Published:Updated:

`காஞ்சிபுரம் கைதிக்கு கொரோனா!’ - அதிர்ச்சியில் வேலூர் பெண்கள் சிறை

வேலூர் சிறை
வேலூர் சிறை

வேலூர் பெண்கள் சிறையில், பெண் கைதி ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டதையடுத்து, சிறையில் உள்ள மற்ற கைதிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில், இன்று ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, இதுநாள் வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 888-ஆக அதிகரித்திருக்கிறது. இதில் அதிர்ச்சி தரக்கூடிய தகவல் என்னவென்றால், வேலூர் பெண்கள் தனிச்சிறையில் விசாரணைக் கைதி ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அந்த பெண் கைதி, சாராய வழக்கில் கைதுசெய்யப்பட்டிருந்தார். சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்னதாக அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இசைக்குழுவினர் மூலம் அறிவுறுத்தும் போலீஸார்
இசைக்குழுவினர் மூலம் அறிவுறுத்தும் போலீஸார்

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு தொற்று உறுதியானதையடுத்து, இன்று வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சிறையில் அந்த பெண் கைதியுடன் தொடர்பிலிருந்த மேலும் 4 பெண் கைதிகளையும் தனிமைப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் சிறைத் துறையினரிடம் வலியுறுத்தியிருக்கிறார்கள். அதையடுத்து, பெண்கள் சிறையிலும், மத்திய ஆண்கள் சிறையிலும் கொரோனா தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, ‘சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து வருபவர்களை வேலூர் மாவட்டத்திற்குள் அனுமதிக்கக் கூடாது’ என்று அனைத்து செக்போஸ்ட்டுகளிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டிருக்கிறார் கலெக்டர் சண்முக சுந்தரம். வெளி மாவட்டங்களிலிருந்து வந்துள்ளவர்களைக் கண்டறிய ஒவ்வொரு கிராமத்திலும் தண்டோரா போட்டும், ஆட்டோவில் மைக் மூலமாகவும் அறிவிப்பு வெளியிட்டுவருகிறார்கள்.

மாவட்ட எல்லையில் ஆய்வு செய்த எஸ்.பி பிரவேஷ்குமார்
மாவட்ட எல்லையில் ஆய்வு செய்த எஸ்.பி பிரவேஷ்குமார்

‘சென்னையிலிருந்து வந்துள்ளவர்கள், கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் தெரிவித்து டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். சோதனை முடிவு வரும்வரை வெளியில் வரக்கூடாது. வெளியில் வந்தால், காவல் துறையினர் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கல்லூரி விடுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். தாங்களாகவே முன்வந்து தகவல் தெரிவிக்காதவர்கள் குறித்து அக்கம் பக்கம் வசிப்பவர்கள் வாட்ஸ்-அப்பில் தகவல் தெரிவிக்கலாம்’ என்று கலெக்டர் சண்முக சுந்தரமே தன் செல் நம்பரைப் பகிர்ந்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு