Published:Updated:

`எளிய மக்களின் அலுவலகம் இது!' - தொழிலாளிகளை கொண்டு திறக்க வைத்த ஜோதிமணி நெகிழ்ச்சி

அலுவலகத்தைத் திறந்த தொழிலாளர்கள்
அலுவலகத்தைத் திறந்த தொழிலாளர்கள் ( நா.ராஜமுருகன் )

ஜோதிமணி கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் தனது அலுவலகத்தைத் திறந்தார். பட்டியலினத்தைச் சேர்ந்த காலணி தைக்கும் தொழிலாளர்களான ராமச்சந்திரன், தமிழ்செல்வன் என்ற இரு தொழிலாளர்களை வைத்து அலுவலகத்தைத் திறக்க வைத்தது, நெகிழ்வான நிகழ்வாக மாறியிருக்கிறது.

கரூரில் திறக்கப்பட்ட தனது எம்.பி அலுவலகத்தை இரண்டு காலணி தைக்கும் தொழிலாளிகளை வைத்து திறக்க வைத்த ஜோதிமணி, `எளிய மக்களின் அலுவலகமாக எனது அலுவலகம் இருக்கவே இப்படி எளிய தொழிலாளிகளை வைத்து அலுவலகத்தைத் திறக்க வைத்தேன்' என்று பேசி, அந்தத் தொழிலாளிகளை நெகிழ வைத்திருக்கிறார்.

அலுவலகத்தைத் திறந்த தொழிலாளர்கள்
அலுவலகத்தைத் திறந்த தொழிலாளர்கள்
நா.ராஜமுருகன்

கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருப்பவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி. இவர் தனது தேர்தல் வாக்குறுதியில், `என்னை ஜெயிக்க வைத்தால், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு எம்.பி அலுவலகத்தைத் திறந்து மக்களின் குறைகளைப் போக்குவேன்' என்று தெரிவித்திருந்தார். ஆனால், கரூரில் கூட அலுவலகம் இல்லாமல் இருந்தது. இதைச் சில சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியது சமூக வலைதளங்களில் பரபரப்பானது. இதனால், ஜோதிமணி கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் தனது அலுவலகத்தைத் திறந்தார்.

 ஜோதிமணி அலுவலகம்
ஜோதிமணி அலுவலகம்
நா.ராஜமுருகன்

பட்டியலினத்தைச் சேர்ந்த காலணி தைக்கும் தொழிலாளர்களான ராமச்சந்திரன், தமிழ்செல்வன் என்ற இரு தொழிலாளர்களை வைத்து அலுவலகத்தைத் திறக்க வைத்தது, நெகிழ்வான நிகழ்வாக மாறியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி, தி.மு.க மாநில நெசவாளர் அணித்தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்ட, மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அலுவலகம் திறப்பு நிகழ்வுக்குப் பிறகு, செய்தியாளரிடம் பேசிய ஜோதிமணி, ``எளிய மக்களின் அலுவலகமாக எம்.பி அலுவலகம் இருக்க வேண்டும் என்பதற்காக, காலணி தைக்கும் தொழிலாளர்களை வைத்து, எனது அலுவலகத்தைத் திறந்து வைத்தேன். காவிரி ஆறு பாயும் மாவட்டங்களான கருர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க மறுத்த அ.தி.மு.க அரசுக்குக் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். விவசாயிகளின் தொடர் போராட்டத்தை அடுத்தும், சட்டமன்றத் தேர்தலைக் கணக்கில் கொண்டும் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலத்தை முதல்வர் அறிவித்துள்ளார்.

அலுவலகத்தைத் திறந்த தொழிலாளர்கள்
அலுவலகத்தைத் திறந்த தொழிலாளர்கள்
நா.ராஜமுருகன்

தம்மை, 'விவசாயி' எனக் கூறிக்கொள்ளும் தமிழக முதலமைச்சரும் அமைச்சர்களும் விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் வகையில், இந்த மூன்று மாவட்டங்களைப் புறக்கணித்து வருகின்றனர். 'விவசாயிகளின் பாதுகாவலன்' எனத் தெரிவித்து வரும் இந்த அரசு, மாறாக கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதால், கள்ள மௌனம் சாதித்து வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதைச் சட்டப்படி எதிர்கொண்டு வெற்றிபெறுவேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு