Published:Updated:

தூத்துக்குடி:``படிச்சிருந்தும் அகதினு வேலை தர மாட்டேங்கறாங்க!"-கனிமொழியிடம் முறையிட்ட முகாம் மக்கள்

முகாமிலுள்ள பெண்களிடம் குறை கேட்ட கனிமொழி
முகாமிலுள்ள பெண்களிடம் குறை கேட்ட கனிமொழி

”நாங்க இருக்கோமா இல்லையான்னுகூட யாரும் எட்டிப்பார்த்தது இல்லை. எங்களை நேர்ல பார்க்க வந்ததோட அரிசி, காய்கறினு நிவாரணப் பொருள் கொடுத்ததைப் பெருசா நினைக்கிறோம்” என நெகிழ்கின்றனர் தூத்துக்குடி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மக்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாப்பாத்தி, குளத்துள்வாய்பட்டி, மாப்பிளையூரணி ஆகிய மூன்று இடங்களில் இலங்கை அகதிகள் முகாம் செயல்பட்டுவருகிறது. இதில், தாப்பாத்தியில் செயல்பட்டுவரும் இலங்கை அகதிகள் முகாமுக்கு தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி நேரில் சென்றார். அங்குள்ள மக்கள் கைத்தட்டி, ஆரவாராம் எழுப்பி அவரை வரவேற்றனர்.

கனிமொழியிடம் பேசும் சிறுமி பிருத்திகா
கனிமொழியிடம் பேசும் சிறுமி பிருத்திகா

முகாமிலுள்ள பெண்கள், அவரவர் வீடுகளுக்கு அழைத்தனர். ஒவ்வொரு வீடாகச் சென்று பார்வையிட்டார். அப்போது, முகாமிலுள்ள மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவருக்கு, கனிமொழி 500 ரூபாய் வழங்கினார்.

அந்த முகாமிலுள்ள 475 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணமாக தலா 5 கிலோ அரிசி, காய்கறித் தொகுப்புகளை வழங்கினார். பின்னர், கழிப்பறை வசதிகள், தாழ்வாகச் செல்லும் மின் வயர்கள், கூடுதலாகக் குப்பைத் தொட்டிகள், தண்ணீர் தேக்கத் தொட்டிகள் அமைக்க வேண்டும் எனப் பல கோரிக்கைகளை அந்த மக்கள் முன்வைத்தனர்.

கனிமொழியிடம் ரூ.500 பெற்ற மனநிலை பாதிக்கப்பட்ட  செய்த்தூன் பீவி
கனிமொழியிடம் ரூ.500 பெற்ற மனநிலை பாதிக்கப்பட்ட செய்த்தூன் பீவி

தாப்பத்தி இலங்கை அகதிகள் முகாமின் நிர்வாகக்குழுச் செயலாளர் அருள்ராஜ், “இந்த முகாம்ல அகதிகளா வாழ்ந்துக்கிட்டிருக்கோமே தவிர எங்களை இதுவரைக்கும் எந்தத் தலைவருமே வந்து சந்திச்சதில்லை. எங்களோட குறைகளைக் கேட்டதுமில்லை. எம்.பி-ங்கிற முறையில முதல் தடவையா கனிமொழி மேடம்தான் எங்களை வந்து சந்திச்சது மட்டுமில்லாம, அரிசி, காய்கறித் தொகுப்புகளைக் கொடுத்திருக்காங்க. இதை ரொம்பப் பெருசா நினைக்கிறோம்.

தமிழ்நாட்டில் முகாமில் பதிவு செய்யாமல் வெளியில் வசிக்கும் 13,513 குடும்பங்களுக்கும் அரசின் கொரோனா நிவாரணத்தொகை ரூ.4,000 வழங்கியதற்காக தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவிச்சோம். காவல் நிலையங்களில் பதிவு செய்து, ரேஷன் அட்டை பெறாமல் இந்த முகாம்ல 15 குடும்பங்கள் இருக்குது. இவர்களைப்போல தமிழகம் முழுவதுமுள்ள முகாம்களில் தனிக் குடும்பமா வசிச்சுக்கிட்டு வர்ற குடும்பத்தினருக்கும் அரசு நிவாரணத்தொகை வழங்கிடணும்கிற கோரிக்கையையும் முன்வெச்சோம். முகாம்களில் பலரும் டிப்ளோமா, டிகிரி முடிச்சிருக்காங்க.

நிவாரணத் தொகுப்பு
நிவாரணத் தொகுப்பு

தனியார் கம்பெனிகள்ல வேலைக்குப் போனாக்கூட ’அகதி’ன்னு தெரிஞ்சதும் வேலை இல்லை, வேற கம்பெனியைப் பாருங்கன்னு சொல்லிடுறாங்க. அதனால, தனியார் கம்பெனிகள்ல வேலைக்குச் சேருறதுக்காக உதவி செய்யுங்கன்னு மேடம்கிட்ட கோரிக்கைவெச்சிருக்கோம். அதோட குடியுரிமை சம்பந்தமான கோரிக்கையையும் முன்வெச்சிருக்கோம். எங்களோட கோரிக்கைகளை நிறைவேற்றுவாங்கன்னு நம்பிக்கையில இருக்கோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு