Published:Updated:

``பட்டுப்புடவை நெய்யிற பெண்கள்ல பலர் பட்டுப் புடவையே கட்டினதில்ல!'' நெசவாளி கீதா

நெசவு செய்யும் கீதா
நெசவு செய்யும் கீதா

தன்னோட வாழ்நாளில் 1000 பட்டுப்புடவைகளை நெய்த எங்க பெண்களில் நிறைய பேர், தங்களோட வாழ்க்கையில் ஒரு பட்டுப்புடவையைக் கூட கட்டினது இல்லை.

மத்திய அரசின் சார்பாக 2015 ம் ஆண்டிலிருந்து, சிறந்த நெசவாளர்களுக்குத் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான சிறந்த கைத்தறி நெசவாளருக்கான தேசிய விருது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண் நெசவாளர் கீதாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கான பரிந்துரையில் தன் புடவையும் இடம்பெற்றிருக்கும் மகிழ்ச்சியிலிருக்கும் கீதாவிடம் பேசினோம்.

கீதா
கீதா

"ரொம்ப சந்தோமா இருக்கு! தலைமுறை தலைமுறையா நெசவு மட்டுமே பண்ணுற எங்களுக்கு, அந்த நெசவு தாயீ கொடுத்த பரிசாத்தான், விருதுக்கு பரிந்துரை செய்திருக்கிற விஷயத்தைப் பார்க்கிறேன்" என, மகிழ்சியும் தயக்கமும் கலந்த குரலில், தறி நெய்தவாறே பேசுகிறார் கீதா.

"இந்தத்தறி எனக்கு எங்க அம்மா மாதிரி. ஒன்பது வயசில் படிப்பை விட்டுட்டு, அம்மாகூட சேர்ந்து தறி நெய்ய ஆரம்பிச்சேன். இப்போ எனக்கு 35 வயசு. 21 வருஷமா தறிதான் படி அளக்குற சாமியா இருக்கு.

Vikatan

எங்க தாத்தா காலத்தில் லுங்கி நெய்றதுதான் எங்க குடும்ப தொழில். குழந்தை பெத்தா ஒரு வாரம் தறியில் உட்கார மாட்டோம். அப்புறம் ஒரு கையில் குழந்தையைப் பிடிச்சுக்கிட்டே இன்னொரு கையல தறியில் நூலைக் கோப்போம். எங்க குழந்தைகளுக்கு, தறிச்சத்தம்தான் தாலாட்டு.

ஒரு நாளைக்கு 10 மணிநேரம் நெய்தால்தான் ஒரு மாசத்துக்கு மூணு புடவைகள் நெய்ய முடியும்.
கீதா.

ஆரம்பத்தில நானும் லுங்கிதான் நெய்துட்டு இருந்தேன். ஒரு லுங்கிக்கு இருபது ரூபாய் கிடைக்கும். ஆனால், காலம் மாற மாற நைட் பேன்ட்டுகள், டவுசர்கள் பயன்படுத்துறவங்களோட எண்ணிக்கை அதிகமாயிருச்சு என்பதால் லுங்கி நெய்றவங்களுக்குப் பெரிய அளவு ஆர்டர்கள் வர்றது இல்ல. அதனால என்னோட 15 வயசில் பட்டு நெசவு கத்துக்கிட்டேன்.

லுங்கி நெய்றதைவிட பட்டு நெய்றது கொஞ்சம் நுணுக்கமான வேலை. ஒரு பட்டுப் புடவை நெய்யவே ஒரு வாரத்திலிருந்து பத்து நாள் ஆகும். ஆனா, ரெகுலரான ஆர்டர்கள் இருந்துட்டே இருக்கும்" என்றவர் பட்டு நெய்தல் பற்றிப் பேசத் தொடங்கினார்.

பட்டுப்புடவைகள்
பட்டுப்புடவைகள்

பட்டு நெய்றது சாதாரண வேலையில்ல. கொஞ்சம் தப்புச்சுனாலும் மொத்தமும் வீண் ஆயிரும். அதனால தறியில் நூலைப் போட்டுட்டா, எப்பவும் கவனமாவே இருக்கணும்.

முதல்ல நாங்க உறுப்பினரா இருக்குற கூட்டுறவுச் சங்கத்திலிருந்து நூல் வாங்கிட்டு வருவோம். அதை பத்து நாள் ஊறவெச்ச சாதக்கஞ்சியில் முக்கி எடுத்து, நீளமாக இழுத்து மரக்கட்டையில் கட்டி காயவெச்சு, நூலை விறைப்பாக்கி நெய்வதற்குத் தயார்படுத்துவோம். அதற்கு பாவு போடுறதுனு பெயர். அப்படி பாவு போட்ட நூலை மிஷினில் கொடுத்து ஒரு பெரிய உருளையில் சுத்தி எடுத்துட்டு வருவோம். உருளையைத் தறியோடு இணைச்சு, தறியில் இருக்கும் நாடாவுடன் பொருத்தி நெய்யத்தொடங்குவோம்.

பட்டுப்புடவையை கல்யாணம் போன்ற நல்ல காரியத்துக்கு உடுத்துவாங்க என்பதால் தறியில் நூலை ஏத்துன உடனே விளக்கு ஏத்தி, சாமி கும்பிட்ட பிறகுதான் நெய்யத் தொடங்குவோம். ஒரு முறை மிஷினில் ஏத்துன நூலில் 3 புடவைகள் வரை நெய்யலாம். காலையில் 8 மணிக்குத் தறி நெய்ய ஆரம்பிச்சா சாயங்காலம் 6 மணி வரைக்கும் இந்தச்சத்தம்தான் எங்களுக்குத் தாலாட்டு, இதயத்துடிப்பு எல்லாமே. ஒரு நாளைக்கு 10 மணிநேரம் நெய்தால்தான் ஒரு மாசத்துக்கு மூணு புடவைகள் நெய்ய முடியும்.

``பாரம்பர்யத்தை அழிச்சுட்டு வெறும் பணத்தை வெச்சு என்ன பண்ணப்போறோம்"
கீதா
பட்டுப்புடவை
பட்டுப்புடவை

ஒரு புடவைக்கு 1500 ரூபாய் கூலி தருவாங்க. நிறைய வேலைப்பாடுகள் இருந்தால் ஒரு புடவைக்கு ஐந்தாயிரம் வரை கிடைக்கும். பளபளக்கும் காஞ்சிப்பட்டுனு விளம்பரம் வரும்போதெல்லாம் உங்களுக்கு அதில் இருக்கும் கலரும், டிசைனும்தான் தெரியும். ஆனா, எங்களுக்கு அது ஒரு மாச சாப்பாடு. கூலி குறைவுதான் என்றாலும் பரம்பரை தொழிலை விடமுடியல. உண்மையைச் சொல்லணும்னா தன்னோட வாழ்நாளில் ஆயிரம் பட்டுப்புடவைகளை நெய்யற எங்க பெண்களில் நிறைய பேர், அவங்க வாழ்க்கையில் ஒரு பட்டுப்புடவையைக் கூட கட்டினது இல்லை" என்றவர் சில நிமிடங்கள் அமைதியாகிறார்.

``அதுமட்டுமல்ல நூலைக் கூர்மையாப் பார்த்துப்பார்த்து கண் பார்வை குறைஞ்சு போயிரும். கை,கால் நரம்பும்களும் பலவீனம் ஆயிரும். உடம்பைப் பார்த்தா சாப்பாட்டுக்கு என்ன பண்றதுமா. எங்க வீட்டில் நானும் என் வீட்டுக்காரரும் சேர்ந்து தறி நெய்யறோம். ரெண்டு பேருக்கும் சேர்த்து மாசம் 10,000 ரூபாய் கிடைக்கும். வருமானம் குறைவுங்கிறதுனால எங்களுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த நிறைய பிள்ளைகள் நெசவை விட்டுட்டு வேறவேற உத்தியோத்துக்குப் போயிட்டாங்க. ஆனா, நான் 'எந்தத் தொழிலுக்குப் போனாலும் நெசவை விட்டுறாத சாமி'னு என் பையன்கிட்ட கண்டிஷனா சொல்லிட்டேன்.

இப்ப என் மவன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான் அவன் தறியில் உட்காருவதைப் பார்க்கும்போது பெருமையா இருக்கு. பாரம்பர்யத்தை அழிச்சுட்டு வெறும் பணத்தை வெச்சு என்ன பண்ணப்போறோம்" என்ற கீதாவின் வார்த்தைகள் நம்முடைய அடையாளங்கள் அழிக்கப்படும் செய்தியை முகத்தில் அறைந்து சொல்லுகிறது.

விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு இருப்பதைப் பற்றிக் கேட்டோம்.

தறி
தறி

``அந்தப்புடவையை விருதுக்குப் பரிந்துரைப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கல. கூட்டுறவு சங்கத்திலிருந்து அந்தப் புடவைக்கான ஆர்டர் கொடுக்கும்போது, எப்படியெல்லாம் வேணும்னு சொல்லிக்கொடுத்தாங்களோ அப்படி செஞ்சுக்கொடுத்தேன்.

அந்தப்புடவையின் இரண்டு பார்டர்களும் கோவை முறையில் நெய்திருக்கேன். ஆறு நாடாக்கள் பயன்படுத்தியிருக்கேன். மயில் சக்கரம் போன்ற பாரம்பர்ய வடிவங்கள் கொண்ட டிசைன்கள் இருக்கு. வேலைப்பாடுகள் அதிகம் என்பதால் அந்தப்புடவை நெய்ய அஞ்சாயிரம் ரூபாய் கொடுத்தாங்க. ஆனா, அந்த மாசம் முழுக்க அந்த ஒரு புடவை மட்டும்தான் நெய்ய முடிஞ்சுது.

கீதா
கீதா

இந்த விருது கிடைச்சா ஒரு லட்சம் ரூபாயும், ஒரு மொபைல் போனும் பாராட்டுப் பத்திரமும் கொடுப்பாங்கனு சொல்லிருக்காங்க. விருது கிடைச்சா சந்தோஷம். இல்லைனாலும் தறியை விடப்போறது இல்ல. விருது கிடைச்சா பெருமை. ஆனாலும் கூலியை அதிகரிச்சா எங்க தலைமுறையே நெசவுக்காக வாழும்" என்ற கீதாவின் குரல், தறி நெய்பவர்களுக்கான குரலாக ஒலிக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு