Published:Updated:

`கொரோனா வைரஸின் காதலியின் பெயர் என்ன?' - கன்னியாகுமரி போலீஸார் நடத்திய `திடீர்' தேர்வு

போலீஸார் நடத்திய கொரோனா தேர்வு
போலீஸார் நடத்திய கொரோனா தேர்வு

பைக்கில் சாலையில் சுற்றுபவர்கள் கையில் கொரோனா விழிப்புணர்வு தேர்வு படிவத்தைக் கொடுக்கிறார்கள். அதில் பத்துக் கேள்விகள் உள்ளன. விடைகளை எழுதுவதற்கு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும்விதமாக நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14-ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிலர் அவசியம் இல்லாமல் டூ வீலர்களில் சாலையில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்புவதும், உறுதிமொழி எடுக்க வைப்பதும், திருக்குறள் ஒப்புவித்தல் எனத் தண்டனை கொடுத்துத்தான் பார்க்கிறார்கள். ஆனாலும் தெருவில் சுற்றுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

இந்தநிலையில் தெருவில் சுற்றுபவர்களுக்குக் கொரோனா குறித்த தேர்வு நடத்துகிறது கன்னியாகுமரி மாவட்ட போலீஸ். பைக்கில் சாலையில் சுற்றுபவர்கள் கையில் கொரோனா விழிப்புணர்வு தேர்வு படிவத்தைக் கொடுக்கிறார்கள். அதில் பத்துக் கேள்விகள் உள்ளன. விடைகளை எழுதுவதற்கு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனா கேள்வித்தாள்
கொரோனா கேள்வித்தாள்

அந்தத் தாளில், கொரோனா வைரஸ் முதலில் பரவிய நாடு எது? கொரோனா வைரசின் காதலியின் பெயர் என்ன? கொரோனா வைரஸினால் அதிகமாகப் பாதிக்கப்படும் உடலமைப்பு மண்டலம்? கொரோனா வைரஸ் ஊரடங்கு சட்டத்தை அலட்சியப்படுத்தியதால் அதிகமாக உயிரிழப்பு ஏற்பட்ட நாடு எது? கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? கொரோனா வைரஸிலிருந்து நம் நாட்டைப் பாதுகாக்க நாம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? கொரோனா வைரஸ் சம்பந்தமாக ஊரடங்கு சட்டம் என்றுவரை போடப்பட்டுள்ளது? கொரோனா வைரஸ் சம்பந்தமாக அரசு எடுத்த நடவடிக்கையை மீறுபவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை என்ன? கொரோனா தொற்று அறிகுறி என்ன? சமூக விலகல் என்றால் என்ன? என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

வெளியில் அவசியம் இல்லாமல் சுற்றுபவர்கள் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள். அதில் ஒரு கேள்விக்குத் தவறான விடை எழுதினால் பத்துத் தோப்புக்கரணம் வீதம் போட வைப்பதுடன், கொரோனா தடுப்பு உறுதிமொழியும் எடுக்க வைக்கின்றனர் போலீஸார். இதன்மூலம் பொறுப்பு இல்லாமல் 144 உத்தரவை மீறி நடப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

ட்ரோன் மூலம் கண்காணிக்கும் எஸ்.பி.ஸ்ரீநாத்
ட்ரோன் மூலம் கண்காணிக்கும் எஸ்.பி.ஸ்ரீநாத்

மேலும் ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இன்று ஹெலிகேம் மூலம் போலீஸார் தங்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளனர். சிலர் பொய்யான காரணங்களைக் கூறி வெளியே நடமாடுவதாக தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத் மாவட்டம் முழுவதும் வெளிநாட்டிலிருந்து வந்து இருந்த 3600 நபர்கள் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்து தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வெளியே நடமாடினால் அரசின் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள தனிமை வார்டில் அடைக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

அடுத்த கட்டுரைக்கு