Published:Updated:

`சென்னை மக்களின் தாகம் தீர்த்த ஜோலார்பேட்டை!’ -ரயிலில் தண்ணீர் கொண்டுசெல்லும் திட்டம் நிறுத்தம்

ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்குத் தண்ணீர் கொண்டுசெல்லும் திட்டம், இன்றுடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் கொண்டுசெல்லும் ரயில்
தண்ணீர் கொண்டுசெல்லும் ரயில்

சென்னையில் ஏற்பட்ட கடும் தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் காவிரி உபரி நீரைக் கொண்டுசெல்வதற்காகத் தமிழக அரசு ரூ.65 கோடியை ஒதுக்கியது. கடந்த ஜூலை 12-ம் தேதி முதல் தலா 50 வேகன்கள் கொண்ட இரண்டு ரயில்களில் நீர் நிரப்பப்பட்டு சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. 

வேகனில் நிரப்பப்படும் நீர்
வேகனில் நிரப்பப்படும் நீர்

தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் நான்கு நடையாகக் கொண்டு செல்லப்பட்டன. அதாவது, ஒரு வேகனில் (டேங்க்) 55,000 லிட்டர் தண்ணீர் நிரப்பலாம். அப்படியெனில், ஒரு நடைக்கு ஒரு ரயிலில் இரண்டரை மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டது.

`சென்னைக்கு நாளையிலிருந்து ரயில் மூலம் தண்ணீர்!’ -ஜோலார்பேட்டையில் சோதனை ஓட்டம்

இதற்காக ரயில்வேக்கு, தமிழக அரசு கோடிக்கணக்கான ரூபாயைக் கட்டணமாகச் செலுத்தியது. ஜோலார்பேட்டையிலிருந்து வில்லிவாக்கம் ரயில் நிலையம் கொண்டு செல்லப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீருக்கு 34 பைசா என்று கணக்கிட்டு, ஒரு நடைக்கு 8 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையைக் கட்டணமாக அரசு செலுத்தியது. 

தண்ணீர் ரயில்
தண்ணீர் ரயில்

வில்லிவாக்கத்திலிருந்து குழாய் மூலம் அந்தத் தண்ணீர் கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையம் கொண்டு செல்லப்பட்டு லாரி மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுவந்தது. ஜூலை 12-ம் தேதி முதல் இன்று வரை 159 முறை ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. 

அதன் மூலம், சுமார் 39.25 கோடி லிட்டர், அதாவது 400 மில்லியன் லிட்டர் அளவுக்குத் தண்ணீர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சென்னைக்குத் தண்ணீர் கொண்டுசெல்லும் திட்டம் இன்றுடன் (8-ம் தேதி) நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்
ரயில்

பருவமழை தொடங்க உள்ளதாலும், சென்னைக்கு நீர் ஆதாரமாக உள்ள ஏரிகளில் நீர் இருப்பதாலும் தண்ணீர்ப் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் திட்டம் நிறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.