Published:Updated:

சாத்தான்குளம்: `பெண் காவலரின் துணிச்சல்...!’ - ஜெயராஜ் குடும்பத்தினர் நெகிழ்ச்சி

ஜெயராஜ் மனைவி, மகள்கள்
ஜெயராஜ் மனைவி, மகள்கள்

”இனிமேல் இப்படியொரு சம்பவம் எங்குமே நடக்கக்கூடாது. கைது செய்யப்பட்டவர்களிடம் முழுமையாக விசாரணை நடத்தி, உச்சபட்ச தண்டனை வழங்கிட வேண்டும்” என ஜெயராஜின் மகள் பெர்சி கூறியுள்ளார்.

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் இவ்வழக்கு குறித்து விசாரணை நடத்திவருகிறார். இதற்கிடையில், இவ்வழக்கு விசாரணையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் அனுமதியுடன் சிபிஐ-க்கு மாற்றியது தமிழகஅரசு. சிபிஐ விசாரணையைக் கையில் எடுக்கும் வரை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், சிபிசிஐடி போலீஸார், 2 எஃப்ஐஆர்களைப் பதிவுசெய்தனர்.

கைது செய்யப்பட்ட எஸ்.ஐ., ரகுகணேஷ்
கைது செய்யப்பட்ட எஸ்.ஐ., ரகுகணேஷ்

12 குழுக்களாகப் பிரிந்து, விசாரணையைக் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் அன்றிரவே கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பேரூரணி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று நள்ளிரவு முதல் காலை வரை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவிஆய்வாளர் பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் கைதுசெய்யபட்டு, பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர். உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் கைதுசெய்யப்பட்டபோதே, சாத்தான்குளத்தில் பொதுமக்கள் வெடிவெடித்து வரவேற்றனர்.

இவ்வழக்கு விசாரணையில், சிபிசிஐடி போலீஸாரின் அதிரடி நடவடிக்கைகளைப் பல தரப்பினரும் வரவேற்றனர். உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்கிஸின் குடும்பத்தினர் சிபிசிஐடி போலீஸாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து ஜெயராஜின் மனைவி செல்வராணியிடம் பேசினோம், “என் கணவர், மகன் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைச்சிருக்கு. இந்த நீதி நிலைக்கணும்” என்றார். ஜெயராஜின் மகள் பெர்சி, “எங்க அப்பா, தம்பிக்கு நடந்த அநீதிகளை நாங்க சொன்னபோது யாரும் நம்பல. இப்போ, தலைமைக்காவலர் ரேவதி அளித்த சாட்சியங்களைக் கேள்விப்படும்போது மனசு வலிக்குது.

தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி அலுவலகம்
தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி அலுவலகம்

ரெண்டு பேரையும் போலீஸார் அடிச்சுக் கொடுமைப்படுத்தியபோது எங்க அப்பா தண்ணீர் கேட்டிருக்காங்க. அதுக்கு, தண்ணீர்கூட போலீஸார் கொடுக்கக்கூடாதுன்னு சொன்னதா ரேவதியின் கணவர் சந்தோஷ் சொல்லியிருக்கிறதைப் பார்க்கும்போது வேதனையா இருக்கு. துணிச்சலா, நடந்ததை நீதிபதி விசாரணையில் சொன்னதை நினைச்சு பெருமைப்படுறேன். ஒரு வீட்ல ஒரு உயிர் பிரிஞ்சு போனாலே தாங்கிக்க முடியாது. ரெண்டு உயிர்களை ஒரே நேரத்துல பறிகொடுத்துட்டு நிர்கதியா நிற்கிறோம்.

சாத்தான்குளம்:`எதிர்காலத்தை நினைத்து பயப்படுகிறேன்' - கதறிய எஸ்ஐ பாலகிருஷ்ணன்

இந்த மாதிரி நிலைமை இனிமேல் எந்தத் தாய்க்கும், சகோதரிக்கும் வரக்கூடாதுன்னுதான், இதில் சம்மந்தப்பட்ட போலீஸ்காரங்க மேல நடவடிக்கை எடுக்கணும்னு உறுதியா இருந்தோம். மதுரை கோர்ட் தானாக இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதுனாலயும், நீதிபதி ‘உங்க கண்ணீருக்கு நீதி கிடைக்கும்’னு உறுதியளிச்சதுனாலயும்தான் ரெண்டு பேரின் உடல்களைப் பெற்றோம். சொன்ன மாதிரியே நீதி கிடைச்சிடுச்சு.

கைது செய்யப்பட்ட ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள்
கைது செய்யப்பட்ட ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள்

சிபிசிஐடி போலீஸார், வழக்கு விசாரணையைக் கையில எடுத்த முதல் நாளிலேயே அதிரடியாக எஸ்ஐ ரகுகணேஷை கைது செஞ்சாங்க. மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்காங்க. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைதுசெய்யணும். அனைவரிடமும் முழுமையா விசாரணை நடத்தப்பட்டு, உச்சபட்ச தண்டனை வழங்கப்படணும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு