Published:Updated:

`குளத்தில் தண்ணீரில்லை... தாமரைதான் இருக்கிறது!’ புகாரளித்த மக்கள் - களத்தில் இறங்கிய விகடன்!

ஆகாயத்தாமரை படர்ந்து காட்சியளிக்கும் குளம்
News
ஆகாயத்தாமரை படர்ந்து காட்சியளிக்கும் குளம்

நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருப்பதாக ஒரு பக்கம் விவாதம் நடக்க, இன்னொரு பக்கம் இருக்கும் நீர்நிலைகளையும் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கருத்தும் பரவலாக முன்வைக்கப்படுகிறது.

`044 - 66802929' என்ற `ஜூ.வி ஆக்‌ஷன் செல்’-ன் எண்ணில் வாசகர்கள், பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும் பிரச்னைகளையும் தெரிவிக்கலாம். அப்படிப் பெறப்படும் தகவல்களில் முக்கியமான விஷயங்கள், மக்கள் பிரச்னைகள் தொடர்பாக, விகடன்குழு உடனடியாகக் களத்திலிறங்கி அரசு இயந்திரங்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்வு காணும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில், சென்னை முகவலிவாக்கத்தைச் சேர்ந்த நாராயணன் என்ற வாசகர், நீர்நிலை குறித்த பிரச்னை ஒன்றை நம்மிடம் தெரிவித்திருந்தார்.

ஆலந்தூர் மண்டலம், முகலிவாக்கம்
ஆலந்தூர் மண்டலம், முகலிவாக்கம்

நாராயணனின் புகார் தொடர்பாக நாம் அவரைத் தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசியவர், ``சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்தில், முகலிவாக்கம் பகுதியில் மதனந்தபுரம் என்றொரு ஏரியா இருக்கிறது. அங்கிருக்கும் ஒத்தவாடைத் தெருவின் கடைசிப் பகுதியில், கொலப்பாக்கம் செல்லும் வழியில் பெரிய குளம் ஒன்று இருக்கிறது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளைப் பற்றிப் பேசும் நாம், இருக்கும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் கோட்டைவிட்டுவிடுகிறோம். அந்த வகையில்தான், அந்தக் குளமும் கேட்பாரற்றுக் கிடக்கிறது. குளத்தில் தண்ணீரே தெரியாத வகையில் முழுக்க ஆகாயத் தாமரைகள் படர்ந்திருக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஒத்தவாடைத் தெரு குளம்
ஒத்தவாடைத் தெரு குளம்

குளத்தைச் சுற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்து கிடக்கிறது. மாலை நேரங்களில் குளத்தருகே அழகான இயற்கைக் காற்றைச் சுவாசிக்கப் பலர் வந்து செல்கிறார்கள். பராமரிப்பின்றி கிடப்பதால் மக்களால் வெகுநேரம் அங்கு இருக்க முடியவில்லை. முகலிவாக்கம் பகுதியில் சுமார் 12 பூங்காக்கள் இருக்கின்றன.

அனைத்தையும் சென்னை மாநகராட்சி அழகாகப் பராமரித்துவருகிறது. அதேபோல, இந்தக் குளத்தையும் சுத்தப்படுத்தி, ஆகாயத் தாமரைகளை அகற்றி, தூர்வாரி, சுற்றுச் சுவரையும் சீரமைத்து, காலையில் வாக்கிங் செல்பவர்களுக்கு ஏதுவாக குளத்தைச் சுற்றிப் பாதை அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும். மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால், விகடனிடம் சொல்லி முறையிடுகிறேன்" என்றார்.

மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை
மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை

நாராயணன் பேசியதைவைத்து உடனடியாக விகடன் டீம் களத்தில் இறங்கியது. அந்தப் பகுதிக்கு நேரடியாகச் சென்று குளத்தைப் பலவிதங்களில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். இறுதியாக இது பற்றி விளக்கம் கேட்கவும், பிரச்னை குறித்துப் புகாரளிக்கவும் சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டல அலுவலர் பி.வி.சீனிவாசனைத் தொடர்புகொண்டோம். விஷயத்தைப் பொறுமையாகக் கேட்டவர், ``மழை மீட்புப் பணிகளில் தீவிரம் காட்டியதால், அதை கவனிக்க முடியவில்லை. மழை முடிந்துவிட்டதாகத் தெரிகிறது. அந்த குளம் தொடர்பான பிரச்னை மீது கவனம் செலுத்தவிருக்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாங்கள் தொடர்ச்சியாகக் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கிறோம். இத்தனை நாள்களாக இவ்வளவு ஆகாயத்தாமரைகள் இருக்கவில்லை. சமீபத்தில் பெய்த மழைக்கு ஒரே வாரத்தில் அதிகமாகிவிட்டது. ஆகாயத்தாமரையின் வளர்ச்சி பயங்கர வேகமாக இருக்கும். அகற்றினாலும் சில சமயங்களில் மீண்டும் உருவாகும் என்பதால் அவற்றை அகற்றுவது என்பது தொடர்ச்சியான பணி. இரண்டு, மூன்று நாள்களில் ஆகாயத்தாமரைகளை அகற்றிவிடுவோம்.

இடிந்துகிடக்கும் சுற்றுச்சுவர்
இடிந்துகிடக்கும் சுற்றுச்சுவர்

மற்றபடி, குளத்தைச் சீரமைக்கவும், தூர்வாரவும், சுற்றுச்சுவர் கட்டவும் எஸ்டிமேட் எல்லாம் போட்டுவிட்டோம். மாநகராட்சி உயரதிகாரிகளும் வந்து பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒதுக்கும் சி.எஸ்.ஆர் நிதியையோ, ஸ்பான்ஸர்ஷிப்பையோ எதிர்பார்க்கிறோம். கிடைக்கவில்லைய்ர்ன்றால், மாநகராட்சி நிதியைக்கொண்டே விரைவில் சீரமைத்துவிடுவோம்” என்றார் நம்மிடம் உறுதியாக.

நாமும் கண்காணித்தபடியே இருப்போம்..!