Election bannerElection banner
Published:Updated:

கொரோனா: அடுத்தடுத்த நாள்களில் இருவர் மரணம்! - அதிர்ச்சி தரும் கரூர் நிலவரம்

இறுதிச் சடங்கு
இறுதிச் சடங்கு ( நா.ராஜமுருகன் )

நேற்று கரூர் வெங்கமேடு வி.வி.ஜி நகரைச் சேர்ந்த ஒருவர், கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். அந்த அதிர்ச்சி நீங்குவதற்குள், பள்ளபட்டியைச் சேர்ந்த நபர் ஒருவர், இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழ்ந்தார்.

கரூர் மாவட்டத்தில் முதன்முறையாக, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருந்த இருவர், நேற்றும் இன்றும் என்று அடுத்தடுத்த நாள்களில் இறந்து போயிருப்பது, கரூர் மாவட்ட மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டத்தில் இதுவரை 118 நபர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

`நகராட்சிப் பொறியாளருக்கு கொரோனா; புதிதாக 5 பேர்!' -தொடர் பாதிப்புகளால் கலங்கும் கரூர்

இதைத்தவிர, நாமக்கல் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், ஒரு மாதத்துக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 94 வயது நிரம்பிய முதியவர் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, பெற்று வந்த சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

இறுதிச் சடங்கு
இறுதிச் சடங்கு
நா.ராஜமுருகன்

ஆனால், நேற்று முன்தினம் வரை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட யாரும் இறக்கவில்லை. ஒரு மாதத்துக்கு முன்பு, கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட 50 க்கும் மேற்பட்டவர்களும் பூரண குணமடைய, கரூர் மாவட்டம், ஜீரோ கொரோனா தொற்று பாதித்தவர்கள் மாவட்டமாக மாறியது. ஆனால், அடுத்த வாரத்திலேயே சிலருக்குக் கொரோனா தொற்று பாதிக்க, இன்று வரை கரூர் மாவட்டத்தில் மொத்தம் 118 பேர்களுக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

முதல் பலி

கடந்த 20 - ஆம் தேதி வரை, கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில் ஒருவர்கூட மரணமடையவில்லை. இதனால், கரூரில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தாலும், மக்கள் பெரிதாக அச்சமின்றி இருந்தனர். ஆனால், நேற்று கரூர் வெங்கமேடு வி.வி.ஜி நகரைச் சேர்ந்த ஒருவர், கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். நாற்பது வயதாகும் அந்த நபர், கடந்த மூன்று வருடங்களாக சென்னை தில்லை நகரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து வந்திருக்கிறார்.

இந்தநிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, சென்னையிலருந்து கரூருக்குத் திரும்பியிருக்கிறார். அதோடு, தானாகவே கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று, சோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது, அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதியாக, அங்கே தங்க வைக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த நிலையில்தான், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

 கரூர் அரசு மருத்துவக் கல்லூரி
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி
நா.ராஜமுருகன்

அந்த அதிர்ச்சி நீங்குவதற்குள், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த, கரூர் பள்ளபட்டியைச் சேர்ந்த 54 வயது நிரம்பிய நபர் ஒருவர், இன்று சிகிச்சைப் பலனின்றி இறந்து போக, கரூர் மாவட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். கரூர் மாவட்ட நிர்வாகம், கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்கப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கரூருக்கு, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட வெளியூர்களில் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கரூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்து வந்தது.

இதனால், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், `கரூர் நகரில் இயங்கி வரும் ஜவுளிக்கடைகள், மளிகைக்கடைகள், வணிக நிறுவனங்கள், நகைக்கடைகள் உள்ளிட்ட கடைகளை இன்று முதல் (21.06.2020) மதியம் இரண்டு மணி வரை மட்டுமே திறந்து வைத்திருக்க வேண்டும்' என்று அறிவிப்பு செய்தார். ஆனால், அவர் அறிவிப்பு செய்த அன்றே ஒருவரும், மறுநாளான இன்று ஒருவரும், கொரோனாவால் சிகிச்சை பலனின்றி இறந்து போயிருப்பது, மாவட்ட நிர்வாகத்தையும், பொதுமக்களையும் அதிர்ந்துபோக வைத்திருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு