ட்!'- ஜெயங்கொண்டம் போலீஸின் லாக் டவுன் நடவடிக்கை

பெயிண்ட் அடிக்கும் போலீஸ்
பெயிண்ட் அடிக்கும் போலீஸ்

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை வெளியே வந்து அத்தியாவசிய பொருள்களை வாங்கிச்செல்ல வேண்டும். அப்படி வீட்டுக்குப் போகாமல் வெளியில் சும்மா சுற்றித்திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோதிலும் சிலர் சுற்றித் திரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதைத் தடுக்க, ஜெயங்கொண்டத்திற்குள் வரும் வாகனங்கள் அனைத்திற்கும் அடையாள அட்டை உள்ளதா என்று எளிதில் கண்டறியும்பொருட்டு, மூன்று விதமான பெயின்ட்டை காவல்துறையினர் வண்டியில் அடிக்கின்றனர். இதனால் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க முடியும் என்கிறனர் போலீஸார்.

அரியலூர்
அரியலூர்

கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் மற்ற நாடுகள் நிலைகுலைந்து நிற்கின்றன. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மிகக் கடுமையாக உழைத்துவருகிறார்கள். ஊரடங்கை மீறி வெளியே சுற்றும் இளைஞர்கள், வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் நூதன முறையில் தண்டனைகள் கொடுப்பது போன்ற வீடியோக்களும் வைரலாகிவருகின்றன. மேலும், காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.

இந்த நிலையில், லாக்டௌன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் வாகனங்களில் சுற்றித்திரிபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தவண்ணமே உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு மூன்று வண்ண அடையாள அட்டைகளை வழங்கி, அதன்மூலம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை வாங்கிச்செல்ல வழிவகை செய்துள்ளது. ஜெயங்கொண்டத்திற்குள் வரும் வாகனங்கள் அனைத்திற்கும் பச்சை, நீலம், ரோஸ் என வண்டிகளுக்கு பெயின்ட் அடிக்கும் பணியைக் காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

பெயிண்ட் அடிக்கும் போலீஸ்
பெயிண்ட் அடிக்கும் போலீஸ்

இதனால் மற்றவர் வாகனத்தை வாங்கிக்கொண்டு நகரத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். மேலும் அடையாள அட்டைகள் வைத்திருப்பவர்களை எளிதில் அடையாளம் காண முடியும். அட்டை இல்லாமல் வருபவர்களைப் பிடித்து வாகனங்களைப் பறிமுதல்செய்து, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதுமட்டுமல்லாது, பொதுமக்கள் வெளியே சுற்றுவதையும் கட்டுப்படுத்த முடியும் எனக் காவல் துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதுகுறித்து அரியலூர் காவல்துறை வட்டாரத்தில் பேசினோம். ”இம்மாவட்டத்தில்தான் முதல்முறையாக மூன்று விதமான வண்ணங்களில் அடையாள அட்டைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன் நோக்கமே, மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க வேண்டும் என்பதுதான். மாவட்ட நிர்வாகமும் போலீஸாரும் இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றன.

அரியலூர் எஸ்.பி சீனிவாசன்
அரியலூர் எஸ்.பி சீனிவாசன்

பச்சை வண்ண அட்டை வைத்துள்ளவர்கள், திங்கள், வியாழன் அன்றும், நீலவண்ண அட்டை வைத்துள்ளவர்கள் செவ்வாய், வெள்ளி அன்றும், ரோஸ் வண்ண அட்டை வைத்திருப்பவர்கள் புதன், சனிக்கிழமைகளில், காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை வெளியே வந்து அத்தியாவசிய பொருள்களை வாங்கிச் செல்ல வேண்டும். அப்படி வீட்டுக்குப் போகாமல் வெளியில் சும்மா சுற்றித்திரிபவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்படும். அதோடு, கொரோனா விவகாரம் முடிந்த பிறகுதான் அவர்களுடைய வண்டி கொடுக்கப்படும் என்று கறாராகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் மக்களின் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் கொரோனாவின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அதிகாரிகள் மற்றும் போலீஸாரின் தீவிர நடவடிக்கையால் ஒருவருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு