Published:Updated:

தேர்தல் ரத்தான விவகாரம்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு!

கரூர் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் தேர்தல் அதிகாரி மந்திராசலம் அளித்த புகார் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரின் சகோதரர் சேகர் உள்ளிட்ட அதிமுக-வினர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் மறைமுகத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதால், அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் தேர்தல் அதிகாரியை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டு கைதான விவகாரத்தில், தான்தோன்றிமலை காவல் நிலைய போலீஸார் ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தள்ளுமுள்ளு
தள்ளுமுள்ளு
`எந்த டெண்டரும் நடக்காது!' அதிமுக கவுன்சிலர்களை திமுக மிரட்டுவதாக மனு அளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கடந்த அக்டோபர் 22-ம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற மறைமுகத் தேர்தலில், தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட திட்ட அதிகாரியுமான மந்திராசலம் மறைமுகத் தேர்தல் நடத்துவதற்காக கூட்ட அரங்கில் இருந்திருக்கிறார். அப்போது, மறைமுகத் தேர்தல் காலை 10 மணிக்கு நடைபெறுமென அறிவிப்பு இருந்த நிலையில், அன்று மதியம் 2:30 மணிக்கு நடைபெறும் எனத் தேர்தலில் பங்கேற்கும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களுக்குக் கடிதம் வழங்கப்பட்டது.

போராட்டம் செய்த அ.தி.மு.க-வினர்
போராட்டம் செய்த அ.தி.மு.க-வினர்

இதற்கு விளக்கம் கேட்டு, நேரம் மாற்றப்பட்டதற்கான காரணம் குறித்து, அதிமுக மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், நிலைமையைக் கருத்தில்கொண்டு மறைமுகத் தேர்தலைத் தள்ளிவைத்துவிட்டு, தேர்தல் அதிகாரி தனது வாகனத்தில் வெளியேற முற்பட்டார். அப்போது, அங்கு கூடியிருந்த அ.தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 50 பேர், தேர்தல் அதிகாரி மந்திராசலத்தின் காரை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் போராட்டத்தில், காவல்துறையினருக்கும் அ.தி.மு.க-வினருக்கும் இடையே சுமார் இரண்டு மணி நேரமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உள்ளிட்ட போலீஸார், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 50 பேரை அதிரடியாகக் கைதுசெய்து, வெள்ளியணை பைபாஸ் அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர். அன்று இரவு வரை, அந்த மண்டபத்தில் வைத்திருந்த போலீஸார், அன்று இரவு ஒன்பது மணி போல் அவர்களை விடுவித்தனர்.

தள்ளுமுள்ளு
தள்ளுமுள்ளு

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், "எங்களை மண்டபத்துக்குள் அமர வைக்காமல், மண்டபத்துக்கு வெளியில் மண்தரையில் அமரவைத்தனர். சாப்பாடு, தண்ணீர், சேர் என்று எதுவும் தரவில்லை. தி.மு.க அராஜகத்தைல் கட்டவிழ்த்திருக்கிறது. கரூர் மாவட்ட எஸ்.பி தி.மு.க மாவட்டச் செயலாளர்போல் செயல்படுகிறார். எங்களுக்கு இன்று நடந்த கொடுமை குறித்து, தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கவிருக்கிறோம். அதோடு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவருக்கான தேர்தலை நடக்க வைப்போம்' என்று தெரிவித்தார்.

``திமுக மாவட்டச் செயலாளர்போல் செயல்படுகிறார் கரூர் எஸ்.பி!" - குற்றம்சாட்டும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இந்த நிலையில், கரூர் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் தேர்தல் அதிகாரி மந்திராசலம் அளித்த புகார் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரின் சகோதரர் சேகர், அ.தி.மு.க வழக்கறிஞர்கள் மாரப்பன், சுப்ரமணியன், திருமூர்த்தி, மதுசூதனன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் கண்ணதாசன் மற்றும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் அலமேலு, சிவானந்தம், வசந்தா உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் மீது, ஆபாசமான வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முக்கியத் திருப்பமாக இன்று காலை அ.தி.மு.க கரூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் கமலக்கண்ணன், அ.தி.மு.க மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருவிகா, அவரின் மகன் தமிழ்ச்செல்வன், செல்லாண்டிபாளையம் அ.தி.மு.க 41-வது வார்டு செயலாளர் பி.கே.சுந்தரம் உள்ளிட்ட நான்கு பேரை தான்தோன்றிமலை போலீஸார் அதிரடியாகக் கைதுசெய்துள்ளனர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டவுள்ளனர். தொடர்ந்து, அ.தி.மு.க-வைச் சேர்ந்த சில முக்கியப் பிரமுகர்கள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருப்பதால், எப்போது வேண்டுமானாலும் கைதுசெய்யப்படலாம் என்ற நிலையால், அ.தி.மு.க-வினர் கலக்கத்தில் உள்ளனர். இந்த வழக்குகளில் சேர்க்கப்பட்டுள்ள அ.தி.மு.க-வின் கரூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்காக நேரில் ஆஜராகச் சென்றிருக்கும் நிலையில், இந்தக் கைது நடவடிக்கை கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு