Published:Updated:

மகனின் முகம்காண பட்டினி கிடக்கும் தாய் கலா - சாப்பாடு ஊட்டிவிட்ட திருநங்கைகள்! #prayforsurjeeth

சுர்ஜித்தின் தாய்
சுர்ஜித்தின் தாய்

சுர்ஜித் வில்சனின் தாய் அந்த நல்ல செய்திக்காக நான்கு நாட்களாக பட்டினிக்கிடந்து வருகிறார். அவருக்குத் திருநங்கைகள் சாதம் ஊட்டி விட்டு ஆறுதல் கூறினர்.

“சுர்ஜித் வில்சன் உயிர் பிழைத்து விட்டான்” என்கிற வார்த்தையைக் கேட்பதற்காக ஒட்டுமொத்த தேசமும் கடந்த மூன்று நாட்களாகத் தவம் கிடக்கிறது.

கடந்த 25ம் தேதி மாலை 5.30 மணியளவில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியபோது துவங்கிய மீட்புப் பணிகள் கடந்த 76 மணி நேரங்களுக்கும் மேலாகத் தொடர்கிறது. சுர்ஜித் வில்சனுக்காக தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் தொடர்ந்து வருகிறது.

மீட்பு பணி
மீட்பு பணி

மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். சிறுவனை மீட்கும்பணியில் தீயணைப்புப் படையினர், வருவாய்த் துறையினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் பிரத்தியேக இயந்திரங்கள் கொண்டு முயற்சிகள் எடுத்து வருகின்றன. தேசிய மீட்புப் படையினரும் முயன்றனர்.

தற்போது குழந்தை சுர்ஜித் வில்சன் 88 அடி ஆழத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இன்று காலை ரிக் இயந்திரத்தால் 40 அடி வரை குழி தோண்டப்பட்டது. இதனையடுத்து கடினமான பாறைகள் இருந்ததாலும், ரிக் இயந்திரம் பழுது காரணமாக, துளையிடும் பணி தாமதமானது. சட்டென இயந்திரத்தை மாற்றிவிட்டு வழக்கமாக போர்வெல் போடப் பயன்படுத்தப்படும் எந்திரம் மூலம் அந்த குழியின் உள்ளே நான்கு துளைகள் இடப்பட்டது.

மீட்புப் பணியில் அமைச்சர் விஜய பாஸ்கர்
மீட்புப் பணியில் அமைச்சர் விஜய பாஸ்கர்

அதனையடுத்து மீண்டும் எந்திரங்கள் மூலம் குழிப்போடும் பணி தீவிரமடைந்துள்ளது. மேலும் கடினமான பாறை பகுதி தாண்டி மணல் பாறைகள் உள்ள பகுதி தற்போது தென்பட்டுள்ளது. அதனால் குழி பறிப்பது இலகுவாக உள்ளது. அந்த வகையில் தற்போது 63 அடி ஆழம் குழிதோண்டப்பட்டுள்ளதாக மீட்புப்பணி குழு அறிவித்துள்ளது. இருப்பினும் சுர்ஜித் வில்சன் சிக்கியுள்ள ஆழ்துளைக் கிணற்று பகுதிக்கு, பக்கவாட்டு பகுதிகளில் துளையிட்டுச் செல்வது கொஞ்சம் சிரமமாகவே இருக்கும். அப்பகுதியில் அவ்வப்போது பெய்துவரும் மழை காரணமாக மீட்புப் பணிகள் தாமதமாகி வருகிறது.

சுர்ஜித் மீட்புப் பணி
சுர்ஜித் மீட்புப் பணி

மீட்புப் பணிக்காக தமிழக அமைச்சர்கள் டாக்டர். விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், அமைச்சர் வளர்மதி, வருவாய் துறை கூடுதல் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே இருந்து மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்கள். கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடந்த மூன்று நாட்களாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரோடு தங்கியிருந்து ஆறுதல் கூறியிருக்கிறார்.

தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எம்பிக்கள் ரவீந்திரநாத்குமார், ரத்தினவேலு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், த.மா.கா தலைவர் ஜி கே வாசன், உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வருகையால் மீட்புப் பணி நடக்கும் பகுதி மேலும் பரபரப்பானது. பல்வேறு தரப்பினரும் வந்து மீட்புப் பணியை பார்வையிடுவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

சுர்ஜித்தின் தாய்
சுர்ஜித்தின் தாய்

இந்நிலையில் சுர்ஜித் வில்சனின் தாய் கலாமேரி மகன் குறித்த நல்ல தகவலுக்காக கடந்த 4 நாட்களாக தவித்து வருகிறார்.

சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தகவலறிந்து அவரைக் காப்பாற்ற முயன்ற கலாமேரி, மகனைக் காப்பாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தார். இந்நிலையில் சுர்ஜித் மிக ஆழமான பகுதிக்கு சென்றதால் பல்வேறு குழுவினர் மீட்புப் பணிகளை செய்து வருகின்றனர். அதனால் அவரின் வீட்டில் இருந்தபடியே தனது மகனைக் காப்பாற்ற தெய்வங்களை வணங்கி வருகிறார்.

சுர்ஜித் வில்சனின் தாய்
சுர்ஜித் வில்சனின் தாய்

கடந்த 4நாட்களாக சாப்பிடாமல் இருக்கும் அவரைப் பலரும் சமாதானப்படுத்தி சாப்பிட வற்புத்தினாலும், தண்ணீரை மட்டுமே குடித்து பசியாறி வருகிறார். இந்நிலையில் இன்று மதியம் திருச்சியைச் சேர்ந்த கஜோல் தலைமையிலான திருநங்கைகள், சுர்ஜித் வில்சனின் தாயை சந்தித்து ஆறுதல் கூறினர்.

அப்போது அவர்கள் எங்களுக்கு வாய்ப்பு வழங்கினால் கூட குழியில் இறங்கி சுர்ஜித்தை காப்பாற்றுவோம். அது எங்களுக்குக் கிடைத்த பாக்கியமாக இருக்கும். நீங்கள் சாப்பிடாமல் இருக்காதீங்க. சுர்ஜித் எங்களுக்கும் தம்பிதான். எங்கள் வீட்டில் ஒருவன், தயவு செய்து சாப்பிடுங்கள் எனத் தொடர்ந்து வலியுறுத்தினர். அவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க கலாமேரி, ஒரு வாய் சாதத்தை விழுங்கியதுடன் போதும் என மறுத்தார்.

தொடர்ந்து அங்கிருந்த படியே சுர்ஜித் நல்லமுறையில் மீட்கப் படுவதற்கு வழிபாடு செய்த திருநங்கைகள், கலாமேரியை, “ஒரு வாய் சாப்பிட வைத்தோம்” என்ற சந்தோஷத்தில் கிளம்பிச் சென்றனர். மகனின் முகம் பார்க்காமல் சாப்பிட மாட்டேன் என உருகும் கலாமேரியின் பாசப்போராட்டம் அப்பகுதி மக்களை உருக வைக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு