Published:Updated:

`அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் கல்லத்திகுளம் மக்கள்!' - நடவடிக்கை எடுக்குமா அரசு..?

கல்லத்திகுளம்
News
கல்லத்திகுளம்

குடிநீர், சாலை வசதி என எந்தவித அடிப்படை வசதிகளும் கிராமத்தில் இல்லாததால் பெரும்பாலான குடும்பங்கள் கல்லத்திக்குளம் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் மிதலைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்டது கல்லத்திகுளம் கிராமம். இந்த கிராமத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பே மக்களின் பிரதான தொழில். இந்த கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன. ஆனால், குடிநீர், சாலை வசதி என எந்தவித அடிப்படை வசதிகளும் கிராமத்தில் இல்லாததால் பெரும்பாலான குடும்பங்கள் கல்லத்திக்குளம் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.

கல்லத்திகுளம்
கல்லத்திகுளம்

தற்போது, இந்த கிராமத்தில் 10 குடும்பங்கள் மட்டுமே கால்நடைத் தொழிலை நம்பிக் கொண்டு காலசக்கரத்தில் சுழன்றோடிக் கொண்டிருக்கின்றனர். திருச்சுழியிலிருந்து நரிக்குடி செல்லும் வழியில் மிதலைகுளம் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 5 கி.மீ தூரம் நடந்து தான் இந்த கிராமத்துக்குச் செல்ல வேண்டும். அந்த வழியிலும் முறையான சாலை வசதி இல்லாததால், இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்லக்கூடிய மிகக் குறுகலான பாதையில் ஊர்மக்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். கல்லத்திகுளம் கிராமத்தில் குடிநீர் வசதி இல்லாததால் மக்கள் சுமார் 3 கி.மீ தூரம் நடந்து, அருகிலிருக்கும் கோரைக்குளம் கிராமத்துக்குச் சென்று குடிநீர் எடுத்து வந்துகொண்டிருக்கின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சாலைவசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி என எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி விருதுநகர் மாவட்டத்தில் தனித்து விடப்பட்டிருக்கும் இந்த கிராமம் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற வழியில்லாமல் தீவு போலக் காட்சியளிக்கிறது. அதேபோல, மருத்துவ அவசரங்களுக்கு ஆம்புலன்ஸ் கூட வரமுடியாத அளவுக்கு ஊரின் சாலைகள் இருப்பதால், கர்ப்பிணிப் பெண்களும், நோய்வாய்ப்பட்டவர்களும் மருத்துவத் தேவை என்று வரும்போது மனம் நொந்து விடுகின்றனர். இதில் அவலநிலையின் உச்சம் இறந்தவர்களைப் புதைக்கவோ, எரிக்கவோ கூட சுடுகாட்டில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை என்பது தான்.

கல்லத்திகுளம்
கல்லத்திகுளம்

டிஜிட்டல் இந்தியா என நாம் அனைவரும் மார்தட்டிக் கொள்ளும் அதே நேரத்தில், கல்லத்திகுளம் போன்ற கிராமங்களில் மக்கள் இன்றளவும் அடிப்படை வசதிகளுக்காக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கல்லத்திகுளத்தில் தங்கள் நிலை குறித்து அரசு இயந்திரங்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டும் கூட எந்த பயனும் இல்லை என்கிறார்கள் ஊர்மக்கள். கிராமத்தின் நிலை குறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை சொல்லி ஓய்ந்து விட்டோம், இனி கிராமத்தைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கல்லத்திகுளத்தைச் சேர்ந்த சுப்புவிடம் பேசினோம். ``நான் சிறுவயதாக இருந்தபோதே எங்க கிராமத்துக்கு லாரி எல்லாம் வந்துபோகும். அந்த அளவுக்கு அகலமான பாதை இருந்துச்சு. ஆனா, இப்போ இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவுக்கு மோசமா இருக்கு. அதனால, பள்ளிக்கூடத்துக்கு போகுற பிள்ளைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே சிரமமா இருக்கு.

சுப்பு
சுப்பு

நாங்களும் பல வருஷமா இதுபத்தி சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகங்க கிட்ட மனு கொடுத்து, கொடுத்து ஓஞ்சு போயிட்டோம். எந்த நடவடிக்கையும் இல்ல. அதனால, இங்கிருந்து 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஊரை காலி செஞ்சுட்டு போயிட்டாங்க. நாங்க சில பேர் மட்டும் சொந்த ஊரை விட்டுட்டு போக மனசில்லாம இங்கேயே கிடக்குறோம். ஆனா, இதே நிலை தொடர்ந்துச்சுனா நாங்களும் எங்கயாவது போயிடுவோம். கல்லத்திகுளம்'னு ஒரு ஊரே இல்லாம போயிடும்" என்று மனம் குமுறினார்.

இந்த கிராமத்தில் விவசாயம் செய்து வரும் இராமசாமியிடம் பேசினோம். ``கடந்த இரண்டு தலைமுறையா சுமார் 250-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டு விவசாயம் செய்து வர்றோம். வாகனங்கள் செல்ல முறையான பாதை வசதி இல்லாததால டிராக்டர், விதை, உரம்'னு எந்த ஒரு விவசாயப் பொருள்களையும் எடுத்து வர முடியுறதில்ல. மழைக்காலம் வந்துட்டா கண்மாய்கள்ல மழைநீர் தேங்குறதால குழந்தைங்க கடந்து செல்ல முடியாம வீட்டுலயே முடங்கிப் போயிடுவாங்க. தாமிரபரணி கூட்டுக் குடிநீர் குழாய், சாலை வசதி, சுடுகாட்டுல தகனமேடை'னு கிராமத்துல நெறைய பிரச்னைகள் இருக்கு" என்றார்.

இராமசாமி
இராமசாமி

கல்லத்திகுளம் மக்களின் கோரிக்கைகளை திருச்சுழி வட்டாட்சியர் முத்துகிருஷ்ணனிடம் முன்வைத்துப் பேசினோம். ``கல்லத்திகுளம் கிராமத்தின் சாலைகள் அனைத்தும் பட்டா நிலங்களுக்குள் வருகின்றன. அதனால், சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் பேசி வருகிறோம். விரைவில் சாலை சீரமைத்துத் தரப்படும். அதைத் தொடர்ந்து, ஒவ்வொன்றாகக் கிராம மக்களின் தேவைகள் பூர்த்திசெய்யப்படும்" என்று உறுதியளித்தார்.