Published:Updated:

`ஒரு நிறுவனத்தில் மட்டுமே ஆண்டுக்கு ரூ.50 கோடி மிச்சப்படுத்தலாம்!’-அரசுக்கு ஜெய்ஆனந்த் சொல்லும் யோசனை

தமிழக அரசு
தமிழக அரசு

கொரோனா காலத்தில் செலவுகளைக் குறைப்பதில் அரசு அக்கறை எடுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், சில யோசனைகளை ஜெய்ஆனந்த் திவாகரன் முன்வைத்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்று உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக மிரட்டிக்கொண்டிருக்கிறது. இந்திய அளவிலும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, பொருளாதார ரீதியாக பல்வேறு தரப்பினரைக் கடுமையாகப் பாதித்துள்ளது. அதனால், தளர்வுகள் அறிவிக்க வேண்டிய கட்டாயம் அரசுகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. மறுபுறம் வரிவருவாய் உள்ளிட்ட வருவாய் குறைந்ததால், செலவுக் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசுகள் எடுத்து வருகின்றன. தமிழக அரசும், அரசு அலுவலர்கள் விமானப் பயணம் ரத்து உள்ளிட்ட சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கொரோனா
கொரோனா
Vikatan

இந்தநிலையில், அரசின் பல்வேறு துறைகளில் பழைய நடைமுறைகளை ஆய்வு செய்து சின்ன மாற்றம் கொண்டுவந்தாலே செலவுகளை பெருமளவு குறைக்க முடியும் என திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் அரசுக்கு சில யோசனைகளை முன்வைத்திருக்கிறார். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய ஜெய்ஆனந்த், ``தமிழக அரசுக்கு இந்தக் கொரோனா காலத்தில் ஏகப்பட்ட நிதி தேவைப்படுகிறது. அதேபோல், கடனும் நிறைய இருக்கிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் புதிதாக நாம் வருவாய் ஈட்டுவது என்பது கடினமான விஷயம். புதிதாக வருவாய் ஈட்டுவதை இரண்டாவதாக வைத்துக்கொண்டு ஏற்கெனவே இருக்கும் சில நடைமுறைகளை சரிபண்ணினால், வரிப்பணத்தை மிச்சம் பண்ணலாம். உதாரணமாக, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் ஏற்றுமதி, இறக்குமதிக்காக தூத்துக்குடி துறைமுகத்தையே பயன்படுத்தி வருகிறது. அதற்கான போக்குவரத்துக்காக அரசு நிறைய செலவழிக்கிறது. அதற்குப் பதிலாக காரைக்கால் துறைமுகத்தைப் பயன்படுத்தினால், ஆண்டுக்கு ரூ.10 கோடி அளவுக்கு செலவைக் குறைக்க முடியும்.

அதேபோல், தமிழ்நாடு மின்சாரவாரியம் நிலக்கரி இறக்குமதிக்கு நெல்லூர் துறைமுகத்தைப் பயன்படுத்துகிறது. பின்னர், நிலக்கரி அங்கிருந்து மேட்டூர் கொண்டுசெல்லப்படுகிறது. அதற்குப் பதிலாக காரைக்கால் துறைமுகத்தைப் பயன்படுத்தினால், மின்சார வாரியத்தால் ஆண்டுக்கு ரூ.50 கோடி சேமிக்க முடியும். ஐந்து ஆண்டுகளில் 250 கோடி ரூபாய் மிச்சமாகும். இப்படி ஒவ்வொரு துறையிலும் பழைய நடைமுறைகளை மாற்றினாலே அரசால் குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க முடியும்.

ஜெய்ஆனந்த்
ஜெய்ஆனந்த்

இப்படி செய்தால் நிதியைச் சேமிக்க முடியும் என்று அதிகாரிகள் குறிப்பிட்ட துறை அமைச்சரிடம் முன்வைத்தால், அதையாரும் நிராகரிக்கப்போவதில்லை. நிச்சயம் கையொப்பமிடுவார்கள். பழைய நடைமுறை, பழைய வழக்கம் அது அப்படியே போய்க்கொண்டு இருக்கட்டும். எதற்காக மாற்றிக்கொண்டு? என நினைத்துக்கொண்டிருப்பதால் நடப்பவை இவை. இப்படி அனைத்துத் துறைகளிலும் இதுபோல் மாற்றுவழி இருக்கிறதா என ஆய்வு செய்து பார்த்தால், வீணாகச் செலவழியும் மக்களின் கோடிக்கணக்கான ரூபாய் வரிப்பணத்தை மிச்சப்படுத்த முடியும். எனவே, அரசு எல்லாத் துறைகளிலும் தனியாக செலவு குறைப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும். தூத்துக்குடி துறைமுகத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் இறக்குமதிக்காக செலவு செய்யும் தொகையையும் பார்த்துவிட்டேன்.

Vikatan

அதேபோல், காரைக்கால் துறைமுகத்தில் ஆகும் செலவையும் கணக்கில் கொண்டால், தூரம் முதல் அனைத்துமே குறையும். போக்குவரத்துக்கும் எளிமையாக இருக்கும். அதேபோல், நெல்லூர் துறைமுகத்தில் ஆகும் செலவையும் காரைக்கால் துறைமுகச் செலவையும் கணக்கிட்டால் பெரிய தொகை மிச்சமாகிறது. துறைமுகத்தில் இருப்பவர்களிடம் பேசிய பிறகே இந்தக் கணக்கீட்டைப் போட்டுப்பார்த்தோம். அதன்பிறகே இந்த முடிவுக்கு வந்தோம். அரசு இதை உடனடியாக அமல்படுத்தினால், நிறைய பணம் மிச்சமாகும். மக்களுடைய வரிப்பணம் வீணாகாமல் இருக்கும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு