Published:Updated:

`நித்யானந்தா அழைத்தால் கைலாசா செல்வேன்!' - காஞ்சிபுரம் ஞானப்பிரகாச ஆதீனம்

எனக்கு உதவி செய்வதற்காக நித்யானந்தா இரண்டு நபரை அனுப்பி இருக்கிறார். அவர்களும் என்னுடன் தங்கி இருக்கிறார்கள். அவர்கள்தான் என்னை கவனித்துக்கொள்கிறார்கள்.

நித்யானந்தாவுடன் ஞானப்பிரகாச சுவாமிகள்
நித்யானந்தாவுடன் ஞானப்பிரகாச சுவாமிகள்

காஞ்சிபுரத்திலுள்ள தொண்டை மண்டல ஆதீன மடம், மிகவும் பழைமையான மடம். இதன் 232-வது மடாதிபதியாக திருவம்பர தேசிக ஞானப்பிரகாச சுவாமிகள் இருந்து வருகிறார். கடந்த 2017ல் நித்யானந்தாவின் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மடம் வந்துவிட்டதாக வெளியான தகவல்கள் பரபரப்பைக் கிளப்பின. நித்யானந்தாவுக்கு ஆதரவாக இருக்கும் காஞ்சிபுரம் ஞானப்பிரகாச சுவாமிகள் என்ன நினைக்கிறார்? நித்யானந்தாவைச் சுற்றும் சர்ச்சைகள் தேசத்தையே உலுக்கி வரும் நிலையில் அவரிடம் பேசினோம்.

காஞ்சிபுரம் மடத்தில் நித்யானந்தா சீடர்கள்
காஞ்சிபுரம் மடத்தில் நித்யானந்தா சீடர்கள்

நித்யானந்தாவை சந்தித்துப் பேசியிருக்கிறீர்களா?

நித்யானந்தாவை ஆளாக்கியதே நான்தான். ஆரம்பத்தில் அவருக்கு ஆசிரமம் எதுவும் கிடையாது. ஈரோடு பகுதியில் உள்ள ஆசிரமம்தான் அவருக்கு முதல் ஆசிரமம். அங்கிருந்துதான் பிடதிக்குச் சென்றார்.

நித்தியானந்தா
நித்தியானந்தா

காஞ்சிபுரம் மடத்தை நித்யானந்தா கைப்பற்றியதாகத் தகவல்கள் வெளிவருகிறதே?

நித்யானந்தா இளைய பட்டமாக வரவேண்டும் என விரும்பினார். அதற்காக இரண்டு முறை முயற்சி செய்து பார்த்தார். அதை நான் ஆதரிக்க மாட்டேன் எனச் சொல்லி திருப்பி அனுப்பிவிட்டேன். எப்போதும்போல அவர் எனக்கு ஒரு நண்பர்தான். கடைசியாக, கடந்த ஆண்டு ஜனவரியில் அவரை சந்தித்தேன். அவ்வளவுதான். தொலைபேசியில் பேசுவதுகூட கிடையாது. பெங்களூரில் ஏதாவது முக்கியமான நிகழ்ச்சி என்றால் அழைப்பார். அங்கே சென்று சில நாள்கள் தங்கிவிட்டு வருவேன்.

`நித்யானந்தா பதுங்குகுழியில் இருக்கலாம்; ரஞ்சிதாவிடம் விசாரியுங்கள்!’ - முன்னாள் சீடர்

தனி நாடு ஒன்றை உருவாக்கியிருப்பதாகச் சொல்லும் நித்யானந்தா, அதை இந்துக்களுக்கான நாடு என்கிறாரே... அதை வரவேற்கிறீர்களா?

நூறு சதவிகிதம் வரவேற்கிறேன். பாகிஸ்தான் உருவாகும்போது முஸ்லிம்கள் ஆதரவு தெரிவிக்கவில்லையா? அதுபோல்தான் இந்துக்களுக்கான நாடு உருவானால் அதை வேண்டாமென்றா சொல்வேன்! உலகம் முழுவதும் இந்து மதம் இருக்கிறது. அதற்கான தனிநாடு ஒன்று உருவானால், அது வரவேற்கக் கூடியதே, எதிர்க்கத் தேவையில்லை.

நித்யானந்தாவின் பெண் சீடர்
நித்யானந்தாவின் பெண் சீடர்

நித்யானந்தா, அரசாங்கத்தை எதிர்த்து செயல்படுவதால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருக்கிறதே?

அதை அவர் சமாளித்துக்கொள்வார். இதுகுறித்து யாரும் என்னிடம் கேட்கவில்லை.

நித்யானந்தா அழைத்தால் கைலாசாவிற்குச் செல்வீர்களா?

அவர் செலவுசெய்து அழைத்துச் சென்றால், கண்டிப்பாகச் செல்வேன். மடத்தின் செலவில் செல்ல மாட்டேன். ஆனால் திரும்பவந்துவிடுவேன். இந்த மடத்தை யார் கவனிப்பது?

`ஆனந்த நடனம்; அன்னாசிப் பழ கர்ப்பம்’ வீடியோவில் நித்யானந்தா குறிப்பிட்ட ஜூ.வி கட்டுரை சொல்வது என்ன?

குஜராத் ஆசிரமம் தொடர்பாக அவர்மீது வழக்குகள் பதிந்திருக்கிறார்களே?

குஜராத் ஆசிரமம் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது.

நீங்கள் நித்யானந்தா கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்கிறார்களே?

யாரும் என்னைக் கட்டுப்படுத்த முடியாது.

நித்யானந்தா
நித்யானந்தா

யாரெல்லாம் உங்கள் மடத்தில் தங்கியிருக்கிறார்கள்?

நான் மட்டும்தான் தங்கியிருக்கிறேன். எனக்கு உதவி செய்வதற்காக நித்யானந்தா இரண்டு நபரை அனுப்பி இருக்கிறார். அவர்களும் என்னுடன் தங்கியிருக்கிறார்கள். அவர்கள்தான் என்னை கவனித்துக்கொள்கிறார்கள். எனக்கு உணவெல்லாம் பரிமாருகிறார்கள். நித்யானந்தாவின் ஆட்கள் ஒருசிலர் அடிக்கடி மடத்திற்கு வந்து செல்வார்கள்.

நித்யானந்தாவின் சீடர்கள் இங்கு என்ன செய்கிறார்கள்?

காஞ்சிபுரம் பகுதியில் உள்ள காரையில், நித்யானந்தாவுக்கு சொந்தமான நிலம் இருக்கிறது. அங்கே வேலை நடந்து கொண்டிருக்கிறது. அந்த வேலை நிறைவடைந்தால், அவர்கள் அங்கு சென்றுவிடுவார்கள். அதுவரை இங்கே தங்கி இருந்து அவர்களின் வேலைகளைப் பார்ப்பார்கள். நித்யானந்தா சீடர்கள் தங்கியிருப்பது பிடிக்கவில்லை என யாரும் என்னிடம் சொல்லவில்லை.

`ஈக்வடாரா.. ஹெய்ட்டியா?!' - நித்யானந்தா விவகாரத்தில் என்ன சொல்கிறது வெளியுறவுத் துறை?

நித்யானந்தா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கிறார்களே...

அதெல்லாம் எனக்குத் தேவையில்லாதது. எனக்கு சம்பந்தம் இல்லாதவரைப் பற்றி எதற்கு என்னிடம் கேட்கறீங்க?

நீங்கள்தானே நித்யானந்தாவை உருவாக்கியதாகச் சொல்கிறீர்கள்?

நான் உருவாக்கவில்லை. நான் வேண்டாம் என்றதும் அவராகவே உருவாக்கிக்கொண்டார்.

ஞானப்பிரகாச சுவாமிகள்
ஞானப்பிரகாச சுவாமிகள்

நித்யானந்தாவை ஆதரிக்கிறீர்களா?

மதத்தைக் காப்பாற்ற அவர் உழைக்கிறார். கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள், பௌத்தர்கள் போன்றவர்களின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக வேதாந்தம், சித்தாந்தம் இரண்டையும் பயன்படுத்தி பிரசாரம் செய்துவருகிறார். இந்த மடம் சித்தாந்த மடம். வேதாந்தத்திற்கு நாம் போகவேண்டியதில்லை.

`கைலாசாவுக்குச் செல்ல 12 லட்சம் பேர் விண்ணப்பம்!' - உற்சாகத்தில் `தனிநாடு' நித்யானந்தா

நித்யானந்தா இருக்கும் இடம் உங்களுக்குத் தெரியுமா?

நித்யானந்தா எங்கே இருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. எனக்கும் அவருக்கும் நட்பு உண்டு அவ்வளவுதான்.