Published:Updated:

`குளத்தில் குளித்தால் கொரோனா தொற்று வரும்..!' - பொதுமக்களுக்குத் தடைபோட்ட குமரி போலீஸ்

வெள்ளிச்சந்தை கண்ணமங்கலம் குளம்
வெள்ளிச்சந்தை கண்ணமங்கலம் குளம்

குளத்தில் குளிப்பவர்களின் எச்சில் உள்ளிட்டவை தண்ணீரில் கலக்கும். அதன் மூலம் தண்ணீரிலும் வைரஸ் கிருமிகள் பரவி இருக்கும். இதில் மற்றவர்கள் குளிப்பதால் எளிதில் நோய் பரவும்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் வரும் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்காக வெளியில் வரும் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும், சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 14 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.

ஏற்கெனவே டெல்லி மத மாநாட்டுக்குச் சென்றுவிட்டு வந்த நான்குபேர், அவரது உறவினர் ஒருவர் மற்றும் சென்னை விமான நிலையத்தில் பணிபுரிந்த ஒருவர் என ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் சமூக விலகலைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க அதிகாரிகளும் காவல்துறையினரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேவையில்லாமல் வெளியில் சுற்றிய 3,149 பேர் மீது குமரி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 2,518 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குளத்தில் குளிக்கக் கூடாது என எச்சரிக்கும் போலீஸ்
குளத்தில் குளிக்கக் கூடாது என எச்சரிக்கும் போலீஸ்

கொரோனா பரவலைத் தடுக்க மளிகைக் கடைகள், மார்க்கெட்டுகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் விஷயத்தில் அதிகாரிகள் அதிக அக்கறை எடுத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பொதுக்குளங்களில் யாரும் குளிக்கக் கூடாது எனத் திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குளக்கரைகளிலும் காவல்துறையினர் கண்காணித்து யாரும் குளிக்கக் கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாய பாசன குளங்கள் 2,000-க்கும் மேல் உள்ளன. அணைத் தண்ணீரைப் பயன்படுத்தி செய்யும் விவசாயத்தைவிட குளத்தில் உள்ள நீரைப் பயன்படுத்தி நடக்கும் விவசாயமே அதிகம். இந்தக் குளங்களில் பொதுமக்கள் குளிக்கவும், கால்நடைகளைக் குளிப்பாட்டவும் பயன்படுத்துகின்றனர். நாகர்கோவில் போன்ற நகரங்களை தவிர்த்து கிராமப்புறங்களில் வீட்டில் குளிப்பவர்களைவிட குளங்களில் குளிப்பவர்கள்தாம் அதிகம். இந்தத் தடையால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். ஆனாலும், நோய்த்தொற்றை தவிர்க்க இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குளக்கரையில் கண்காணிப்புப் பணியில் போலீஸ்
குளக்கரையில் கண்காணிப்புப் பணியில் போலீஸ்

குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை குளத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் பேசினோம், "குளத்தில் குளிப்பவர்களின் எச்சில் உள்ளிட்டவை தண்ணீரில் கலக்கும். அதன் மூலம் தண்ணீரிலும் வைரஸ் கிருமிகள் பரவி இருக்கும். இதில் மற்றவர்கள் குளிப்பதால் எளிதில் நோய் பரவும். ஒரே படித்துறையில் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் குளிப்பதும் வைரஸ் பரவ ஏதுவாக அமையும். எனவே, மக்கள் நலனுக்காகக் குளங்களில் யாரும் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்துகிறோம். மேலும், குளங்களில் யாரும் மீன் பிடிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்துகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு