Published:Updated:

`தனியா தவிச்சேன்; இப்போ மருத்துவ உதவியும் கிடைச்சிருக்கு!’ - நெகிழும் சந்திரகிரி பாட்டி

பாட்டிக்கு உதவி கார்த்தி சிதம்பரம்
பாட்டிக்கு உதவி கார்த்தி சிதம்பரம்

``என்னைப்போல் நிறைய பேருக்கு உதவி செய்ய இறைவன் அவங்களுக்கு ஆற்றல குடுக்கணும். என் உணவு தேவைக்கு உதவி கேட்டேன், இப்ப என் மருத்துவ தேவைக்கும் பணம் கிடைச்சுருக்கு" என்று சந்திரகிரி பாட்டி கண்கலங்கினார்.

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் பகுதியில் வசித்து வருகிறார் 72 வயது சந்திரகிரி பாட்டி. 500 ரூபாய் வாடகைக்கு தனியாக வசித்து வரும் இந்தப் பாட்டி விஸ்வாசம், சுந்தரபாண்டியன் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். பல்வேறு தனித்திறமை கொண்ட இவருக்கு மகன், மகள் என்று யாருடைய ஆதரவும் இல்லை. சந்திரகிரி பாட்டியின் நிலை குறித்து, ``பிள்ளைங்க கண்டுக்கல; தனியா தவிக்குறேன்!’ - கலங்கும் சந்திரகிரி பாட்டி" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

சந்திரகிரி பாட்டி
சந்திரகிரி பாட்டி

இதைத் தொடர்ந்து சந்திரகிரி பாட்டிக்கு சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட பலரும் உதவிக்கரம் நீட்டியிருக்கிறார்கள்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சந்திரகிரி பாட்டி, `சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம ரெம்பக் கஷ்டப்பட்டேன். 4 மாசத்துக்கு மேல வாடகை கூட குடுக்க முடியாம இருந்தேன். விகடனில் செய்தி வெளியானதுக்கு அப்புறம் நிறைய பேர் உதவி செஞ்சுருக்காங்க.

பச்சேரி சுந்தர்ராஜன் சார் ஏற்பாட்டில் சிதம்பரம் ஐயா மகன் கார்த்தி சிதம்பரம் ஃபேன், சேலை, போர்வை, அரிசி, வாளி, 3 மாசத்துக்குத் தேவையான மளிகைப் பொருள், பழங்கள் காய்கறினு 20,000 ரூபாய் மதிப்புள்ள பொருளும், 10,000 ரொக்கப் பணமும் கொடுத்தார். அதுபோக வெளிநாட்டுல இருந்து அரவிந்த் என்கிற சேலத்துக்காரத் தம்பி 5,000 ரூபாய் மதிப்புள்ள வீட்டுச் சாமானும் பொருளும் கொடுத்தாங்க.

சமூக ஆர்வலர்களின் உதவி
சமூக ஆர்வலர்களின் உதவி

இப்படி ஏகப்பட்ட தம்பிங்க உதவி செஞ்சிருக்காங்க. சில தம்பிகள் பேருகூட நினைவில் வச்சுக்க முடியல. எப்படியோ அவங்க எல்லாரும், எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்.

என்னைப் போல் நிறைய பேருக்கு உதவி செய்ய இறைவன் அவங்களுக்கு ஆற்றல குடுக்கணும். என் உணவு தேவைக்கு உதவி கேட்டேன், இப்ப என் மருத்துவ தேவைக்கும் பணம் கிடைச்சுருக்கு" என்று கண்கலங்கினார்.

புத்தகங்கள்
புத்தகங்கள்

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் உதவிகளை செய்துவரும் பச்சேரி சுந்தர் ராஜன் கூறுகையில், ``விகடன் இணைய செய்தியில் பாட்டியின் கட்டுரை உருக்கமாக இருந்தது. அதன் லிங்க்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் சாருக்கு வாட்ஸப் மூலம் அனுப்பினேன். படித்த உடன் அவர், `பாட்டிக்கு நேரில் சென்று உதவி செய்வோம்’ என்று கூறியதுடன், அவரின் கையாலேயே பாட்டிக்கு உதவி செய்துள்ளார். பாட்டிக்கு பலரும் உதவி செய்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அவருக்கு உதவி செய்ய ஏற்பாடுகளைச் செய்வேன்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு