Published:Updated:

`அனுமதியின்றி திறக்கப்பட்ட பாரதமாதா சிலை; மூடிய போலீஸார்!’ - குமரியில் பா.ஜ.க மறியல்

பாரதமாதா சிலையைத் திறந்த பா.ஜ.க. மாவட்டத் தலைவர் தர்மராஜ்
பாரதமாதா சிலையைத் திறந்த பா.ஜ.க. மாவட்டத் தலைவர் தர்மராஜ்

தனியார் கோயில் காம்பவுண்டுக்குள் வைக்கப்பட்ட பாரதமாதா சிலையால் எப்படி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்பது தெரியவில்லை’.

கன்னியாகுமரி அருகே தென்தாமரைகுளத்தை அடுத்த காட்டுவிளை ஜங்ஷனில் உள்ள இசக்கி அம்மன் கோயில் வளாகத்தில் சுமார் ஐந்தடி உயரம் கொண்ட பாரதமாதா சிலை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அமைக்கப்பட்டது. அதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போலீஸில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து சிலையை அகற்றுமாறு போலீஸார் உத்தரவிட்டனர். ஆனால், சிலை அகற்றப்படாததால் நேற்று கன்னியாகுமரி டி.எஸ்.பி பாஸ்கரன் தலைமையில் ஏராளமான போலீஸார் அங்கு சென்று பாரதமாதா சிலையை  துணியால் மூடினர்.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க தலைவர் தர்மராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் காட்டுவிளை இசக்கி அம்மன் கோயில் வளாகத்துக்குச் சென்றனர். அங்கு மூடப்பட்ட நிலையில் இருந்த பாரதமாதா சிலையைத் திறந்து, சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.

அதிகாரிகள் முன்னிலையில் மூடப்பட்ட பாரதமாதா சிலை
அதிகாரிகள் முன்னிலையில் மூடப்பட்ட பாரதமாதா சிலை

பா.ஜ.க-வினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில், கன்னியாகுமரி டி.எஸ்.பி பாஸ்கரன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று மீண்டும் சிலையை மூடி நடவடிக்கை எடுத்தனர். இதை அறிந்த பா.ஜ.க-வினர் மீண்டும் அங்கு வந்து போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், போலீஸார் முன்னிலையில் மீண்டும் பாரதமாதா சிலையைத் திறந்தனர். அத்துடன் நிற்காமல் சிலை முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து பா.ஜ.க-வினரை போலீஸார் கைது செய்து தென்தாமரைகுளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீஸார் மீண்டும் பாரதமாதா சிலையை மூடி நடவடிக்கை எடுத்தனர். இதனால், நாகர்கோவில் உட்பட குமரி மாவட்டத்தில் 15 இடங்களில் பா.ஜ.க-வினர் மறியல் செய்தனர். சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து, பா.ஜ.க. குமரி மாவட்ட தலைவர் தர்மராஜ் கூறுகையில், ``இசக்கி அம்மன் கோயில் வளாகத்தில் பாரதமாதா சிலை நிறுவப்பட்டுள்ளது. யாரோ புகார் செய்தார்கள் என அந்தச் சிலையை மூடியுள்ளனர் அதிகாரிகள். அதற்கான காரணம் கேட்டால் நடைபாதை அருகில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது எனச் சொல்கிறார்கள்.

நாகர்கோவிலில் மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர்
நாகர்கோவிலில் மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர்

தனியார் கோயில் காம்பவுண்டுக்குள் வைக்கப்பட்ட பாரதமாதா சிலையால் எப்படி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்பது தெரியவில்லை. மீண்டும் பாரதமாதா சிலையைத் திறக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றார்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில்,``அனுமதி இல்லாமல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி பெற்று சிலை வைக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில்  சிலையை மூடியுள்ளோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு