Published:Updated:

`கலைநகரமாக உருவெடுக்கும் கண்ணகி நகர்!' - வெளிநாட்டு ஓவியரின் வண்ணத்தால் நெகிழும் மக்கள் #SpotVisit

சுவர் ஓவியங்கள்
சுவர் ஓவியங்கள்

``ப்ளாக்கெல்லாம் சுத்தம் பண்ணி அழகா வரைஞ்சு வச்சிருக்காங்க. பெருசா வரையுறாங்க. கலர் ஃபுல்லா இருக்கு. எங்களுக்கும் வரையணும்னு தோணுது” என நெகிழ்கிறார்கள் குழந்தைகள்.

சென்னையிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் ஐ.டி கட்டடங்களின் நடுவே அமைந்துள்ளது, கண்ணகி நகர். எதிர்மறையான செய்திகளால் அறியப்படும் புறநகர் குடியிருப்புப்பகுதி இது. கண்ணகி நகரின் அருகில் எழில் நகர், சுனாமி குடியிருப்புக் கட்டடங்கள் ஆகியவையும் உள்ளன. இங்குள்ள கட்டடங்களின் சுவர்களில் சுவரோவியங்கள் வரையப்பட்டு வருகிறது எனும் செய்தியை அறிந்தோம். கலை நிச்சயம் எல்லோருக்கும் உரியதுதான். ஆனால், அன்றாட வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கே போராடி வரும் மக்களின் பார்வையில் இந்த ஓவியங்கள் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள கண்ணகி நகருக்கு ஸ்பாட் விசிட் செய்தோம்.

சுவர் ஓவியம்
சுவர் ஓவியம்

நண்பர்களுடன் லாங் டிரைவ் செல்லும் ஈ.சி.ஆர் சாலையிலிருந்து பிரிந்துசெல்லும் ஒரு குறும்பாதை கண்ணகி நகருக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. பள்ளிக்கூடம் முடிகிற வேளையாக இருந்ததால் ஏராளமான குழந்தைகளின் சத்தங்களுடன் எப்போதும்போலவே சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது கண்ணகி நகர். ஆரஞ்சு, மஞ்சள், பச்சை எனப் பல்வேறு வண்ணங்களுடன் முகப்பிலிருந்த கட்டடம் ஒன்று நம்மை நகருக்குள் வரவேற்றது. இது என்னவாக இருக்கும் எனச் சில குழந்தைகள் அதன் முன்பு நின்று பேசிக்கொண்டிருந்தனர். இன்னும் சில கட்டடங்களில் சுவர்களில் இரண்டு குழந்தைகள் சிரித்துக்கொண்டிருக்கும் ஓவியம், காப்பாளர் என்ற பெயரில் பெண் ஒருவரின் ஓவியம் ஆகியவை பிரமாண்டமாக நின்று மக்களைப் பார்த்துக்கொண்டிருந்தன.

சென்னை மாநகராட்சி, ஸ்டார்ட் இந்தியா என்ற தன்னார்வ அமைப்பு மற்றும் ஏசியன் பெயிண்ட் நிறுவனம் இணைந்து இந்தப் பகுதியிலுள்ள கட்டடங்களின் வெளிச்சுவரில் சுமார் 14 சுவரோவியங்களை வரையும் பணியை மேற்கொண்டு வருகிறது. ஒன்பது வகையான ஓவியங்களை ஆஸ்திரேலியா, கனடா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 15 ஓவியர்கள் இங்கு வரைந்து வருகின்றனர். இவர்களில் இந்தியாவைச் சேர்ந்த ஓவியர்களும் அடங்குவர். மார்ச் மாதம் வரை இந்தப் பணி நடைபெற உள்ளது.

ஸ்டார்ட் இந்தியா அமைப்பின் பொறுப்பாளர்கள் இதுதொடர்பாகப் பேசுகையில், ``எங்களுடைய நோக்கமே கலையை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான். ஆர்ட் கேலரிகளில் ஒருசிலர் மட்டுமே சென்று இதுபோன்ற ஓவியங்களைப் பார்க்க முடியும். ஆனால், இங்கு வரையப்பட்டு வரும் ஓவியங்களை 24 மணிநேரமும் பார்க்கலாம். யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். கலை நகரமாக இதை உருவாக்கி வருகிறோம்” என்றனர்.

மேலும், இதுமாதிரியான ஸ்ட்ரீட் ஓவியங்களை ஏற்கெனவே டெல்லி, ஹைதராபாத், கோவா மற்றும் மும்பை நகரங்களின் குடிசைப்பகுதிகளில் வரைந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

ஸ்டார்ட் இந்தியா அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்
ஸ்டார்ட் இந்தியா அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்

வெறும் ஓவியங்களை மட்டும் வரைந்துவிட்டுச் செல்லாமல் இப்பகுதியிலுள்ள குழந்தைகளின் தனித் திறன்களைக் கண்டுபிடித்து அதை வெளிக்காட்ட அவர்களுக்கென மேடை அமைத்து தர உள்ளோம் என்றவர்கள், ``ஆரம்பத்தில் வரையத் தொடங்கும்போது மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை. அவர்களுக்கு ஏதோ பிரச்னை வரப்போகிறது என்ற மனநிலையில் இருந்தனர். ஓவியங்களை வரைந்து முடிக்கும்போது அதிகமாக வரவேற்பு இருந்தது. பால்கனியில் துணி காயப்போட்டுருந்தாங்க, இப்போ அதெல்லாம் எடுத்துட்டாங்க சுத்தமாகப் பராமரிக்கின்றனர்” என்றும் கூறினர்.

அன்னை சத்யா நகர் ஹவுஸிங் போர்டு... நம்பர் 465! - இது அன்பின் முகவரி!

``ப்ளாக்கெல்லாம் சுத்தம் பண்ணி அழகா வரைஞ்சு வச்சிருக்காங்க. பெருசா வரையுறாங்க. கலர் புல்லா இருக்கு. எங்களுக்கும் வரையணும்னு தோணுது” என்று பள்ளி மாணவர்கள் ஓவியத்தைப் பற்றிப் பேசினர். குழந்தைகளுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த பெரியவர்களும், ``ப்ளாக்கு எல்லாம் பார்க்க நல்லாருக்கணும், சுத்தமாகப் பராமரிக்கப்படணும் அப்டினு இதெல்லாம் பண்றாங்க. போஸ்டர்லாம் நிறைய ஒட்டுவாங்க. இனி அதெல்லாம் ஒட்ட முடியாது. எல்லா ப்ளாக்லயும் பண்ணா நல்லாருக்கும்” என்று தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். துணியெல்லாம் பெயின்ட்... இப்படி வரைஞ்சா எங்க துணிய காயப்போடுறது என்று மற்றொருபுறம் வருத்தத்தையும் தெரிவித்தனர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஓவியர்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஓவியர்

கண்ணகி நகர்ப் பகுதியில் ஓவியங்கள் வரைந்துகொண்டிருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஓவியர் தனது அனுபம் குறித்து பகிர்ந்துகொண்டார். அவர் நம்மிடம்,``இந்தியாவில் பல்வேறு இன மக்களைப் பார்க்க முடிகிறது. வரையத் தொடங்குவதற்கு முன்பு மக்கள் கூடுகிற சந்தைகள், கோயில்கள் எனப் பல இடங்களுக்கு இங்குள்ளவர்கள் என்னை அழைத்துச்சென்றனர். இங்கு வரையப்படுகின்ற ஓவியங்கள் மக்களுடைய நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. நான் வரைகிற ஓவியம் சந்தையில் அமர்ந்திருக்கும் ஒருவரைப் பற்றியதுதான். தீஸ் பீப்பிள் ஆர் ரியலி அமேசிங்” என்று மகிழ்ச்சியுடன் பேசினார்.

இதுகுறித்து சமூகச் செயற்பாட்டாளர் இசையரசுவிடம் கேட்டோம். ``வீடு என்பது ஒரு அதிகாரம். வீடு என்று சொல்ல முடியாத ஒரு இடத்தில் வசித்த மக்களுக்கு வீடு கொடுத்து, அதில் ஓவியம் வரைந்தால் மகிழ்ச்சிதானே! அதை அப்படியே நாம் எதிர்க்கத் தேவையில்லை. அனைவருக்கும் கல்வி, குடிநீர், மருத்துவம் ஆகியவைதான் உண்மையிலேயே வண்ணமயமான சூழல். நிலம் சார்ந்த அரசியல் பிரச்னையாக இந்த எவிக்க்ஷன் மாறக்கூடாது என்பதற்காக வெளியில் பூசப்படும் பூச்சுதான் இந்த வண்ணமயம்” என்றார்.

இசையரசு
இசையரசு

தொடர்ந்து பேசிய அவர், ``கண்ணகி நகர் பகுதிகளில் வசிப்பவர்கள் பெரும்பாலும் கார்ப்பரேஷன் ரோடு கிளீன் பண்றவங்க, மலக்குழியில் இறங்கி வேலை செய்றவங்க, ஆட்டோ ஓட்டுறவங்களாகத்தான் இருப்பாங்க. விடியுறதுக்கு முன்னாடி வேலைக்குப் போனா, இருட்டுனதுக்கு அப்புறம்தான் வீட்டுக்கே வருவாங்க. அப்படியான ஆட்களின் மனநிலையிலிருந்து இந்த ஓவியங்களை எப்படி பார்க்க முடியும். அடிப்படை வாழ்வாதாரமே இல்லை என்ற மிகப்பெரிய பிரச்னை இருக்கும்போது இந்த ஓவியங்கள் ஏமாற்று வேலைதானே? இப்படியான சூழலில் அடிப்படை பிரச்னைகளைப் பற்றி உரையாடாமல் பொது சமூகத்தோட அழகியல் பற்றி உரையாடுவதில் என்ன பயன்? கடந்துதான் போக முடியும்” என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள இந்தத் திட்டம் குறித்து நம்மிடம் பேசிய சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் ஜான் ஆல்பி, ``மிகச்சிறந்த கலை வடிவங்களைப் பார்க்க வேண்டுமெனில் கேலரிக்குதான் போக வேண்டும். ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் அங்கு போக முடியும். அன்றாட வாழ்வில் மக்கள் புழங்கும் இடங்களில் கலையைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட முயற்சிதான் இது. ஆண்டுதோறும் கண்ணகி நகரிலுள்ள கட்டடங்களின் சுவர்களில் ஓவியங்கள் வரையப்படும். சில வருடங்களில் சிறிய கலை நகரமாக உருவாகும்” என்றார்.

சுவர் ஓவியம்
சுவர் ஓவியம்
இப்படியான சூழலில் அடிப்படை பிரச்னைகளைப் பற்றி உரையாடாமல் பொது சமூகத்தோட அழகியல் பற்றி உரையாடுவதில் என்ன பயன்?
சமூகச் செயற்பாட்டாளர் இசையரசு

மேலும், ``கல்வி, சுகாதாரம் என வாழ்வாதாரப் பிரச்னைகள் அங்கு இருப்பது எங்களுக்கும் தெரியும். இதுதொடர்பான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறோம். அங்கு வசிக்கும் இளைஞர்கள் தவறான வழியில் செல்வதாகக் காவல்துறையினர் கூறுகிறார்கள். அவர்களின் மனநிலையை மாற்றக்கூட இந்த மாதிரியான கலைகள் பயன்படும். ஓவியங்களைப் பார்க்க பல பகுதிகளிலிருந்து மக்கள் வரும்போது அவர்களுக்குள் என்கேஜ்மென்ட் அதிகமாக ஏற்படும்" என்றார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு