Published:Updated:

``கடன் பத்தி பேசணும்... காட்டு பங்களாவுக்கு வாங்க!'' - காஞ்சிபுரம் பெண்களுக்கு நேர்ந்த துயரம்?

தாக்குதல்
தாக்குதல்

`நாங்க உள்ளே நுழைஞ்சதும் கதவைச் சாத்திட்டு எங்களைச் சரமாரியா அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி மிரட்டினாங்க. தகாத முறையில் நடந்துகிட்டாங்க.’

காஞ்சிபுரம் பகுதியில் `கடன் பத்தி உங்களிடம் பேச வேண்டும்’ என மகளிர் குழுவைச் சேர்ந்த மூன்று பெண்களைக் காட்டுப் பங்களாவுக்கு அழைத்துச் சென்று துன்புறுத்தி அவர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்டக் கண்காணிப்பாளரிம் புகார் அளித்திருக்கிறார்கள். இந்தப் புகாரின் அடிப்படையில் தற்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

`Holy Land' சாவர்க்கர்..! ராகுல் காந்தியுடன் பி.ஜே.பி-யை முட்டி மோத வைக்கும் சாவர்க்கர் யார்?

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகாவில் உள்ள கிராமம் ஒன்றில் உள்ள பெண்கள், வேளாண்மை நிதி நிறுவனம் ஒன்றில் கடன் பெற்றிருக்கிறார்கள். கடனைச் செலுத்தாததால் அவர்களை பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாக்கி அவர்களிடம் கையெழுத்து பெற்றதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்துப் பாதிக்கப்பட்ட சங்கீதா (பெயர் மாற்றம்) என்பவரிடம் பேசினோம்.

''எங்க மகளிர் குழு மூலமா 2016-ல் மருதம் வேளாண்மை தற்சார்பு கம்பெனியிலயும் காஞ்சி தற்சார்பு வேளாண்மை கம்பெனியிலயும் 16 பேருக்குக் கடன் வாங்கியிருந்தோம். 2017-ல முழுக்கடனையும் அடைச்சுட்டோம். வேற குழுக்களை அவர்களுக்கு அறிமுகம் செஞ்சு வச்சேன். அந்தக் குழுவில நானும் உறுப்பினரா இருக்கேன். நான் அறிமுகப்படுத்தி வச்சதாலும் நானும் ஒரு உறுப்பினர் என்பதாலும் என்னை அவங்க அடிக்கடி பணம் தரச் சொல்லி தொந்தரவு செஞ்சாங்க.

பாதிக்கப்பட்ட பெண்கள்
பாதிக்கப்பட்ட பெண்கள்

`உங்க கடன் முடியாம இன்னும் நிலுவையில இருக்கு. நீங்க கமலா, விமலாவையும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) கூட்டிகிட்டு நெல்வாய் கூட்ரோட்டில் உள்ள அலுவலகத்துக்கு வாங்கன்னு கம்பெனியில சொன்னாங்க. நாங்க மூணு பேரும் ஒரே வண்டியில அந்த அலுவலகத்துக்குப் போனோம். போகும்போதே செல்வி எங்களுக்கு போன் செஞ்சு எங்கே இருக்கோம்னு விசாரிச்சாங்க. நாங்க, இடத்தைச் சொன்னதும் நாராயணன் என்பவர் எங்களை மடக்கினார். `உங்களை வெள்ளைபுத்தூரில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்து வரச் சொன்னாங்க’ன்னு சொன்னார்.`நீங்க நெல்வாய் கூட்டு ரோட்டிக்குத்தானே வரச் சொன்னீங்க. திடீர்னு ஏன் அங்கே வரச்சொல்றீங்க. எங்களால வர முடியாது’ன்னு சொன்னோம். `எங்களை நம்பி வரமாட்டீங்களா… உங்களை நாங்க என்ன செய்திடப்போறோம்’னு அவர் சொல்ல, நாங்களும் அவரை நம்பி வெள்ளைப்புத்தூருக்குப் போனோம்.

காலை 11 மணிக்கு அந்த அலுவலகத்தில் நுழைஞ்சோம். அங்கே பத்துக்கும் மேற்பட்ட ஆண்களும் நான்கு பெண்களும் இருந்தாங்க. நாங்க உள்ளே நுழைஞ்சதும் கதவைச் சாத்திட்டு எங்களைச் சரமாரியா அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி மிரட்டினாங்க. தகாத முறையில் நடந்துகிட்டாங்க. எங்களை கூட்டிட்டுப் போன செல்விகிட்ட நீயும் பொம்பளைதானே ஏன் இப்டி செய்றன்னு கேட்டோம். ‘பொம்பள என்ன… ஆம்பள என்ன கையெழுத்துப் போடச் சொன்னா போடு’ன்னு மிரட்டி கையெழுத்து வாங்கினாங்க. இரவு 7.30 மணிக்குத்தான் எங்களை விட்டாங்க.

பாதிக்கப்பட்ட பெண்கள்
பாதிக்கப்பட்ட பெண்கள்

சம்பவம் நடந்த நாளாவது நாள்ல மதுராந்தகம் போலீஸ் ஸ்டேஷன்'ல புகார் கொடுத்தோம். இது எங்க லிமிட் இல்லை. படாளம் ஸ்டேஷன் போங்கன்னு சொன்னாங்க. படாளத்துக்கு போனா சாலவாக்கம் ஸ்டேஷன் போங்கன்னு சொன்னாங்க. ஒவ்வொரு ஸ்டேஷனா போய் சொல்றதுக்கு அசிங்கமாக இருந்ததால நாங்க அப்படியே விட்டுவிட்டோம். தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்த நிலமையில, போன மாதம் சமூக ஆர்வலர் ஒருத்தர் மூலமா மாவட்ட கண்காணிப்பாளர்கிட்ட புகார் கொடுத்தோம். மதுராந்தகம் டி.எஸ்.பி-யிடம் சொல்லி நடவடிக்கை எடுக்குறதாச் சொல்லியிருக்காங்க” என்கிறார்.

விசாரணை அதிகாரியான மதுராந்தகம் டி.எஸ்.பி மகேந்திரன் உத்தரவின் பேரில் இன்று வழக்கு பதியப்பட்டது.

மருதம் வேளாண்மை தற்சார்பு கம்பெனியின் இயக்குநர்களில் ஒருவரான சிவராஜ் என்பவரிடம் பேசினோம். “எங்கள் மருதம் நிறுவனத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நஞ்சில்லா சாகுபடி திட்டத்தின் கீழ் 4,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு நாங்கள் கடன் கொடுத்துள்ளோம். செல்வி என்பவரும் இந்த நிறுவனத்தில் ஒரு டைரக்டர். செல்வியின் ஏரியாவில் உள்ள அந்தப் பெண்கள் வாங்கிய கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தவில்லை. இரண்டு பேர் நான்கு லட்சத்துக்கு மேலும், ஒருவர் 9 லட்சத்துக்கு மேலும் கடனை கட்டாமல் ஏமாற்றிவந்தார்கள். நேரில் பலமுறை போய் கேட்டு வந்தோம்.

இயற்கை விவசாய ஆராய்ச்சிப் பண்ணை
இயற்கை விவசாய ஆராய்ச்சிப் பண்ணை

மகளிர் குழுவுக்கும் பணத்தைக் கொடுக்காமல் எல்லோரிடமும் கையெழுத்து வாங்கி பணத்தை இவர்களே எடுத்துக்கொண்டு கையாடல் செய்துள்ளார்கள். எங்களுக்குப் பணம் கொடுத்த நிதி நிறுவனத்தில் இருந்து பணம் கேட்டு நெருக்கடி கொடுக்கிறார்கள். அவர்கள் சொல்லும் இடத்தில் வேளாண்மை பயிற்சிப் பண்ணை மற்றும் அலுவலகம் உள்ளது. அன்று மீட்டிங் நடந்துகொண்டிருந்தது. `கடன் வாங்கி நீங்கள் கட்டாமல் இருக்கிறீர்கள். எங்களுக்கு நெருக்கடி உள்ளது’ என அவர்களிடம் செல்வி கேட்டார். அவர்களும் பணம் கட்டுவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்கள். அந்த அலுவலகத்தில் சமையல் செய்பவர்கள் முதல் பணியாளர்கள் வரை அதிக அளவில் பெண்கள்தான் வேலை செய்கிறார்கள். அந்த மூன்று பெண்களில், ஒரு பெண்ணின் கணவரும் சம்பவத்தன்று அங்கு இருந்தார். 6 மாதம் கழித்து பணத்தைச் செலுத்தாமல் இதுபோன்று பிரச்னையைத் திசை திருப்புகிறார்கள்” என்கிறார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு