சட்டசபை தேர்தலில் தனக்கு வாக்களித்த கோவை மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், கட்சி நிகழ்ச்சிகளுக்காகவும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோவை வந்துள்ளார். ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதனிடையே கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கமல்ஹாசன், தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கோவை மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு கடந்த வாரம், மாவட்ட ஆட்சியர் சமீரன் காலணி அணிவித்தார்.
அந்த சிறுவனின் தந்தையும் மாற்றுத்திறனாளி. அந்த குடும்பத்துக்கு ஒரு தள்ளுவண்டியை ம.நீ.ம சார்பில் கமல் வழங்கினார். அதேபோல, கொரோனா தடுப்பூசி முகாம் ஒன்றையும் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “கொரோனா காலத்தில் எங்களது பல தொண்டர்களையும் இழந்துள்ளோம். அவர்களது குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகிறோம்.

மம்தா பானர்ஜி மூத்த அரசியல்வாதி. என் மீது அதிக அன்பு வைத்துள்ளார். பி.ஜே.பி-க்கு எதிரான ஓர் அணியை திரட்டி வருகிறார். சூழல் அமைந்து அவர்கள் அழைப்பு விடுத்தால், நாங்களும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பெண்களை முன்னிறுத்துவது உலகத்தின் கடமை. அதனால், எங்கள் அரசியல் பெண்களை முன்னிறுத்தி உள்ளது. நாங்கள் பணம் கொடுக்க மாட்டோம் என சொல்லியும் வெற்றிக்கு மிக அருகே என்னை கொண்டு சென்றது கோவை மக்கள்தான். நாங்களே சந்தேகப்பட்டபோதுகூட, ‘நாங்கள் இருக்கிறோம்’ என்று கோவை மக்கள் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளனர்.

அவர்களுக்கு நன்றி சொல்லத்தான் வந்துள்ளேன். பி.ஜே.பி, கிழக்கிந்திய கம்பெனியை போல, வடக்கு இந்திய கம்பெனி உருவாக்கி வருகிறது. கொங்கு நாடு என்பது அரசியல் கோஷம். அது மக்களின் தேவை கிடையாது.
கோவை புறக்கணிக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். இப்படி பிரிவினையை தூண்டும் விஷயங்களைதான் செய்வார்கள். நலத்திட்டங்களை பற்றி பேசமாட்டார்கள். இந்திய திரைப்படங்களில் அதிகளவில் இரட்டை வேடங்களில் நடித்தவன் நான். எனக்கு இரட்டை வேடம் போடுபவர்களை நன்றாகத் தெரியும். மேகதாது விவகாரத்தில் பி.ஜே.பி இரட்டை வேடம் போடுகிறது. இருவருக்கும் பெயர் வேறாக இருந்தாலும், இருவருமே பொம்மைகள்தான். கொரோனா தடுப்பு விஷயத்தில் தி.மு.க-வின் செயல்பாடு போதுமானதாக இல்லை.
இன்னும் பல விஷயங்களை செய்ய முடியும்” என்றவர், கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு, "எதுவும் தென் படவில்லை. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் லாபம் என எழுதியது மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது" என்றார்.
செய்தி: குருபிரசாத், ஹரிணி ஆனந்தராஜன்
படங்கள்: தி.விஜய்