Published:Updated:

`கைத்தறி நெசவாளர்கள் நிலை மேம்படும்; போலிகள் தவிர்க்கப்படும்’ - `கண்டாங்கி’க்கு கிடைத்த அங்கீகாரம்

அருண் சின்னதுரை
சாய் தர்மராஜ்.ச

கண்டாங்கி சேலையை இனி போலியாகத் தயாரித்தால், சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் பதியப்படும்.

கண்டாங்கி சேலை
கண்டாங்கி சேலை ( சாய்தர்மராஜ் )

பாரம்பர்ய கைத்தறிச் சேலையான கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஈரோட்டு மஞ்சள், கொடைக்கானல் மலைப்பூண்டு, பழநி பஞ்சாமிர்தம் ஆகியவற்றை தொடர்ந்து, திண்டுக்கல் பூட்டுக்கும், கண்டாங்கி சேலைக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

பழனியப்பன்
பழனியப்பன்
சாய்தர்மராஜ்

இது தொடர்பாக, ராஜிவ் காந்தி காரைக்குடி கூட்டுறவு சங்க இயக்குநர் பழனியப்பன், "காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்தது மிகப்பெரும் வெற்றி. பல ஆண்டுகள் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது. இதனால் கண்டாங்கி சேலை, கைத்தறி சேலை என்று கூறி பவர்லூம் சேலையை விற்பனை செய்ய முடியாது. இதனால் உண்மையான கைத்தறி நெசவாளர்களின் நிலை மேம்படும்.

சாயம் போகாத கண்டாங்கியை வாடிக்கையாளர்களும் பெற முடியும். கண்டாங்கி சேலை குளிர் காலத்திற்கும் வெயில் காலத்திற்கும் ஏற்றது. அதிக கெமிக்கல்ஸ் கொண்டு செய்யப்படும் சேலைகளுக்கு, சில மணி நேரத்தில் நிறத்தை ஏற்றிவிடலாம்.

கண்டாங்கி சேலை
கண்டாங்கி சேலை
சாய்தர்மராஜ்

கண்டாங்கி சேலையில் நிறம் ஏற்ற ஒரு வாரம்கூட ஆகும். ஆனால் கண்டாங்கி சேலை, சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாது. பல வருடங்கள் போராட்டத்துக்குப்பின் கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்தது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. கண்டாங்கி சேலைக்கு முக்கியமாக மூலப்பொருள், எங்கள் பகுதி தண்ணீர்" என்றார்.

கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தர முயற்சி எடுத்த அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சஞ்சய் காந்தி கூறுகையில், ``கண்டாங்கி சேலை 150 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானது. கிழவன் சேதுபதி காலம் முதல் கண்டாங்கி சேலை இருந்துவந்துள்ளது. காரைக்குடியை மையமாகக் கொண்டு சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை பகுதிகளுக்கு இந்தச் சேலைகள் அதிகமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. நகரத்தார் சமூகம் அதிகமாகப் பயன்படுத்தி வந்த சேலை, தற்போது வெளிநாடுகள் வரை பிரபலம் அடைந்துள்ளது.

சஞ்சய் காந்தி
சஞ்சய் காந்தி
சாய்தர்மராஜ்

இதனால் அரசுத் தரப்பில் நியமிக்கப்பட்ட நான், இதற்காக ஆய்வுப் பணிகளைச் செய்தேன். கடந்த 2013 மே மாதம், கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடுக்குத் தேவையான ஆவணங்கை ஒப்படைத்தோம். இதற்கான பரிசோதனை முடிவு பெற்று, ஆகஸ்ட் 29 -ம் தேதி புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. காரைக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில், குறிப்பிட்ட விதியின் கீழ் கண்டாங்கி சேலை தயார் செய்ய முடியும். போலிகள் தவிர்க்கப்படும். கண்டாங்கி சேலையின் மவுசு கூடி கைத்தறி நெசவு எழுச்சிபெறும். என்னுடைய முயற்சியில், கடந்த 18 ஆண்டுகளில் தமிழகத்தில் 18 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தந்துள்ளேன். கண்டாங்கி சேலையை இனி போலியாகத் தயாரித்தால், சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் பதியப்படும்" என்றார்.