Published:Updated:

குமரி மாவட்டத்தில் ஆலைகள் எப்போது திறக்கலாம்?! -ஆட்சியர் வெளியிட்ட புதிய அறிவிப்பு

குமரி கலெக்டர் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே
குமரி கலெக்டர் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே

ஊரடங்கு நேரத்தில் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பலசரக்கு மற்றும் காய்கறிக் கடைகள் திறந்ததைப் போன்றே 9-ம் தேதிவரை திறக்க வேண்டும் புதிதாக எந்தக் கடைகளும் திறக்கக் கூடாது.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் இம்மாதம் 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அந்தந்த மாநிலங்களின் நிலைமைக்கு ஏற்ப தளர்வு ஏற்படுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கிராமங்களில் உள்ள தனிக்கடைகள், ஹார்டுவேர்ஸ் உள்ளிட்ட கட்டுமான விற்பனை நிலையங்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம் எனவும், மொபைல் கடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவை காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை இயங்கலாம் எனவும், ஐ.டி. கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்கள் குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு செயல்படலாம் என்பது போன்ற தளர்வுகளை அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் காலை முதலே கட்டுமான பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் கார், பைக் போன்றவை சாலையில் தாராளமாக ஓடின. பல வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டன.

கொரோனா ஆய்வுப் பணியில் குமரி கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே
கொரோனா ஆய்வுப் பணியில் குமரி கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பதாகவும், வரும் 9-ம் தேதிக்குப் பிறகுதான் தனிக்கடைகள் திறக்க அனுமதிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``தமிழக அரசால் ஊரடங்கு நேரத்தில் தளர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ள பணிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 9-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

ஏற்கெனவே ஊரடங்கு நேரத்தில் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள் திறந்ததைப் போன்றே 9-ம் தேதிவரை திறக்க வேண்டும். புதிதாக எந்தக் கடைகளும் திறக்கக் கூடாது. மேலும், ஊரக மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே உள்ள அனைத்துத் தொழிற்சாலைகளும் 50 சதவிகிதம் தொழிலாளர்களைக் கொண்டு இயங்கலாம். ஒரே நேரத்தில் திறப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால் படிப்படியாக திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை
கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை

அதன்படி மீன்பிடி வலை தயாரிக்கும் கம்பெனிகள் 50 சதவிகிதம் பணியாளர்களைக் கொண்டு 4-ம் தேதி முதல் இயங்கலாம். 5-ம் தேதி முதல் செங்கல் சூளைகளும், 6-ம் தேதிமுதல் கையுறை தயாரிக்கும் கம்பெனிகளும், 8-ம் தேதி முதல் தென்னை நார் தயாரிக்கும் ஆலைகளும் இயங்கலாம். ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு