Election bannerElection banner
Published:Updated:

``எனக்கு 66 வயது... நேரமில்லை... வாய்ப்பளியுங்கள்’’ - கோவை கூட்டத்தில் கமல்ஹாசன்

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

எனக்கு இப்போது 66 வயதாகிவிட்டது. வாய்ப்பு கொடுங்கள். நேரமில்லை. உங்கள் சேவையில் இன்னும் பல நாள் இருக்க ஆசைப்படுகிறேன் - கமல்ஹாசன்

கோவை தெற்கு தொகுதிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு, மாலை தேர்முட்டி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்கும் என்று கூறியிருந்தனர். ஆனால், 6 மணி அளவில்தான் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளைத் தொடங்கியிருந்தனர். 8 மணி அளவில் கட்சியின் சீனியர்கள் வரத் தொடங்கினர்.

கமல் பொதுக்கூட்டம்
கமல் பொதுக்கூட்டம்
வாய்ஸ் அரசியலுக்கு இழுக்கும் கமல்! - ரஜினியின் மைண்ட் வாய்ஸ் என்ன?

கூட்டம் தொடங்கி நடந்துகொண்டிருக்கும்போதுதான், ம.நீ.ம கூட்டணியில் அங்கம் வகிக்கும் ச.ம.க-வினர் தங்களது கொடிகளை நடத்தொடங்கினர். கூட்டத்தில் பேசிய மய்ய நிர்வாகிகள், ``கோவை மக்கள் கொடுத்துவைத்தவர்கள். சென்னைவாசிகள் பொறாமைப்படுகிறோம்” என்று கமலைப் புகழ்ந்தனர்.

கமலுக்கு ஒரு மைக், மற்ற நிர்வாகிகளுக்கு தனி மைக் போடியம் ஒதுக்கப்பட்டிருந்தது. 8:45 மணியளவில் கமல் மேடையேறினார். பொதுக்கூட்டத்தில் கடைசியாக மைக் பிடித்த கமல்ஹாசன், ``நான் ஐ.ஏ.எஸ் படிப்புக்கு செல்லும் மாணவனாக வேண்டும் என்பதுதான் என் அப்பாவின் ஆசையாக இருந்தது. நான் படிப்பை பாதியில்விட்டு நடிக்க வந்த பிறகும்கூட, `நடித்துக் கொண்டே படிப்பை தொடரு’ என்று கூறினார். அவரது கனவை என்னால் நிறைவேற்ற முடியவில்லை.

கமல்
கமல்

அவர் கனவை நிறைவேற்றும்விதமாக என்னுடைய கட்சியில் நிறைய ஐ.ஏ.எஸ்கள் இருக்கின்றனர். விஞ்ஞானிகள், மருத்துவர்கள் இருக்கின்றனர். படித்தவர்களை என்னைச் சுற்றி வைத்துக்கொள்வது எனக்குப் பெருமையாகவும், என் வளர்ச்சிக்குக் காரணமாகவும் உள்ளது. `ஏன் கோவையில் போட்டியிடுகிறீர்கள்?’ எனக் கேட்கின்றனர்.

ஏன் கூடாது என்பதைத்தான் அதற்கு பதிலாகக் கூற விரும்புகிறேன். 234 தொகுதிகளிலும் என் மக்கள் வாழ்கின்றனர். என்னைக் குறிப்பிட்ட பிரிவில் அடக்க முயல்கின்றனர். அதனால்தான், மயிலாப்பூரில் போட்டியிடுவேன் எனக் கூறினர். என் உறவுகள் எல்லா இடத்திலும் இருக்கின்றனர். நான் சம்பாதித்தது என்பதைவிட, நீங்கள் கொடுத்தது என்பதுதான் நிஜம்.

கமல்
கமல்

அதற்கு நன்றிக் கடன் செலுத்தத்தான் நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். நான் தேர்தல் முடிந்தவுடன் நடிக்கப் போய்விடுவேன் என, அதை ஏதோ கேவலம்போலச் சொல்கின்றனர். அது என் தொழில். உங்களுக்கு அரசியல் தொழில். எனக்கு அது கடமை. அந்த வித்தியாசத்தால்தான் நீங்கள் தோற்கப்போகிறீர்கள். நாங்கள் ஜெயிக்கப்போகிறோம்.

33 சதவிகிதம் கிரிமினல்கள் அந்த இரண்டு கட்சிகளில் இருக்கின்றனர் என்பது ஊடகங்கள் சொல்கின்ற உண்மை. நிலுவையிலுள்ள வழக்குகள் தனிக்கணக்கு. ஏன் கோவை என்று என்னிடம் கேட்காதீர்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏன் கோவை என்று கேட்காத சூழ்நிலை உருவாகும். தி.மு.க ஆட்சியில் மின்வெட்டு பிரச்னை இங்குள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களை நசுக்கின.

மக்கள்
மக்கள்

அதன் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள், அரசின் கடனை ரூ. 5.7 லட்சம் கோடியாக கடன் சுமை அதிகரித்துள்ளனர். குடிக்கத் தண்ணீர் இல்லாத ஊரில், வாஷிங் மெஷின் தருகிறோம் என்று சொல்வது என்ன நியாயம்? கொங்கின் சங்கநாதம் சட்டமன்றத்தில் கேட்க வேண்டும். அந்தக் குரலாக நான் இருக்க வேண்டும்.

50 ஆண்டுகள் தமிழகத்தை சீரழித்துள்ளனர். அதைச் சீரமைக்க 10 ஆண்டுகளாவது பிடிக்கும். தமிழ் சினிமாவை உலகத்தரத்துக்கு எடுத்துச் செல்வேன் என்று என் சிறிய வயதில் கூறியதை இப்போதுவரை செய்துகொண்டிருக்கிறேன். அப்படித்தான், தமிழகத்தை உலகத்தரத்துக்கு எடுத்துச்செல்வேன் என்று கூறுகிறேன். திருடவில்லை, கொள்ளையடிக்கவில்லை என்றால் முடியும். எனக்கு இப்போது 66 வயதாகிவிட்டது. வாய்ப்பு கொடுங்கள். நேரமில்லை.

உங்கள் சேவையில் இன்னும் பலநாள் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இப்போதே எங்கள் கையில் அதிகாரம் கொடுங்கள். இது உங்களுடைய கருவி. பஞ்சராகி நின்றுவிடக் கூடாது. இங்கு பல பஞ்சரான கேஸ்கள் இருக்கின்றன. அந்த நெருக்கடியையெல்லாம் கடந்து வர வேண்டும்.

கோவை எங்கள் கோட்டை என்று ஊழல்வாதிகள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். உடைக்க முடியாத கோட்டை என்று ஒன்றில்லை என என் கூட்டத்துக்கு நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இனி `கொள்ளையனே வெளியேறு’ என்பதைச் சொல்ல வேண்டும். சுரண்டப்பட்ட கஜானாவை நிரப்ப வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. எங்கள் எம்.எல்.ஏ-க்கள் உங்கள் குறைகளைத் தீர்ப்பதற்காக, பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுப்பர். நானும் கையெழுத்து போடுவேன்” என்று கமல் பேசிக் கொண்டிருக்கும்போது நேரம் இரவு 10 மணியாகிவிட்டது. இதனால், பேச்சை முடித்துக்கொண்டார்.

மேடையில் மாணவர்கள் சிலர் வந்து மக்கள் நீதி மய்யத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது, ‘எங்களது வாக்கு விற்பனைக்கில்லை’ என்று மேடையில் கோஷம் எழுப்பினர்.

இந்நிலையில், இன்று காலை கமல்ஹாசன் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்கிங் சென்றார். தொடர்ந்து 80 அடிரோட்டிலுள்ள தேகப்பயிற்சி சாலையில் உடற்பயிற்சி மேற்கொண்டார். சிறிது நேரம் சிலம்பம் சுற்றிவிட்டு, அங்குள்ள சிறுவர்களிடம் பேசிவிட்டு, தேகப்பயிற்சியின் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தார்.

இதையடுத்து கோவை மீன்மார்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற கமல், அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அதேபோல, மாநகர பேருந்துகளில் ஏறி மக்களிடம் பேசுவது, பள்ளி மாணவிகளுடன் உரையாடுவது என்று தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு