Published:Updated:

`கேரளா, கர்நாடகாவில் நிரம்பி வழியும் 3 லட்சம் கிலோ தேன்!' - ஊரடங்கால் தவிக்கும் குமரி விவசாயிகள்

தேன் கூடு
தேன் கூடு

கூட்டுக்குள் தேன் இடத்தை அடைத்துக்கொண்டிருப்பதால், மாலையில் வரும் தேனீக்களுக்கு கூட்டுக்குள் இருக்க இடப்பற்றாக்குறை ஏற்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தேன் விவசாயிகள், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தேன் உற்பத்தி செய்துவருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அம்மாநிலங்களில் வைக்கப்பட்டுள்ள மரக் கூடுகளைப் பராமரிக்க முடியாமலும், உற்பத்தி செய்த தேனை ஊருக்குக் கொண்டுவர முடியாமலும் தவிக்கிறார்கள்.

ஊரடங்குக்கு முன்பே ஊருக்கு வந்தவர்கள் மீண்டும் அங்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். உரிய நேரத்துக்குள் கூடுகளில் இருந்து தேனை எடுக்காமல் இருந்தால் தேன், தேன் கூடு மற்றும் தேனீக்களையும் இழக்கும் நிலை ஏற்படும் என தேன் விவசாயிகள் அஞ்சுகிறார்கள்.

இதுகுறித்து சி.ஐ.டி.யு கன்னியாகுமரி மாவட்ட தேன் சேகரிப்போர் சங்க செயலாளர் ஜூடஸ் குமார் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தேன் விவசாயிகள், 95 சதவிகிதம் பேர் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தேன் உற்பத்தி செய்து வருகின்றனர். கம்பை நட்டு அதன் மீது பெட்டியால் கூடு அமைத்து தேன் உற்பத்தி செய்கிறோம். கன்னியாகுமரி மாவட்டத்தில் போதுமான இடம் இல்லாததால் கேரள, கர்நாடகா மாநிலங்களில் வனத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் தேன் பெட்டிகளை அமைத்து தேன் உற்பத்தி செய்கிறோம். வழக்கமாக, நாங்கள் அங்கு தங்கி நின்று பணி செய்வோம்.

ஜூடஸ் குமார்
ஜூடஸ் குமார்

ஊரடங்கு காரணமாக, அங்கிருந்து ஊருக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. வாரம் ஒருமுறை தேன் கூடுகளை பராமரிக்காமல் இருந்தால், தேன்கூடு அமைத்துள்ள மரத்தால் ஆன கட்டைகள் சிதில் அரித்து விழுந்துவிடும். மேலும், கூட்டுக்குள் உள்ள தேனை சாப்பிடுவதற்காக எறும்புகள் சென்றுவிடும். எறும்புகள் புகுந்துவிட்டால், தேனீக்கள் கூட்டைவிட்டு வெளியேறி எங்காவது பறந்து சென்றுவிடும்.

உரிய நேரத்துக்குள் கூடுகளில் இருந்து தேனை எடுக்காமல் இருந்தால் தேன், தேன் கூடு மற்றும் தேனீக்களையும் இழக்கும் நிலை ஏற்படும்.
தேன் விவசாயிகள்

அதுமட்டுமல்லாது பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் தேன் சேகரிப்போம். அடுத்த ஒன்பது மாதங்கள் வரை தேனீக்களைப் பராமரிப்போம். கடந்த மாதங்களில் தேன் எடுக்காததால் கூட்டுக்குள் தேன் இருக்கின்றன. தேன் இடத்தை அடைத்துக்கொண்டு இருப்பதால், மாலையில் வரும் தேனீக்களுக்கு கூட்டுக்குள் இருக்க இடப் பற்றாக்குறை ஏற்படும். இதனால் வெளியே இருக்கும் தேனீக்கள், இரவு நேரத்திக் லைட் வெளிச்சத்தைப் பார்த்து வீடுகளுக்குள் சென்று மக்களை தொந்தரவு செய்யும் நிலை ஏற்படும்.

தேன் உற்பத்தி
தேன் உற்பத்தி

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 15,000 தொழிலாளர்கள் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தேன் உற்பத்தி செய்துவருகிறார்கள். கேரள மாநிலத்துக்குச் சென்றுவர தற்போது அனுமதிக்கிறார்கள். அங்கு தங்கி நின்று பணி செய்ய அனுமதி கிடைக்கவில்லை.

அதேசமயம், கர்நாடகாவுக்குச் செல்ல பாஸ் கிடைப்பதில்லை. எனவே, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு செல்லவும், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்காகவும் அனுமதி தரவேண்டும். அம்மாநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள சுமார் மூன்று லட்சம் கிலோ தேனை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு எடுத்து வரவும் அனுமதி பெற்றுதர வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு