Published:Updated:

`பாஸ் இல்லாம எப்படி அனுமதிச்சீங்க?' - அத்திவரதர் தரிசனத்தில் போலீஸாரிடம் கடுகடுத்த கலெக்டர்

அத்திவரதர் தரிசனத்தில் விஐபி மற்றும் விவிஐபி வரிசைகளில் டிக்கெட் இல்லாதவர்களையும் அனுமதித்ததாக, காவல் அதிகாரி ஒருவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டோஸ் விடும் வீடியோ வைரலாகி வருகிறது.

Athivaradar dharsan
Athivaradar dharsan

அத்திவரதர் தரிசனத்தில், கடந்த 40 நாள்களாகவே காவல்துறையினரின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. அவர்கள் நடந்துகொள்ளும் விதம்குறித்து பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்துவந்தனர். அத்திவரதர் தரிசனத்திற்காக பணியில் ஈடுபட்டுவந்த மருத்துவக் குழு, மின்வாரிய ஊழியர்கள், அறநிலையத்துறையினர், பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் தனித்தனியே பாஸ் வழங்கப்பட்டது. ஆனால், அவர்களைக்கூட பணிசெய்ய காவல்துறையினர் உள்ளே அனுப்பாமல், ஒருமையில் பேசி அலைகழித்துவந்ததாகப் புகார் எழுந்தது. இதனால், காவல்துறையினர் மீது தொடர்ந்து அனைத்துத் துறையினரும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துவந்தார்கள். அவர்களை மாவட்ட ஆட்சியர் பலமுறை எச்சரித்தும் இந்தநிலை மாறவில்லை என்கிறார்கள்.

Athivaradar dharsan
Athivaradar dharsan

நேற்று, விவிஜபி வரிசையில் பல மணி நேரமாக பொதுமக்கள் வெயிலில் காத்துக்கிடந்தனர். ஆனால், காவல்துறையினர் தங்களுக்கு வேண்டியவர்களை பாஸ் இல்லாமல் தொடர்ந்து உள்ளே அனுமதித்துக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இதனால், அங்கிருந்த பக்தர்கள் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நேற்று இரவு, மாவட்ட ஆட்சியர் அந்த வழியாகச் செல்லும்போது அங்கிருந்த ஒருவர்,``வெயிலில் 4 மணி நேரத்திற்கும் மேல் நிற்கிறோம். நாங்க விவிஐபி பாஸ் வைத்துள்ளோம். காவல்துறையினர், எவ்வித பாஸும் இல்லாமல் எங்களுக்கு முன்பாக நிறைய பேரை அனுமதிக்கிறார்கள்” என நேரடியாகப் புகார் செய்தார்.

``காவல்துறையினர் சிலர் தரகர்களைப் போல பணம் வாங்கிக் கொண்டு, பலரை அழைத்துவந்தார்கள். ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்களை ஐஜி குடும்பத்தினர் என வாயிலில் சொல்லிக்கொண்டு அழைத்துச் செல்வார்கள். இதற்கும் எஸ்.பி, சி.ஐ.டி-களும், காவல்துறையைச் சேர்ந்த சிலரும் இப்படி தொடர்ந்து செய்துவந்தார்கள். ஒரு டீமை அழைத்துச்செல்வதற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை வாங்குகிறார்கள். சில காவலர்கள் தங்களுக்குள் ஒரு டீமை அமைத்துக்கொண்டு தொடர்ந்து இதுபோல் செய்துவந்தார்கள்” என காவல்துறையைச் சேர்ந்த சிலரே புலம்புகிறார்கள்.

அத்திவரதர் தரிசனத்தில் வி.வி.ஐ.பிக்கள் செல்லும் வழியில் காவல் துரையினர் லஞ்சம் வாங்கிக் கொண்டு எவ்வித பாஸ்-ம் இல்லாமல்...

Posted by Vikatan EMagazine on Saturday, August 10, 2019

இது போன்ற தொடர் புகார்களை அடுத்து நேற்று இரவு, மாவட்ட ஆட்சியர் பொன்னையா, விவிஐபி நுழைவு வாயிலை ஆய்வு செய்தார். அப்போது, அங்கு பணியில் இருந்த ஆய்வாளர் ஒருவர், பாஸ் இல்லாமல் விவிஐபி நுழைவு வாயில் வழியாக சிலரை அழைத்துச்சென்றிருக்கிறார். அவர்களைத் தடுத்து நிறுத்திய மாவட்ட ஆட்சியர், அங்கிருந்த காவல் அதிகாரியை, `எப்படி பாஸ் இல்லாமல் அனுமதிச்சீங்க?' என கடுமையாகப் பேசினார். அந்த ஆய்வாளர் மன்னிப்பு கேட்டார். அப்போது கொந்தளித்த மாவட்ட ஆட்சியர், கடுமையான வார்த்தைகளில் எச்சரித்தார். உடனடியாக செல்போனை எடுத்து உதவியாளரிடம் சொல்லி, ஐஜி-யை வரவழைத்து சஸ்பெண்ட் ஆர்டர் கொடுக்கச் சொன்னார். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

` முன்னறிவிப்பில்லாத மேம்பாலப்பணி' - அத்திவரதர் தரிசனத்தில் அலைக்கழிக்கப்பட்ட பக்தர்கள்!

இதுபோல், கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் கோயிலுக்கு வந்தனர். அவருடைய சம்பந்தி குடும்பத்தினரும் சேலத்தில் இருந்து அவர்களுடன் வந்திருந்தனர். அங்கிருந்த காவல்துறை அதிகாரி சிலம்பரசன் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திவிட்டார். ஆனால், காவல்துறையினரின் உறவினர்களை மட்டும் அவர் உள்ளே விட்டுக்கொண்டிருந்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உறவினர் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் அவரிடம் சொல்லியும் நீண்ட நேரம் காக்கவைத்தே உள்ளே அனுப்பினார்.

subramanian swamy
subramanian swamy

நேற்று, பா.ஜ.க மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி மற்றும் அவரின் குடும்பத்தினர் கோயிலுக்கு வந்தனர். அப்போது, பா.ஜ.க-வினர் பொன்னாடை அணிவித்து அவரை வரவேற்றனர். சற்று முன்பாகச் சென்ற அவரின் மனைவியை சிலர் இடித்துத் தள்ளினார்கள். தள்ளுமுள்ளு காரணமாக அவர் வெளியே வந்துவிட்டார். சில நிமிடங்கள் கழித்தே அவர்களை போலீஸார் அனுமதித்தனர்.