Election bannerElection banner
Published:Updated:

திக் திக் நிமிடங்கள்; பேசிக்கொண்ட கமல் - வானதி: கோவை தெற்குத் தொகுதி வாக்கு எண்ணிக்கை பரபர!

கமல் - வானதி
கமல் - வானதி

கமல் தொடர்ந்து முன்னிலை வகிக்க, வானதியும் மயூராவும் இரண்டாவது இடத்துக்கு போட்டி போட்டுக்கொண்டிருந்தனர்.

தமிழகமே உற்று நோக்கிய கோவை தெற்குத் தொகுதி முடிவுகள் வெளியாகிவிட்டன. பா.ஜ.க., காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் என்று மும்முனை போட்டி நிலவிய அந்தத் தொகுதி திருப்பங்களுக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நகர்ந்தது. கோவை தெற்குத் தொகுதியில் 1,55,000 வாக்குகள் பதிவாகியிருந்தன. தபால் வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் முன்னிலைவகித்தார்.

வாக்கு எண்ணும் மையம்
வாக்கு எண்ணும் மையம்

சிறிது நேரத்தில், தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் தள்ளிவைக்கப்பட்டு, இ.வி.எம் எண்ணும் பணிகள் தொடங்கின. முதல் சுற்றுகள் முடிவில் கமல்ஹாசன் முதல் இடம், மயூரா ஜெயக்குமார் இரண்டாமிடம், வானதி சீனிவாசன் மூன்றாவது இடம்பிடித்தனர்.

தேர்தலுக்கு பிறகு கமல் அரசியலில் தொடர்வது சந்தேகம்! - வானதி சீனிவாசன் ஆரூடம்

கிட்டத்தட்ட அடுத்த ஏழு சுற்றுகளுக்கு இதேநிலைதான். கமல் தொடர்ந்து முன்னிலை வகிக்க, வானதியும் மயூராவும் இரண்டாவது இடத்துக்கு போட்டி போட்டுக்கொண்டிருந்தனர். எட்டாவது சுற்றில் வானதி சீனிவாசன் இரண்டாம் இடத்துக்கு முன்னேற, மயூரா மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். 18-வது சுற்று வரை இதேநிலைதான்.

கமல் - வானதி
கமல் - வானதி

19-வது சுற்றில் வானதி மீண்டும் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு, மயூரா இரண்டாம் இடம்பிடித்தார். ஆனால், அதன் பிறகு காங்கிரஸ் பலம் குறைந்து மீண்டும் மூன்றாம் இடத்துக்குச் சென்றது. இரண்டாம் இடம் வந்த வானதி, கமலுக்குக் கடுமையான போட்டியைக் கொடுத்துவந்தார்.

கமல் முதல் இடத்திலேயே இருந்துவந்தார். ஆனால், வாக்கு வித்தியாசம் 800, 1,100, 1,800, 2,000, 2,200, 2,500 என்ற அளவுக்குதான் இருந்தது. அதிகபட்சம் எட்டாவது சுற்றில் 2,912 வாக்குகள் முன்னிலை வகித்ததே பெரிய வித்தியாசம். 22 சுற்றுகள் வரை முன்னிலை வகித்துவந்த கமல், 23-வது சுற்றில் இரண்டாவது இடத்துக்குச் சென்றார். 890 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் முதல் இடம்பிடித்தார்.

கமல்
கமல்

அதன் பிறகு, பட்டியலில் பெரிய அளவுக்கு மாற்றம் இல்லை. 24-வது சுற்று முடிவில் வானதி 1,235 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். அடுத்து இரண்டு சுற்றுகளும், தபால் வாக்குகள் மட்டுமே எண்ண வேண்டும்.

குறைந்த வாக்கு வித்தியாசம் என்பதால், உச்சகட்ட பரபரப்பு நிலவியது. வாக்கு எண்ணும் மையத்தில் கமல்ஹாசனும் வானதி சீனிவாசனும் அருகருகே அமர்ந்திருந்தனர். கமல் எந்த அசைவும் இல்லாமல் நடப்பதை உற்று கவனித்துக்கொண்டிருந்தார். யாரிடமும், எதுவும் பேசவில்லை. வானதியும் பதற்றத்துடனேயே காணப்பட்டார்.

கமல் - வானதி
கமல் - வானதி

இரவாகிவிட்டதால் சாப்பிட்டுவிட்டு வந்து வாக்கு எண்ணலாம் என்று கூறிவிட்டனர். உணவு இடைவேளைக்குப் பிறகு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்கில் காங்கிரஸுக்கு 720-ம், பா.ஜ.க-வுக்கு 582-ம், ம.நீ.ம-வுக்கு 394 வாக்குகளும் கிடைத்தன. அந்த முடிவுகளும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதற்கு நடுவே கமலின் முதன்மை ஏஜென்ட் ஒருவரும், நிர்வாகிகளும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் வந்ததற்கு, பா.ஜ.க-வினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால், அங்கு பதற்றம் உச்சத்துக்கே சென்றது.``தொகுதிக்குச் சம்பந்தமில்லாதவர்களை உடனடியாக வெளியேற்றுங்கள்” எனத் தேர்தல் நடத்தும் அதிகாரி உத்தரவிட்டார்.

கமல் - வானதி
கமல் - வானதி

போலீஸார், தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத அனைவரையும் வெளியேற்றினர். அதன் பிறகு மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டன. கடைசியில்தான் வானதியும் கமலும் சிறிது நேரம் ஏதோ பேசிக்கொண்டனர். 25-வது சுற்றிலும் வானதியே முன்னிலை. கடைசிச் சுற்று எண்ணப்பட்டது.

பரபரப்புக்குக் குறைவில்லை என்றாலும், பா.ஜ.க-வினர் உற்சாகமாகவே காணப்பட்டனர். காரணம், அந்தச் சுற்றில் எண்ணப்படும் வாக்குகள், அ.தி.மு.க., பா.ஜ.க வலுவாக உள்ள பகுதிகளே. வாக்குகள் எண்ணப்பட்டு, அறிவிக்கப்படுவதற்கு முன்பே பா.ஜ.க-வினர். `பாரத் மாதாகி ஜே’ என கோஷம் எழுப்பத் தொடங்கிவிட்டனர். கடைசியாக 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுவிட்டார்.

மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த கமல்ஹாசனும், மய்யத்தினரும் சோகத்துடன் வெளியேறினர். ``நாங்கள் வலியமையாக இருக்கும் பகுதிகளில் எங்களுக்கு நல்ல வாக்குகள் கிடைத்திருந்தன. அதனால், நாங்கள் ஆரம்பம் முதலே நம்பிக்கை இழக்கவில்லை” என்றனர் பா.ஜ.க-வினர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு