Published:Updated:

`நகரம் சுத்தமா இருக்க, எல்லா குப்பையையும் எங்க தலையில கொட்றாங்க!' - கழிவு மேலாண்மையில் திணறும் ஊட்டி

ரா.சதீஸ்குமார்
கே.அருண்

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், திடக்கழிவு மேலாண்மை மையம், இயற்கை உரம் தயாரிப்பு என அறிவிக்கப்படாத குப்பைக் கிடங்காவே காந்தல் பகுதியை ஊட்டி நகராட்சி மாற்றிவிட்டதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Kandhal
Kandhal ( கே.அருண் )

நீலகிரி மாவட்டத்தில் கழிவு மேலாண்மை தற்போது மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது. ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்லும் நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரில் மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 15 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய பகுதிகளில் குப்பைகளைக் கையாள முடியாமல் நகராட்சிகள் திணறி வருகின்றன.

Kandhal
Kandhal

கூடலூர் மற்றும் தீட்டுக்கல் கிடங்குகளில் கொட்டப்படும் குப்பைகளால் வன விலங்குகள் ஈர்க்கப்பட்டு உணவுக் கழிவுகளை உண்டு நோய் பாதிப்படைகின்றன. அதேபோல் குன்னூர் ஒட்டுப்பட்டரை பகுதியில் கொட்டப்படும் கழிவுகளால் அப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்பட்டு நாள்தோறும் அவதியடைந்து வருகின்றனர்.

ஊட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் சுமார் 25,000 குடியிருப்புகள், 2,000-த்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நகரில் நாள்தோறும் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்து வகையான கழிவுகளும் நகராட்சி மூலம் சேகரிக்கப்பட்டு வாகனங்கள் மூலம் தீட்டுக்கல் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்படுகிறது. அங்கு மக்கும், மக்காத குப்பைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு மக்காத குப்பைகள் காந்தலில் உள்ள மையத்தின் மூலம் மறுசுழற்சி செய்யப்படுகிறது. தற்போது பாதியளவு குப்பைகள் பிரிக்கப்படாமல் நேரடியாக காந்தல் மறுசுழற்சி மையத்தில் கொட்டப்பட்டு அங்கு பிரிக்கப்படுகிறது.

Kandhal
Kandhal

பல ஆயிரம் பேர் வசிக்கும் காந்தல் பகுதியில் ஏற்கெனவே பல கழிவு மேலாண்மை திட்டங்கள் அனைத்தும் கொண்டுவரப்பட்டு இந்தப் பகுதியை குப்பைக் கிடங்காக மாற்றி மக்கள் வாழ தகுதியற்ற இடமாக ஊட்டி நகராட்சி மாற்றிவருகிறது. இந்த நிலையில், தற்போது குடியிருப்பு அருகில் டன் கணக்கில் குப்பைகளைக் குவித்து வைத்துள்ளனர். இதனால் இந்தப் பகுதியில் வாழவே முடியவில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து காந்தல் பகுதிச் சேர்ந்த வனிதா கூறுகையில் ``எங்களை இந்த அதிகாரிங்க மனுஷங்களா நினைக்குறதே இல்ல. யாரும் இந்த வழியா நடந்துபோனாகூட குமட்டும். அவ்வளவு மோசமா இருக்கு நாற்றம். இப்படியிருக்கும்போது நாங்க எப்படி குழந்தைகள வச்சிக்கிட்டு இங்க வாழறது? ஒரு வாரமா எல்லா குப்பையும் இங்கயே தேங்கிக் கிடக்கு. இதனால் ஊர்ல பல பேர் வாந்தி வயிற்றுவலின்னு ஆஸ்பத்திரியில இருக்காங்க. டவுன் நல்லா இருந்தாபோதும்னு எல்லா குப்பையையும் எங்க தலையில கொட்டுறாங்க. இதவிட்டா நாங்க வேற எங்கபோவோம்” என கண்ணீர் வடிக்கிறார்.

Kandhal
Kandhal

இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த ரவி கூறுகையில், ``கழிவு மேலாண்மை குறித்த எந்தத் திட்டம் வந்தாலும் அதை செயல்படுத்த காந்தல் பகுதியை அதிகாரிகள் தேர்வு செய்கின்றனர். உழைக்கும் ஏழை மக்கள் நிறைந்த இந்தப் பகுதியில் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற காரணத்தால் ஏற்கெனவே பல்வேறு கழிவு மையங்கள் அமைக்கப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மறுசுழற்சி மையத்தில் நேரடியாகக் குப்பைகளைக் கொட்டி வைக்கின்றனர். இதைக் கண்டித்து அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டோம்'' என்றார்.

மக்களின் புகார் குறித்து ஊட்டி நகராட்சி ஆணையர் பாண்டிய நாராயணனிடம் கேட்டபோது, ``2016 நீதிமன்ற உத்தரவுப்படி சேகரிக்கும் குப்பைகளை நேரடியாக கொட்டமுடியாது. மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைப் பிரிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு ஊட்டியில் மட்டும் 15 முதல் 20 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில் உலர் கழிவுகள் 6 டன் வரை பிரிக்கப்படுகிறது. அவ்வப்போது பெய்த மழையால் கந்தல் பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டது. தற்போது அகற்றும் பணிகள் நடைபெற்றுவருகிறது” என்பதோடு முடித்துக் கொண்டார்.