Published:Updated:

`என் மகளை எப்படித் தேற்றுவதென்றே தெரியவில்லை!' - கலங்கும் எஸ்.எஸ்.ஐ வில்சனின் மனைவி

`இந்தப் பேரிழப்பை எங்களால் தாங்க முடியவில்லை. வீட்டை நீ கவனித்துக்கொள் எனக்கூறிவிட்டு முழுவதும் காவல்துறைப் பணிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் என் கணவர்'.

கலங்கி நிற்கும் எஸ்.எஸ்.ஐ வில்சன் குடும்பம்
கலங்கி நிற்கும் எஸ்.எஸ்.ஐ வில்சன் குடும்பம்

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்திற்குச் செல்லும் பெரிய சாலைகள் மற்றும் சிறிய சாலைகளிலும் செக்போஸ்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 36 சோதனைச் சாவடிகளில் ஒரு சில சோதனைச் சாவடிகளில் மட்டுமே இரண்டு காவலர்கள் ஒரே நேரத்தில் பணி அமர்த்தப்படுவார்கள். மற்றபடி பெரும்பாலான சோதனைச் சாவடிகளில் ஒரு காவலர் மட்டுமே பணியில் அமர்த்தப்படுவார்கள். பணியில் இருக்கும் காவலர்களுக்குத் துப்பாக்கி வழங்குவதும் இல்லை. இந்தநிலையில்தான் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தமிழக, கேரள போலீஸார் கூட்டாகக் கொலையாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எஸ்.எஸ்.ஐ வில்சன்
எஸ்.எஸ்.ஐ வில்சன்

இந்தநிலையில் எஸ்.எஸ்.ஐ.வில்சன் குறித்து உருக்கமான தகவல்களை உறவினர்கள் கூறியுள்ளனர். வில்சன் குறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், ``வில்சன் பள்ளி படிக்கும் காலத்திலேயே விளையாட்டுகளில் அதிக ஆர்வம் செலுத்துவார். ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடிக்கும் வில்சன், 1993 ஆம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் (sports quota) தமிழகக் காவல்துறையில் இணைந்தார். 2019 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியரிடமிருந்து சிறந்த சேவைக்கான விருது பெற்றார்.

கடந்த நவம்பர் மாதம் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. அதில், அவருடைய காலில் முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து இரண்டு மாதம் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டார். மருத்துவ விடுப்பிற்குப் பிறகு கடந்த ஜனவரி 1-ம் தேதி மீண்டும் பணியில் இணைந்தார். விபத்து காரணமாக நாகர்கோவில் ஆயுதப்படையிலிருந்து களியக்காவிளை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு சுழற்சி முறையில் கேரள எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில்தான் கடந்த 8-ம் தேதி இரவு தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத சமயத்தில் சாதாரண மக்கள் நடமாடுவதற்கே அச்சமாக உள்ளது” என்றனர்.

போலீஸ் எஸ்.எஸ்.ஐ. வில்சனின் மனைவி மற்றும் பிள்ளைகள்
போலீஸ் எஸ்.எஸ்.ஐ. வில்சனின் மனைவி மற்றும் பிள்ளைகள்

தீவிரவாதிகள் தாக்குதலால் மரணமடைந்த எஸ்.எஸ்.ஐ. வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி கூறுகையில், ``இந்தப் பேரிழப்பை எங்களால் தாங்க முடியவில்லை. வீட்டை நீ கவனித்துக்கொள் எனக்கூறிவிட்டு முழுவதும் காவல்துறைப் பணிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் என் கணவர். கணவர் இல்லாததால் எங்கள் குடும்பமே நிர்கதியாய் நிற்கிறது. கற்றல் குறைபாடு உள்ள எனது இளைய மகள் எப்போதும் அப்பா என அழைத்தபடி அழுதுகொண்டே இருக்கிறாள். அவர் இறந்து மூன்று நாள்கள் ஆனபிறகும் சோகம் மாறாமல் இருக்கும் மகளை எப்படித் தேற்றுவது எனத் தெரியவில்லை. அவளது எதிர்காலம் குறித்து கவலையாக உள்ளது” என்றார் கண்ணீரோடு.