Published:Updated:

சாத்தான்குளம்:`இந்தியாவின் ஜார்ஜ் ஃப்ளாய்ட்!’ -ராகுல் காந்தி முதல் தவான் வரை

பென்னிக்ஸ் - ஜெயராஜ்
பென்னிக்ஸ் - ஜெயராஜ்

``சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை. இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்”

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் கூடுதல் நேரம் கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறி, தந்தை ஜெயராஜையும் மகன் பென்னிக்ஸையும் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், இருவரும் கோவில்பட்டி கிளைச்சிறையில் மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. மனித உரிமைகளை மீறி கொடூரமான செயல்களில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்களது குடும்பத்துக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் பலரும் கூறி வருகின்றனர். தற்போது இந்தச் சம்பவம் தேசிய அளவில் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஷ்டேக்கின் கீழ் அரசியல், சினிமா மற்றும் விளையாட்டுத்துறை பிரபலங்கள் பலரும் இருவரின் மரணத்துக்கும் நீதிகேட்டு தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

அதிர்ச்சியில் ஷிகர் தவான் :

கிரிக்கெட் வீரர் தவான், ``தமிழகத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸுக்கு நடந்த கொடூரத்தைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். நாம் அனைவரும் அவர்களின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க நிச்சயமாக குரல்கொடுக்க வேண்டும்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

வைரஸை விடவும் ஆபத்தானவர்கள் :

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், ``சாத்தான்குளத்தில் நடந்த சம்பம் கொடூரமானது. மனிதநேயத்தை அவமதிக்கும் விதமான செயல். குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். பாதிப்படைந்தவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். சில மனிதர்கள் வைரஸை விடவும் ஆபத்தானவர்கள்” என்று கூறியுள்ளார்.

பாதுகாக்க வேண்டியவர்களே ஒடுக்குகிறார்கள் :

ராகுல் காந்தி, ``காவல்துறையினரின் மிருகத்தனம் என்பது கொடூரமான குற்றம். நம்மை பாதுகாக்க வேண்டியவர்கள் நம்மை ஒடுக்குபவர்களாக மாறுவது சோகமான ஒன்று. பாதிப்படைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் ஜார்ஜ் ஃப்ளாய்ட் :

இசையமைப்பாளர் இமான், ``ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொடூரமாக தாக்கப்பட்டதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். முற்றிலும் மனிதாபிமானமற்ற செயல். அவர்கள் அனுபவித்த சித்ரவதைகளை ஜீரணிக்க முடியவில்லை. இரக்கமற்ற இந்தச் செயலுக்காக அனைவரும் குரல் எழுப்புவோம். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இந்தியாவின் ஜார்ஜ் ஃப்ளாய்ட்” என்று கூறியுள்ளார்.

`நோ ஜஸ்டிஸ்.. நோ பீஸ்..’ - காவலரால் கொல்லப்பட்ட கறுப்பினத்தவர்; பற்றியெரியும் அமெரிக்கா

சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை :

நடிகர் ஜெயம்ரவி, ``சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை. இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

`சாத்தான்குளம் சம்பவம் போல இனி நடக்கவே கூடாது!’ - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

நீங்கள் தான் மக்களின் அரசா??

இயக்குநர் பா.இரஞ்சித், ``பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்காமல், மிகக் கொடூரமாக நிகழ்த்தப்பட்டிருக்கும் சாத்தான் குளம் தந்தை, மகன் படுகொலைக்கு அவர்களின் உடல் நலக்குறைபாடுதான் காரணம் என்று அறிக்கை விடுத்து, படுகொலைக்கு காரணமான காவலர்களைக் காப்பதற்கு துணியும் தமிழக அரசே! நீங்கள்தான் மக்களின் அரசா??” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தவறு யார் செய்ததாக இருந்தாலும் அது தவறுதான் :

நடிகை வரலட்சுமி சரத்குமார், ``தவறு யார் செய்ததாக இருந்தாலும் அது தவறுதான். சாத்தான்குளம் காவலர்களின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைகிறேன். பாதிப்படைந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை. அனைத்துக் காவலர்களையும் நாம் குறை சொல்ல முடியாது. ஆனால், இந்த இரண்டு காவலர்களும் தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதியே :

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு, ``ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் வழக்கில் எந்தவித தாமதமும் இன்றி குற்றவாளிகளை தண்டிப்பதை நாம் காண முடியுமா? குற்றவாளிகள் தப்பிக்கக் கூடாது. தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதியே. ஒரு குடும்பம் தங்களுக்கு மிகவும் பிடித்தவர்களை இழந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் :

நடிகை ஹன்சிகா, ``ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது கொடூரமாக காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். காவல்துறையினருக்கும் நாட்டுக்கும் இது அவமானம். குற்றவாளிகள் தப்பித்துவிடக் கூடாது. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்” என்று கூறியுள்ளார்.

சாத்தான்குளத்தின் நடைபெற்ற இந்தச் சம்பத்துக்கு எதிராக நடிகர் சாந்தனு, கிருஷ்ணா, ராகவா லாரன்ஸ், கவுதம் கார்த்திக், மாளவிகா மோகன் உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கிலும் இருந்து வருகிறது.

சாத்தான் குளம் சம்பவம்: `5  நிமிடம், 80 கி.மீட்டர், 20 லட்சம்!'- மிரட்டும் நம்பர்ஸ், மிரளும் போலீஸ்!
அடுத்த கட்டுரைக்கு