Published:Updated:

`ஃபோம்ஷீட்டில் பஸ், லாரி மாடல்கள்! - ஊரடங்கில் அசத்தும் கன்னியாகுமரி இளைஞர்

பஸ் மாடல் உடன் வெங்கடேஷ்
பஸ் மாடல் உடன் வெங்கடேஷ்

தனியார் பஸ் கம்பெனிகள், அவர்களின் பேருந்துகளைப் புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்பியுள்ளனர். அதுபோன்று தயாரித்துக் கொடுத்தால் அதை தங்கள் கம்பெனி அலுவலகத்தில் மாடலுக்காக வைப்பதாகச் சொன்னார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் பகுதியைச் சேர்ந்த முதுகலைப் பட்டதாரி இளைஞர் வெங்கடேஷ். தமிழ்நாடு அரசுப் பேருந்து, கேரள அரசுப் பேருந்து, வேன், லாரி என வாகனங்களை தத்ரூபமாகத் தயாரித்து அசத்திவருகிறார். ஆரம்பத்தில் விளம்பர போர்டுகள் தயாரிக்கும் பிளாஸ்டிக் மூலம் பஸ்களைத் தயாரித்துள்ளார்.

சாலைகளில் இயங்கும் பேருந்துகளைப்போன்று இருக்கைகள், லைட் செட்டிங்ஸ், பேருந்து செல்லும் ஊர் பெயரைக் குறிக்கும் போர்டு என எதுவும் மிஸ் ஆகாமல் பார்த்துப்பார்த்து தயாரித்திருக்கிறார். சுமார் இரண்டு அடி நீளமும், முக்கால் அடி உயரமும் கொண்டது வெங்கடேஷ் தயாரிக்கும் பஸ்கள்.

கொரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி புதிய பேருந்துகளைத் தயாரித்து, அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார் வெங்கடேஷ். இதைத் தொடர்ந்து தனியார் பஸ் கம்பெனிகள், தங்கள் பேருந்துகளின் மாடலை அவருக்கு அனுப்பி, அதேபோல் பஸ்களைத் தயாரித்து வழங்கும்படி கேட்டுள்ளன. 30-க்கும் மேற்பட்ட பஸ்களின் மாடல்களைச் செய்ய ஆர்டர் வந்திருப்பதால் பிசியாக இருக்கிறார் 24 வயதான வெங்கடேஷ்.

வெங்கடேஷ் தயாரித்த பஸ், லாரிகள்
வெங்கடேஷ் தயாரித்த பஸ், லாரிகள்

இதுகுறித்து வெங்கடேஷ் நம்மிடம் கூறுகையில், ``நான் எம்.எஸ்சி எலக்ட்ரானிக் படித்திருக்கிறேன். இப்போது வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். சின்ன வயசுலயே பஸ்ஸுனா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால நான் முதலில் பஸ் தயாரித்தேன். ஆரம்பத்தில் விளம்பர போர்டில் பஸ் தயார் செய்தேன். அதன் பின்னர் ஸ்டிக்கர் கடைகளில் பயன்படுத்தும் ஃபோம்ஷீட்டுகள் மூலம் பஸ் தயாரித்துவருகிறேன்.

ஒரு பஸ்ஸுக்கான பொருள்கள் வாங்க மட்டும் 2,700 ரூபாய் செலவாகிறது. வேலைக்கான கூலியையும் சேர்த்து, ஒரு பஸ் மாடலை 5,000 ரூபாய்க்கு விற்கிறேன். முதலில் நான் தயாரித்த ஐந்துக்கும் மேற்பட்ட பஸ்களை வீட்டு ஷோகேஸில் வைப்பதற்காக எனது உறவினர்கள் வாங்கினார்கள். அது எனக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. நான் தயாரித்த பஸ்கள் குறித்த வீடியோ, புகைப்படங்களை ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டேன். அதனால் தனியார் பஸ் கம்பெனிகளில் இருந்து எனக்கு ஆர்டர்கள் வந்திருக்கின்றன.

பொம்மை பஸ்
பொம்மை பஸ்

தனியார் பஸ் கம்பெனிகள், அவர்களின் பேருந்துகளைப் புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்பியுள்ளனர். அதுபோன்று தயாரித்துக் கொடுத்தால், அதைத் தங்கள் கம்பெனி அலுவலகத்தில் மாடலுக்காக வைப்பதாகத் தெரிவித்தனர். இதுவரை 30-க்கும் மேற்பட்ட பஸ்கள் செய்வதற்கான ஆர்டர்கள் வந்துள்ளன. எதிர்காலத்தில், நான் தயாரிக்கும் பஸ்களில் மோட்டார் பொருத்தி, ரிமோட் மூலம் இயங்கும் வகையில் தயாரிக்கும் திட்டம் வைத்திருக்கிறேன் " என்றார் உற்சாகத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு