Published:Updated:

கரூர்: `இரண்டு சம்பவங்கள்; எனது பணியைத் தடுக்கும் அமைச்சர்!' - கொதிக்கும் ஜோதிமணி

தர்ணா போராட்டத்தில் ஜோதிமணி
தர்ணா போராட்டத்தில் ஜோதிமணி ( நா.ராஜமுருகன் )

இவ்விரு தடை சம்பவங்களுக்குப் பின்னால், தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருக்கிறாரா என்ற ஐயம் எழுந்துள்ளது. எம்.பி நிதியில் பணிகள் நடைபெற்றால், தனக்கு பெயர் கிடைக்காமல் போய்விடுமே என்று பயந்து எனக்கு எதிராகச் செயல்பட வைத்திருப்பதாகவே நினைக்க வேண்டியுள்ளது.

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியின் கீழ் புதிய பணிகளைத் தொடங்குவதற்கு, கரூர் நகராட்சி ஆணையர் சுதா முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி, கரூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று கரூர் எம்.பி ஜோதிமணி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது, பரபரப்புக்கு வித்திட்டது.

தர்ணா போராட்டத்தில் ஜோதிமணி
தர்ணா போராட்டத்தில் ஜோதிமணி
நா.ராஜமுருகன்

தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய கரூர் எம்.பி ஜோதிமணி,

"கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியின் கீழ், கரூர் மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. விறுவிறுப்பாகப் பணிகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கரூர் நகராட்சியில் இருக்கும் ஜமீலா தெரு உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளைச் செய்ய எம்.பி என்ற முறையில் நிதியை ஒதுக்கியிருக்கிறேன்.

தர்ணா போராட்டத்தில் ஜோதிமணி
தர்ணா போராட்டத்தில் ஜோதிமணி
நா.ராஜமுருகன்

அந்தப் பணிகளைத் தொடங்குவதற்கான கரூர் நகராட்சி ஆணையர் சுதா அவர்களிடம் ஒப்புதல் கேட்டு, கடந்த மார்ச் மாதம் முதல் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். ஆனால் அவர், கடந்த மூன்று மாதங்களாகப் பணிகள் தொடங்குவதற்கு எவ்வித ஒத்துழைப்பையும் வழங்காமல் முட்டுக்கட்டை போட்டு வருவதால், அவர் அலுவலகத்தில் அமர்ந்து இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டேன்.

மேலும், அந்தப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கும்வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவேன். ஆணையர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்துகொள்கிறார். ஏற்கெனவே, இதேபோல், ஆண்டான்கோயில் கீழ்பாகம் பகுதியில் கழிப்பிடம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்துதரக்கோரி, ஊராட்சி நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு இன்னும் பதில் வரவில்லை. அதோடு அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார்கள். ஏனென்றால், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரின் சகோதரர் ஊராட்சிமன்ற தலைவராக உள்ள இப்பகுதியில் தேர்வு செய்யப்பட்ட இடம், வாய்க்கால் வாரி புறம்போக்கு என ஆட்சேபனை தெரிவித்து, இப்போது எனக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தர்ணா போராட்டத்தில் ஜோதிமணி
தர்ணா போராட்டத்தில் ஜோதிமணி
நா.ராஜமுருகன்

எனவே, இவ்விரு தடை சம்பவங்களுக்குப் பின்னால், தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருக்கிறாரா என்ற ஐயம் எழுந்துள்ளது. எம்.பி நிதியில் அந்தப் பணிகள் நடைபெற்றால், தனக்கு பெயர் கிடைக்காமல் போய்விடுமே என்று பயந்து ஆணையரையும், தன் தம்பியையும் தடுத்து, எனக்கு எதிராகச் செயல்பட வைத்திருப்பதாகவே நினைக்க வேண்டியுள்ளது. மக்கள் பணியாற்றுவதற்கு தடைபோட இவர்கள் யார்?" என்றார் ஆக்ரோஷமாக!

அடுத்த கட்டுரைக்கு