Published:Updated:

`என்னுடைய நேர்மையை இந்த உலகறியும்!' -கரு.நாகராஜன் பேச்சால் கொதிக்கும் ஜோதிமணி எம்.பி

ஜோதிமணி
ஜோதிமணி

ஊடக விவாதங்களில் பா.ஜ.க-வினர் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்ளும்போக்கு அதிகரித்துவருகிறது. பெண் என்றால் கூடுதலாக ஓர் ஆபாச அணுகுமுறையை வைத்திருக்கிறார்கள். இது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் பங்கேற்ற கரூர் எம்.பி ஜோதிமணி மீது, பா.ஜ.க நிர்வாகி கரு.நாகராஜன் ஒருமையில் பேசிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், விவாத நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறிய ஜோதிமணி, தன்மீதான தாக்குதல் குறித்து அவரது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளார்.

ஜோதிமணி மக்களுடன்..
ஜோதிமணி மக்களுடன்..
நா.ராஜமுருகன்

கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில், `நண்பர்களுக்கு வணக்கம். இன்று ( 18/05/2020 ) நியூஸ் 7 தமிழின் கேள்விநேரம் விவாதத்தில் இருந்து, பா.ஜ.க-வின் கரு.நாகராஜன் என்கிற மனிதரின் தரம்கெட்ட பேச்சால் வெளியேறினேன். புலம்பெயர் தொழிலாளர்களின் வேதனையைப் பட்டியலிட்டு, அரசு செய்தது என்ன? என்று கேள்வி எழுப்பினேன்.

`இன்னும் 10 நாளில் சாந்திக்கு பிரசவம்!' - முதல்வரிடம் உதவிகேட்டு கோரிக்கை வைத்த ஜோதிமணி எம்.பி

தொடர்ந்து, 45 நாள்களாக களத்தில் நிவாரணப் பணியில் இருந்து, மக்களின் பசியை, வறுமையை, கண்ணீரை, வேதனையை, வலியை பக்கத்தில் இருந்து பார்ப்பதால், கடந்த சில தினங்களாக மக்களின் வேதனையை ஊடகங்களின் வழியே வெளிப்படுத்தி வருகிறேன்.

ஜோதிமணி
ஜோதிமணி

நான் கூறும் கசப்பான உண்மையை எதிர்கொள்ள பா.ஜ.க-வினரால் முடியவில்லை. கரு.நாகராஜன் என்னை மிகத் தரக்குறைவாக, மலிவான வார்த்தைகளில் ஒருமையில் விமர்சிக்கத் தொடங்கினார். நான் தொடர்ந்து அந்த விவாதத்தில் பங்கேற்க விரும்பாமல், எனது கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்துவிட்டு வெளியேறினேன். தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். ஊடக விவாதங்களில் பா.ஜ.க-வினர் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்ளும் போக்கு நாளுக்குநாள் அதிகரிக்கிறது. ஊடகங்களையும் நெறியாளர்களையும் எதிர்க்கட்சிகளையும் மிரட்டியே பணிய வைக்கலாம் என்று எண்ணுகின்றனர்.

பெண் என்றால் கூடுதலாக ஒரு ஆபாச அணுகுமுறை. இது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஊடகங்களும் பா.ஜ.க-வின் இந்தப் போக்கை அனுமதிக்கக்கூடாது. பா.ஜ.க என்னிடம் இப்படி ஆபாசமாக நடந்துகொள்வது முதல்முறையல்ல. இதற்கு முன்பும் இதேபோல பணமதிப்பிழப்பு விவகாரத்தில் விமர்சித்தேன் என்பதால் என்னை ஒரு ஆபாச வாட்ஸ்அப் குழுவில் இணைத்து என்னை அசிங்கப்படுத்த முயன்றார்கள். இதில் அசிங்கப்படவேண்டியது பி.ஜே.பி-தான் என்று வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷாட்டுகளைப் பொதுவெளியில் வெளியிட்டேன். தமிழகமே அதிர்ந்தது #IStandwithjothimani லட்சக்கணக்கானவர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது.

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

அந்த வழக்கு இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு பெண்ணை, அவருடைய கேரக்டரை சிதைப்பதன் மூலம், பொதுவெளியில் இருந்து வெளியேற்றிவிடலாம் என்று பி.ஜே.பி நினைக்குமானால், அவர்களின் ஆபாச அரசியல் என்னிடம் வெற்றியடையாது. என்போன்ற பெண்கள் முறத்தால் புலி விரட்டிய வீரத்தமிழச்சியின் அம்சம். `நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்' கொண்ட பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் வம்சம்.

நான் களத்தில் இருந்து நேர்மையோடும், அன்போடும், கண்ணியத்துடனும் அரசியல்செய்ய வந்தவள். ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் 25 ஆண்டுகளாக கரடுமுரடான பாதையைக் கடந்து நாடாளுமன்றத்தில் கால் பதித்தவள். எனது நேர்மையை இந்த உலகறியும். அதனால்தான், எனது கரூர் தொகுதி மக்கள் எனது தேர்தலை தாங்களே களம் கண்டதாகக் கொண்டாடினார்கள். எனது வெற்றி தங்கள் குடும்பத்துப் பெண்ணொருத்தியின் வெற்றியெனெ 4,20,000 வாக்கு வித்தியாசத்தில் மகத்தான் வெற்றியை அளித்தார்கள். இந்த வெற்றி எனது வெற்றியல்ல. சாமான்ய மக்களின் வெற்றி என்பதை நான் உணர்ந்துள்ளேன்.

ஜோதிமணி
ஜோதிமணி
நா.ராஜமுருகன்

பொதுவாழ்வை உண்மை, நேர்மை, அன்பின் வழியே ஒரு தவமென வாழ்கிறேன். இதை உலகறியும். இம்மாதிரியான விமர்சனங்களினால் பெண்களை முடக்கிவிட முடியும் என நினைக்கும் பி.ஜே.பி-தான் முடங்கிப்போகும். இன்றைய விவாதத்தின் தரத்தை கரு.நாகராஜன் சிதைத்த பிறகும் அவரை நியூஸ் 7 தமிழ் பேச அனுமதித்தது அதிர்ச்சியளிக்கிறது. நாகரிக அரசியலை கற்றுக்கொள்ளாதவரை, பா.ஜ.க-வினர் கலந்துகொள்ளும் எந்த விவாதங்களிலும் நான் கலந்துகொள்ளப் போவதில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக விளக்கம் பெற கரு.நாகராஜனைத் தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. அவர் விளக்கம் அளித்தால், உரிய பரிசீலனைக்குப் பிறகு பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு