Published:Updated:

அரசுப் பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட நாடோடி பழங்குடியின குடும்பம்; ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்!

பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட நரிக்குறவர் சமூகத்தினர்.
News
பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட நரிக்குறவர் சமூகத்தினர்.

குளச்சலில் மீனவ மூதாட்டியை, நாற்றம் எடுப்பதாகக் கூறி பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நாடோடியின சமூகத்தைச் சேர்ந்த முதியவர், பெண், குழந்தை ஆகியோரையும் இறக்கிவிட்டுள்ள சம்பவம் இப்போது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் மீன் விற்றுவிட்டு அரசுப் பேருந்தில் வீடு திரும்ப நினைத்த செல்வமேரி என்ற மூதாட்டியை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டதாகக் கடந்த சில நாள்களுக்கு முன் ஒரு வீடியோ பரவியது. மீன் விற்றுவிட்டு வந்ததால் நாற்றம் எடுப்பதாகக் கூறி பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட அந்த மூதாட்டி நியாயம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து பஸ் கண்டக்டர், டிரைவர் மற்றும் சமய குறிப்பாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முதல்வர் ஸ்டாலின் இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாடோடி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த முதியவர், பெண் மற்றும் ஒரு குழந்தை ஆகியோரை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட மற்றொரு வீடியோ இப்போது வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து வள்ளியூர் மார்கமாக திருநெல்வேலி செல்லும் அரசுப் பேருந்தில் இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரியவந்தது.

இறக்கிவிடப்பட்டவர்கள் சாலை ஓரத்தில்
இறக்கிவிடப்பட்டவர்கள் சாலை ஓரத்தில்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நாடோடி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த குடும்பம் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட காரணம் என்னவென்று பேருந்து நிலையத்தில் விசாரித்தோம். ``நாகர்கோவிலில் உள்ள வடசேரி பேருந்து நிலையத்திற்கு வள்ளியூர் பகுதியில் இருந்து பேருந்தில் நாடோடி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பலரும் குழுக்களாக வருவது வழக்கம். இவர்கள் வடசேரி பேருந்து நிலையத்திலும், பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஊசி, பாசி உள்ளிட்டவற்றை விற்பனை செய்பவர்கள். பின்னர் மாலை நேரத்தில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்தில் பயணித்து வள்ளியூர் சென்றுவிடுவர்.

இந்த நிலையில் இன்று, திருநெல்வேலி பேருந்தில் பயணிக்க நாடோடி பழங்குடியின சமூகத்தினர் மூன்று குழுக்களாக ஏறினர். அப்போது சிலர் மது அருந்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. வடசேரி பேருந்து நிலையத்தின் உள்ளிருந்து வெளியே வருவதற்குள், அவர்களுக்குள்ளேயே சண்டை ஏற்பட்டுள்ளது. பேருந்திற்குள் சத்தம்போட்டுக்கொண்டே பிரச்னை செய்ததால் மற்ற பயணிகள் முகம் சுழித்துள்ளனர். சிலர் நடத்துனரிடம், `தகராறு செய்பவர்களை இறக்கிவிடாமல் இருந்தால் நாங்கள் பஸ்ஸில் இருந்து இறங்கிவிடுவோம்' எனச் சத்தமிட்டுள்ளனர். இதையடுத்துதான் பேருந்து நிலையத்துக்கு வெளியே அவர்கள் இறக்கிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது" என்று நம்மிடம் தெரிவித்தனர் சிலர்.

வெளியான வீடியோ
வெளியான வீடியோ

``நாடோடி பழங்குடியின மக்கள் ஏற்கெனவே அவர்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டிருந்ததால் அழுது கொண்டு இருந்த குழந்தை, பேருந்தில் இருந்து இறங்கும்போது அழுதுகொண்டே இருந்தது. இதை யாரோ வீடியோ எடுத்துப் பரப்பியுள்ளனர். பார்ப்பவர்களுக்கு பஸ்ஸில் இருந்து இறக்கிவிட்டதால் குழந்தை அழுவதாகத் தோன்றும். அவர்களை அழைத்துச் செல்வதற்காகத்தான் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்ஸில் ஏற்றினோம். தகராறு காரணமாகத்தான் இறக்கிவிடப்பட்டனர். இதில் எந்தப் பாகுபாடும் இல்லை. மீனவ மூதாட்டி பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவத்துக்கும் இதற்கும் முடிச்சுப்போட வேண்டாம். இதுகுறித்து விரிவாக விசாரித்து வருகிறோம்" என்றனர் அரசு போக்குவரத்துத் துறையினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``பேருந்தில் மது அருந்திவிட்டுப் பயணிக்கும், சச்சரவு செய்யும் எல்லோருமே இறக்கிவிடப்படுகிறார்களா? இந்த மக்களுக்கு மட்டும் ஏன் இது நடந்துள்ளது?'' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இந்த நிலையில் நாடோடி பழங்குடியினக் குடும்பத்தை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் நெல்சன் மற்றும் நடத்துநர் ஜெயபாலன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அருகில் உள்ள நிலைய காப்பாளரிடம் தெரிவிக்காமல் டிரைவரும், கண்டக்டரும் தன்னிச்சையாக முடிவெடுத்ததாகவும், பொறுப்பற்ற முறையில் பணி செய்து அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியதாகவும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மீனவ மூதாட்டியைத் தொடர்ந்து, நாடோடியின சமூகத்தைச் சேர்ந்த குடும்பமும் அரசுப் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டது, அந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது, அரசு நடவடிக்கை பாய்ந்தது என இந்த இரண்டு சம்பங்களும் அடுத்தடுத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.