கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது கல்பாதூர் கிராமம். இங்கு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 500 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிராமத்தில், சுடுகாட்டுக்குத் தனிப் பாதையில்லாததால் மக்கள் கடந்த 40 ஆண்டுகளாக இறந்தவர்களின் உடல்களை தனியார் விளைநிலங்களைக் கடந்து, ஓடை வழியாக சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கின்றனர். மழைக் காலங்களில் விளைநிலங்கள் நீரில் மூழ்கி, ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு தாங்கள் மிகவும் சிரமப்படுவதாக வேதனை தெரிவிக்கிறார்கள். சுடுகாட்டுக்குத் தனிப்பாதை கேட்டு மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கூறப்படுகிறது.

இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய ஏதுவாக பாதை அமைத்துத் தர வேண்டும் என்றும், ஓடைப் பகுதியிலிருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் ஊர்ப் பொதுமக்கள் சார்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணையில், நீதிமன்றம் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலரை எதிர் மனுதாராகச் சேர்த்தது. அதையடுத்து, விசாரணைக்கு ஆஜரான வட்டார வளர்ச்சி அலுவலர், 4 லட்சம் ரூபாய் மயான மேம்பாட்டுக்கு ஒதுக்கி செலவழிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
அதேபோல, சுடுகாட்டுக்குப் பாதை அமைக்கத் தடையாக இருந்த வழக்குகள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு, புதிய பாதை அமைத்து மேற்படி பணத்தைச் செலவிடுமாறு சென்ற ஆண்டு 06.10.2021-ம் தேதி வழக்கை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது. அதன் பிறகு கிராமப் பொதுமக்கள் சார்பாக உயர் நீதிமன்ற உத்தரவு நகலுடன், பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மீண்டும் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்று ஊர்ப் பொதுமக்கள் கூறுகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில், அண்மையில் வயது மூப்பின் காரணமாக கல்பாதூர் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டிகள் இருவர் அடுத்தடுத்து இறந்தனர். அவர்களின் உடல்களை ஊர் மக்கள் நடவுசெய்யப்பட்ட விளைநிலங்கள் வழியாகச் சுமந்து சென்று, ஓடையைக் கடந்து அடக்கம் செய்திருக்கின்றனர்.
நீதிமன்றமே சுடுகாட்டுப் பாதை தொடர்பாக உத்தரவு பிறப்பித்திருக்கும்போதிலும், அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய ஊர்ப் பொதுமக்கள், ``எங்களுக்கு நினைவு தெரிஞ்சதுல இருந்து 40 வருடங்களுக்கு மேலாக சுடுகாட்டு வழிக்காகப் போராட்டம் செய்துக்கிட்டு வர்றோம். இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆட்சியாளர்கள்தான் மாறிக்கிட்டே இருக்காங்க. நாங்க இன்னும் அவதிப்பட்டுக்கிட்டேதான் இருக்கோம். தனியார் நிலத்துல சடலங்களை எடுத்துட்டு போகறதால, நில உரிமையாளருங்க சண்டைக்கு வர்றாங்க. அதையும் மீறி சேத்துல பயந்துக்கிட்டே போகறோம். நீதிமன்றம் வரைக்கும் போராடியும் எந்தப் பயனும் இல்லை. இதுவரைக்கும் இருந்தவங்கதான் எங்க கோரிக்கைக்கு செவிசாய்த்து உதவ முன்வரலை. இப்ப வந்திருக்குற அரசாவது உதவி செஞ்சா நல்லா இருக்கும்" என்றார்.
இது குறித்து உளுந்தூர்பேட்டை வட்டாட்சியரிடம் பேசினோம். ``முதற்கட்டமாக நில அளவையாளர்களை வைத்து ஓடை ஆக்கிரமிப்பை அளந்திருக்கிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று முடித்தார் சுருக்கமாக.