Published:Updated:

`காரைக்குடி நபருக்குக் கொரோனா அறிகுறி?!' - விளக்கமளித்த மதுரை டீன்

கொரோனா சிறப்பு வார்டு
கொரோனா சிறப்பு வார்டு

`காரைக்குடியைச் சேர்ந்த நபருக்குக் கொரோனோ வைரஸ் பாதிப்பிற்கான எந்த அறிகுறியும் இல்லை' என மதுரை அரசு இராசாசி மருத்துவமனை டீன் தெரிவித்தார்.

சீனாவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எளிதில் பரவக்கூடிய இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை சீனாவில் மட்டும் 2,000-த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இராசாசி மருத்துவமனை
இராசாசி மருத்துவமனை

உலக அளவில் இது பெரும் அச்சுறுத்தலாக மாறக் கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. கொரோனாவுக்கு எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இந்நிலையில் காரைக்குடி பொன்நகர் பகுதியைச் சேர்ந்த 47 வயதான நபர் சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 15 வருடங்களுக்கு மேலாக அந்நாட்டில் சமையல் வேலை செய்துவந்த அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா திரும்பினார்.

கொரோனா சிறப்பு வார்டு
கொரோனா சிறப்பு வார்டு

அவருக்குத் தொடர் இருமல், சளி பாதிப்பு இருந்ததால் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காரைக்குடி அரசு மருத்துவர்கள், மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு அவரை அறிவுறுத்தினர். இதையடுத்து, அவர் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன.

மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார். மேலும், முழுமையாகப் போர்த்திய தொற்றுநோய் தடுப்பு ஆடைகள் அணிவிக்கப்பட்டு அவர் முழுவதிலும் பாதுகாப்பு வசதிகளுடன் உள்ளார்.

கொரோனா  சிறப்பு வார்டு
கொரோனா சிறப்பு வார்டு

இது குறித்து அரசு இராசாசி மருத்துவமனை டீன் சங்குமணி கூறுகையில், ``காரைக்குடியைச் சேர்ந்த நபருக்குத் தற்போது கொரோனா வைரஸ் தொடர்பான எந்த அறிகுறியும் இல்லை. அவர் நல்ல நிலையில் உள்ளார். இருந்த போதிலும் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு