Published:Updated:

மார்க்கெட்டில் கூட்டத்தைக் குறைக்க களம் இறங்கிய குமரி மாவட்டத் தோட்டக்கலைத்துறை!

தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறி விற்பனை
தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறி விற்பனை

இந்தத் திட்டத்தின் மூலம் குமரி மாவட்டத்தின் மார்க்கெட்டுகளில் கூட்டம் குறைந்துள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா தீவிரமாகப் பரவி வருவதால் மே 3-ம் தேதிவரை லாக் டௌன் அமலில் இருக்கும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதையடுத்து பொதுமக்களுக்குத் தடையில்லாமல் காய்கறிகள் கிடைப்பதற்காகத் தோட்டக்கலைத்துறை நேரடியாக மக்களிடம் காய்கறி விற்பனை செய்ய களத்தில் இறங்கியுள்ளது. உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாகக் காய்கறி விற்பனை செய்யும் திட்டத்தைத் தோட்டக்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி தொடங்கி வைத்தார். இதன் மூலம் 115 வாகனங்களில் வீடுதோறும் காய்கறி கொண்டுசெல்லப்பட்டு விற்பனைச் செய்யப்படுகிறது.

காய்கறி விற்கும் வாகனங்கள்
காய்கறி விற்கும் வாகனங்கள்

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ``கொரோனா இப்போது தீவிரமாகி வருவதால் மக்கள் ஒரே இடத்தில் கூடுவது மிகவும் ஆபத்தை விளைவிக்கும். அதிலும் சில மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத நிலையும் காணப்படுகிறது. எனவே, பொதுமக்கள் வெளியில் வந்து பொது இடங்களில் கூடுவதைத் தடுக்க வீடுதோறும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்ய வேண்டும் என வேளான்மை உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி மற்றும் தோட்டக்கலைத்துறை இயக்குநர் சுப்பையன் ஆகியோர் அறிவுறுத்தினர்.

அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 115 வாகனங்கள் மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் காய்கறி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, கருங்கல், திங்கள்சந்தை என முக்கிய பகுதிகளுக்கு மக்கள் வந்துசேரும் நிலை இதன்மூலம் மாறியுள்ளது. 30 ரூபாய், 50 ரூபாய் மற்றும் 100 ரூபாய் காய்கறி பைகள் விற்பனைச் செய்யப்படுகின்றன. சாம்பார் மற்றும் அவியல் லேக் எனத் தனிப் பைகளும் விற்பனைச் செய்யப்படுகின்றன. இதைக் கண்காணிக்கத் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்வு தடுக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறி விற்பனை
தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறி விற்பனை

இந்தத் திட்டத்தின் மூலம் குமரி மாவட்டத்தின் மார்க்கெட்டுகளில் கூட்டம் குறைந்துள்ளன. மேலும், பொருள்கள் வாங்குவதற்காக பைக்குகளில் வெளியில் சுற்றுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. காய்கறி உற்பத்தியாளர்களுக்கும் நல்ல வருவாய் கிடைத்துள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு