Published:Updated:

`நான் மீண்டும் வருவேன் சார்...’ -ரயிலில் சொந்த ஊர் சென்ற ஜார்க்கண்ட் தொழிலாளி உருக்கம்!

ஜார்க்கண்ட் செல்லும் சிறப்பு ரயில்
ஜார்க்கண்ட் செல்லும் சிறப்பு ரயில்

வெளி மாநிலத் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். சிறப்பு ரயில் மூலம் செல்லும்போது ஜார்க்கண்ட் தொழிலாளி ஒருவர் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கண்கலங்கினார்.  

கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை இல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது.

பேருந்தில் அழைத்து வரப்பட்ட தொழிலாளர்கள்
பேருந்தில் அழைத்து வரப்பட்ட தொழிலாளர்கள்

வேலை இல்லாததால் கூலி கிடைக்காமல் உணவுக்குக் கஷ்டப்படும் சூழலில் இருந்த வெளி மாநிலத் தொழிலாளர்களை சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அது தொழிலாளர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், அணு உலைக்கான கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளிலும் ஜார்க்கண்ட் மாநிலத்தவர் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். 

`வயதான தாய் தந்தையைப் பார்க்கச் செல்கிறேன்!' - நெல்லையில் வட மாநிலத் தொழிலாளி நெகிழ்ச்சி

கொரோனா அச்சம் காரணமாக வெளி மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்து பதிவு செய்திருந்தனர். அவர்களுக்காக இன்று (13-ம் தேதி) சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அதில் 1,420 தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் கூறுகையில், ``மாவட்ட நிர்வாகம் சார்பாக பீகார் மாநிலத் தொழிலாளர்கள் 1,332 பேர் சிறப்பு ரயில் மூலம் ஏற்கெனவே சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

தொழிலாளர்களை அழைத்து வந்த பேருந்து
தொழிலாளர்களை அழைத்து வந்த பேருந்து

இந்த நிலையில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 1,420 பேர் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு இன்று சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். கூடங்குளம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் இருந்து மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர் பேருந்து மூலம் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அழைத்து வரப்பட்டு ரயிலில் ஏற்றி விடப்பட்டனர்.

தற்போது அவர்களுக்கான ரயில் கட்டணத்தை தமிழக அரசே ஏற்றுக்கொள்கிறது. ரயிலில் முட்டல், மோதல் இல்லாமல் செல்ல முடியும். அவர்களுக்கான சாப்பாடு, குடிநீர் ஆகியவை இலவசமாக விநியோகிக்கப்படுகிறது.

காவல்துறை துணை ஆணையர் சரவணன்
காவல்துறை துணை ஆணையர் சரவணன்

இங்கு பணியாற்றும் 95 சதவிகிதம் பேர் திருமணமாகாத இளைஞர்கள். அதனால் கொரோனா காலத்தில் தங்களின் பெற்றோருக்கு உதவியாக இருக்க உடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தங்களைப் பற்றி பெற்றோர் கவலைப்படுவார்களே என்கிற எண்ணத்தால் சொந்த ஊருக்குச் செல்கிறார்கள்.

நெல்லையில் இருந்து ஜார்க்கண்ட் செல்லும் இளைஞர்கள் அனைவரும் அரசின் உதவியைப் பாராட்டுகிறார்கள். சிறப்பு ரயிலின் மூலம் கூட்ட நெரிசல் ஏதுமின்றி தங்களுடைய சொந்த ஊருக்குச் செல்லக் கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்புக்காக மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.

உணவு தண்ணீர் பாட்டில் பெறும் தொழிலாளி
உணவு தண்ணீர் பாட்டில் பெறும் தொழிலாளி

தமிழகத்தில் அவர்களுக்கு இதுவரை கிடைத்த உதவியும் தற்போது கிடைத்திருக்கும் உதவியும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் என்னிடம் பேசிய இளைஞர்கள் பலரும் `தன்யவாத் சார்.. மே வாபஸ் ஆவுங்கா’ (நன்றி சார்.. நான் மீண்டும் வருவேன்) என்று உருக்கமாகவும் கண்ணீருடனும் தெரிவித்தார்கள். அவர்களின் அந்த வார்த்தைகளே மாவட்ட நிர்வாகத்தின் வெற்றியாகக் கருதுகிறேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு