Published:Updated:

ராமநாதபுரம்: `பிடிக்காதவர்கள் மீது பொய் வழக்கு?’ - எஸ்.பி-க்கு எதிராகக் கொதிக்கும் கருணாஸ்

புகார் மனுவுடன் கருணாஸ்
புகார் மனுவுடன் கருணாஸ்

தமிழக மக்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வரும் எந்தத் திட்டமாக இருந்தாலும் அதை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்பதில் உறுதியாக இருப்பதாகத் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ-வும் நடிகருமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.

திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ், ராமநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''தமிழகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 31 வரை கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் மக்கள் அதிக பாதிப்புக்குள்ளாகாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக உள்ள நான், அரசு எடுத்து வரும் நல்ல நடவடிக்கைகளைப் பாராட்ட வேண்டிய கடமை எனக்கு உள்ளது.

கருணாஸ்
கருணாஸ்

அதே நேரத்தில், இந்த மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் மீது கூறப்படும் குறைகள் குறித்தும் முதல்வரின் கவனத்துக்கு எடுத்தும் செல்வதும் எனது கடமைதான். அந்த அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குறித்து என்னிடம் பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். தனக்குக் கீழ் பணியாற்றுபவர்கள் மற்றும் பொதுவெளியில் உள்ளவர்கள் மீது சமுதாய பாகுபாட்டுடன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

பல்வேறு பகுதிகளில் பிடிபடும் போதை பொருள்களின் அளவுகளை முழுமையாக அறிவிக்காமல் மறைக்கிறார். `பிடிக்காதவர்கள் மீது பொய் வழக்கு போடுகின்றனர்’ என மாவட்ட காவல்துறை மீது குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இது குறித்து ராமநாதபுரம் டி.ஐ.ஜி-யிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது சட்டசபையில் பேசவும் வாய்ப்பில்லை. எனவே முதல்வரை நேரில் சந்தித்து புகார் தெரிவிக்க உள்ளேன்.

தமிழக மக்களைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத் திருத்தம் உள்ளிட்ட எந்தத் திட்டமாக இருந்தாலும் அதை எதிர்ப்பதில் உறுதியாக உள்ளேன்.

எஸ்.பி - வருண்குமார்
எஸ்.பி - வருண்குமார்

இவற்றுக்கு எதிராகத் தமிழக அரசு, கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்கள் வெளியிடும் கருத்துகளை முழுமையாக ஆதரிக்கிறேன். சசிகலா விடுதலையாகி வெளியே வரும் நிலையில் அ.தி.மு.க-வும், அ.ம.மு.க-வும் இணைந்துவிடும் என வெளியாகும் யூகங்களுக்குப் பதில் சொல்ல முடியாது'' என்றார்.

கருணாஸின் புகார் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கூறுகையில், ``அமைதியாக உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் சமுதாய மோதல்களை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாகச் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அதைத் தடுக்கும் வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டலின்படி எனது பணிகளை செய்து வருகிறேன்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு