Published:Updated:

கப்பலைப் போன்று கட்டுமரத்தையும் பதிவு செய்யணும்! -தேசிய மீன்பிடி வரைவு மசோதாவால் கலங்கும் மீனவர்கள்

படகு
படகு ( மாதிரிப் புகைப்படம் )

`மீனவர்கள் மீது வழக்குத்தொடுக்க வழிவகை செய்கிறது. இந்தச் சட்டம் மூலம் ஆறு மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை மீனவர்களுக்குச் சிறைத்தண்டனை அளிக்க முடியும்.'

மத்திய அரசு தேசியக் கடல் மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை வரைவு மசோதா -2019 விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவிற்குக் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மீன்வள ஒழுங்கு மசோதா நிறைவேற்றப்பட்டால் மீனவர்கள் கடலில் கால் வைக்க முடியாத நிலை ஏற்படும் என அச்சம் தெரிவிக்கிறார் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில்.

இதுகுறித்து சர்ச்சில் கூறும்போது, ``கப்பல் பதிவுச் சட்டத்தின் கீழ் கட்டுமரங்களைப் பதிவு செய்யச் சொல்கிறார்கள். கப்பல் என்றால் மாலுமி வேண்டும், டிரைவிங் லைசென்ஸ் எடுக்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இருக்க வேண்டும். என்னென்ன சட்டங்கள் எனச் சொல்கிறார்கள். அந்தச் சட்டத்தை அப்படியே அதிகாரிகள் செயல்படுத்தினால் மீனவர்கள் கடலில் கால்வைக்க முடியாத நிலை ஏற்படும்.

சர்ச்சில்
சர்ச்சில்

இந்த மசோதாவின் அடிப்படையில் இயந்திரங்கள் கொபி இயங்கும் எல்லாக் கலன்களுமே கப்பல் எனக் கணக்கில் வருகிறது. கட்டுமரங்கள், வள்ளங்கள் ஆகியவற்றுக்கு வெளிப்பகுதியில் இயந்திரம் பொருத்தி இயக்குகிறோம். அவற்றையும் கப்பல் என்ற கணக்கில் கொண்டு வருகிறார்கள். அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் மீன்பிடிக் கலன்களில் ஏறி சோதனை செய்ய முடியும். படகுக்கான அனுமதி, ஆவணங்கள் சரியில்லை என்றால் மீனவர்கள் மீது வழக்குத்தொடுக்கவும் வழிவகை செய்கிறது. இந்தச் சட்டம் மூலம் ஆறு மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை மீனவர்களுக்கு சிறைத்தண்டனை அளிக்க முடியும்.

விசைப்படகுகள் கடலில் 12 நாட்டிக்கல் மைல் தூரம் வரைதான் மீன் பிடிக்க முடியும். ஒவ்வொரு மீனவரும் மீன்பிடிக்க லைசென்ஸ் எடுக்க வேண்டும். 200 மீட்டர் முதல் 500 மீட்டர் ஆழம் கொண்ட கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி இல்லை. அந்தப் பகுதிகளில் வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்கள் மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்படும் என மீனவர்களுக்கு எதிரான அம்சங்கள்தான் இந்தச் சட்டத்தில் உள்ளன.

விசைப் படகு
விசைப் படகு
மாதிரிப் புகைப்படம்

இது மீனவர்களின் தலைமுறை வாழ்வாதாரப் பிரச்னை என்பதால் சட்டம் நிறைவேற்றப்பட்டால் பெரிய அளவில் போராட்டம் நடக்கும். இப்போது சட்ட வரைவு வந்துள்ளது. இந்த அரசு எப்போ எதைச் செய்யும் எனத் தெரியாது. எனவேதான் நாங்கள் அச்சப்படுகிறோம். கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித் தொழில் செய்பவர்கள். எனவே, இந்தச் சட்டம் முதலில் குமரி மீனவர்களைப் பாதிக்கும். மாவட்டத்தில் மீனவர் குழுவை ஏற்படுத்தி மாநில அரசு அனுமதியுடன் மத்திய அரசிடம் இதுகுறித்துப் பேச மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறேன். அப்படி சந்திப்பு நிகழும்போது மீனவர்களுக்கான பாதிப்பு அம்சங்களை மத்திய அரசுக்குத் தெளிவுபடுத்துவோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு