Published:Updated:

`பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு பச்சை துரோகம் செய்கிறார் முதல்வர்!’ - கனிமொழி எம்.பி காட்டம்

கனிமொழி
கனிமொழி

``மக்களைச் சந்திக்காத முதலமைச்சர் தற்போது தேர்தலுக்காக மக்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து மக்களைச் சந்திக்ககூடியவர்கள் திராவிடக் கட்சியினர்தான்” - கனிமொழி

`விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற வாசகத்தோடு தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். காரைக்குடி, திருப்பத்தூர், எஸ்.புதூர், சிங்கம்புணரி எனப் பல இடங்களில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். வழிநெடுக அண்ணா சிலை , பெரியார் சிலை, தமிழ்த்தாய் சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காலையில் ஆரம்பித்த அவரது பயணம் தொடர்ந்து இரவு 10 மணி வரை நடைபெற்றது. அப்போது பல்வேறு இடங்களில் அவர் பேசியதாவது, ``கிராமச் சாலைகளை விடுத்து, எட்டுவழிச் சாலை, பத்துவழிச் சாலை போடுகின்றனர். அதில்தான் அவர்களுக்கு வருமானம் வருகிறது. அதேபோல் தேவையில்லாத பகுதிகளில் பாலம் அமைக்கின்றனர். சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வசதி கடந்த 10 ஆண்டுகளில் வழங்கப்படவில்லை. மானியம் கிடையாது.

மாற்றுத்திறானிகளுடன் கனிமொழி
மாற்றுத்திறானிகளுடன் கனிமொழி

தி.மு.க ஆட்சியில் சிறப்பாக செயல்பட்ட சுயஉதவிக்குழு இன்று செயல்படவே இல்லை. 100 நாள் வேலைத் திட்டத்தில்கூட ஊழல் நடக்கிறது. ஸ்டாலின் முதல்வரானால் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். `நான் விவசாயி ’எனக்கூறும் எடப்பாடி பச்சைத் துண்டைக் கட்டிக்கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்கிறார்.

மக்களைச் சந்திக்காத முதலமைச்சர் தற்போது தேர்தலுக்காக மக்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து மக்களைச் சந்திக்கக்கூடியவர்கள் திராவிடக் கட்சியினர்தான். தொடர்ந்து மக்களைச் சந்திப்பதற்கான ஒரு முயற்சிதான் கிராமசபைக் கூட்டம். பேரறிவாளன் விடுதலை விஷயத்தில் தி.மு.க-வின் நிலைப்பாடுதான் என்னுடைய நிலைப்பாடும். சசிகலா பூரணமாக நலமடைந்து திரும்ப வேண்டும்.

விடியலை நோக்கி
விடியலை நோக்கி

தமிழ்நாட்டில் 23 லட்சம் பேர் வேலை இல்லாமல் தவித்துவருகின்றனர். தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் தமிழ்நாட்டில் முதலீடுகள் கொண்டுவரப்பட்டு, அனைவருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கித் தரப்படும். தி.மு.க ஆட்சியில் இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்ய மாட்டோம். வேளாண் சட்டங்களை நிறைவேற்ற மாட்டோம். இன்னும் மூன்று மாதங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

சிங்கம்புணரி பகுதியிலுள்ள பறம்புமலை பாதுகாக்கப்படும். தி.முக ஆட்சியில்தான் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனித்துறை அமைக்கப்பட்டது. நல வாரியம் தொடங்கப்பட்டதும் கலைஞர் ஆட்சியில்தான். தி.மு.க ஆட்சிக்குப் பிறகு மாற்றுத்திறனாளிகள் எத்தனை போராட்டம் நடத்தியும் எந்தப் பயனும் இல்லை.

மேடையில் பெரியகருப்பன்
மேடையில் பெரியகருப்பன்

தி.மு.க ஆட்சி வந்ததும் மாற்றுத்திறனாளிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய சலுகைகளை மத்திய அரசு புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும். கோயில்களுக்குள் செயற்கைக்கால் பொருத்தியவர்கள் செல்வதற்கு சாய்வுதளம் அமைக்க வேண்டும்“ என்று பேசி, கோரிக்கையும் கோரிக்கை விடுத்தார்.

அடுத்த கட்டுரைக்கு