Published:Updated:

பனை ஓலையில் காமராஜர் சிலை! - அசத்திய தூத்துக்குடி தொழிலாளி

பனை ஓலையால் செய்யப்பட்ட காமராஜர் சிலை
பனை ஓலையால் செய்யப்பட்ட காமராஜர் சிலை

பனை ஓலை மூலம் வழக்கமாகப் பெட்டிகள் உள்ளிட்ட கைவினைப் பொருள்கள் செய்து வருபவர்கள் மத்தியில் பனை ஓலையில் காமராஜர் உருவத்தைச் செய்து அசத்தியுள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த பனைத் தொழிலாளி பால்பாண்டி.

பனைஓலை மூலம் வழக்கமாகப் பெட்டிகள் உள்ளிட்ட கைவினைப் பொருள்கள் செய்து வருபவர்கள் மத்தியில் பனை ஓலையில் காமராஜர் உருவத்தைச் செய்து அசத்தியுள்ளார் பனைத் தொழிலாளி பால்பாண்டி.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள கருங்குளத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி. பனை ஏறும் தொழிலாளியான இவர் பனைத்தொழில் தவிர விவசாயத்தையும் செய்து வருகிறார். ஓய்வு நேரங்களில் பனை ஓலையிலேயே கலைப் பொருள்களைச் செய்து வருகிறார். காமராஜரின் பிறந்தநாளான இன்று பனை ஓலையிலேயே காமராஜர் உருவத்தைச் செய்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் பால்பாண்டி.

பனை ஓலையில் கலைப் பொருள் செய்யும் பணியில் பால்பாண்டி
பனை ஓலையில் கலைப் பொருள் செய்யும் பணியில் பால்பாண்டி
ப.கதிரவன்

அவரிடம் பேசினோம், ``எங்களோட பூர்வீகமே பனை ஏறும் தொழில்தான். நான் ஐந்தாம் வகுப்பு வரைதான் படிச்சேன். அதுக்குமேல வீட்டுல பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலை. அப்பாவுடன் பனைத் தொழிலுக்கே போனேன். வெட்டி இறக்கிய நுங்கு குலைகளைச் சேகரித்தல், பதனீர் காய்ச்சுதல், கருப்பட்டி ஊற்றுதல், சிப்பம் கட்டுறதுன்னு சின்னச் சின்ன வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சேன். அப்படியே, பனை ஏறக் கத்துக்கிட்டேன்.

தொடர்ந்து, நானே தனியா பனை ஏறி நுங்கு வெட்டி விற்பனைக்குக் கொண்டு போனேன். தூத்துக்குடியில பனைத்தொழில் குறைவா இருந்துச்சுன்னா கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் எனப் பக்கத்து மாவட்டங்களுக்குப் போய் பனை ஏறிட்டுவருவேன். பனை ஏறும் தொழில் செய்துட்டு இருக்கும்போதே பனை ஓலைகளில் பெட்டி முடையுறதையும் கத்துக்கிட்டேன். ஓய்வு நேரங்களில் பெட்டி முடைவேன். 30 வருஷத்துக்கு முன்னாள, இங்கு பனைத்தொழில் குறைஞ்சதுனால, தஞ்சாவூருக்கு தொழிலுக்குப் போனேன். என் கையில இருந்த பணம் எப்படியோ திருடு போயிடுச்சு. சாப்பாட்டுக்குக்கூட வழியில்லை. அங்குள்ள மாரியம்மன் கோயிலில் கொடுக்குற பிரசாதத்தைச் சாப்பிட்டு மூணு நாள் ஓட்டினேன்.

பனைஓலையில் காமராஜர் சிலை
பனைஓலையில் காமராஜர் சிலை
ப.கதிரவன்

அதுக்குப் பிறகு தாக்குப்பிடிக்க முடியலை. ஊருக்குத் திரும்பி வர்றதுக்குக் கையில 10 பைசாகூட கிடையாது. என்ன செய்யலான்னு யோசிச்சப்போதான், அந்தப் பகுதியில நின்ன பனை மரத்துல ஏறி ஓலைகளை வெட்டிப்போட்டு, 10 பெட்டி முடைஞ்சேன். அதே மாரியம்மன் கோயில் வாசல்ல உட்கார்ந்து விற்றேன். அந்தப் பெட்டிகளை விற்றக் காசுல வயிறாரச் சாப்பிட்டுட்டு அடுத்த பஸ்ஸைப் பிடிச்சு ஊரு வந்து சேர்ந்தேன். அந்த நேரத்துல என் பசியையும் போக்கி சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பி வச்சது இந்தப் பனைமரம்தான்.

7 வருசத்துக்கு முன்னாள நடந்த விபத்துல காலில அடிபட்டு ஆபரேஷன் நடந்துச்சு. அதுக்குப் பிறகு என்னால பனை ஏற முடியலை. ``இனிமேல் பனை ஏற வேண்டாம்பா... நாங்க வேலைக்குப் போறோம்ல. நீங்க ஓய்வெடுங்க”ன்னு பசங்களும் சொல்லிட்டாங்க. ``ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்குமா”ன்னு சொல்லுறது மாதிரி, பனைக்குப் பனை ஏறி இறங்கிட்டு இருந்தவனை ஒரு ரூமுக்குள்ள உட்கார்ந்து ஓய்வெடுங்கன்னு சொன்னா எப்படிய்யா சும்மா இருக்க முடியும்?

வண்ணம் தீட்டும் பால்பாண்டி
வண்ணம் தீட்டும் பால்பாண்டி
ப.கதிரவன்

பனை ஓலைகளில் பெட்டி முடையுறதுக்குப் பதிலா ஏதாவது உருவங்களைச் செய்து பார்க்கலாமான்னு எனக்குத் தோணுச்சு. பனை ஓலைகளை கிழிச்சு வச்சேன். முதலில், ஒரு பொம்மை செய்தேன். அதுக்கே ஒருநாள் ஆயிடுச்சு. தொடர்ந்து, வில்லு வண்டி, விமானம், ஒட்டகம், யானை, திருச்செந்தூர் கோயில் கோபுரம், தேவாலய கோபுரம், தாஜ்மஹால், கலப்பை விவசாயி, ஓலைச் செருப்புன்னு என் மனசுல என்னென்ன தோணுதோ, யார் என்ன செய்யச் சொல்றாங்களோ அதைச் செய்ய ஆரம்பிச்சேன்.

மறைந்த தலைவர்கள்ல எனக்கு காமராஜர் ரொம்பப் பிடிக்கும். காமராஜர் உருவத்தைச் செய்து அவரோட பிறந்தநாள் அன்று வீட்டுல காட்சிப்படுத்தணும்னு நினைச்சேன். மே மாசமே இதுக்கான வேலையை ஆரம்பிச்சுட்டேன். முதலில் கால்பகுதியை செஞ்சு முடிச்சேன். கால், மூட்டு, இடுப்புப்பகுதி, உடல்பகுதி, கை, மணிக்கட்டு, தலைப்பகுதி என ஒவ்வொரு பாகமாகச் செய்து, கடைசியா எல்லாத்தையும் ஒண்ணு சேர்த்தேன். ஜவுளிக்கடையில வேட்டி, சட்டை வாங்கிப் போடலாம்னு நினைச்சேன். அதையும், ஏன் ஓலையில செஞ்சுப்பார்க்கக் கூடாதுன்னு தோணுச்சு. அதுக்கு ஏத்ததுபோல ஓலையைப் பக்குவமா கிழிச்சு செய்தேன்.

பனை ஓலையில் கலைப் பொருள்கள்
பனை ஓலையில் கலைப் பொருள்கள்
ப.கதிரவன்

மே மாசம் ஆரம்பிச்ச வேலை நாலு நாளுக்கு முன்னாடிதான் முடிஞ்சுது. நினைச்சபடியே அவரோட பிறந்தநாளான இன்று காட்சிப்படுத்தியதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். பனை ஓலைகளில் இதுமாதிரி உருவங்களைச் செய்துவருவதால், சென்னை சர்வதேசப் பல்கலைக்கழகம் எனக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்துள்ளது. இது எனக்கான அங்கீகாரம் இல்ல. என் குலசாமி பனைக்குக் கிடைத்த அங்கீகாரம்” எனச் சொன்னபடியே விடை கொடுத்தார் பால்பாண்டி.

அடுத்த கட்டுரைக்கு