Published:Updated:

`தடுப்பணைக்கு 8 லட்சம் ரூபாய்; ஓராண்டில் உடைந்த கொடுமை!' -மணல் கொள்ளையால் கலங்கும் கடவூர் விவசாயிகள்

உடைந்த புங்கம்பாடி தடுப்பணை
உடைந்த புங்கம்பாடி தடுப்பணை

கடந்த 2018-19ம் வருடம்தான் இந்தத் தடுப்பணை கட்டப்பட்டதாகவும், அதற்குள் இந்த அணை உடையக் காரணம், தரமின்றி கட்டப்பட்டதும், மணல் கொள்ளை நடப்பதும்தான் என விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

கடவூர் பகுதியில் சிறு ஆறுகள், வாய்க்கால்களில் கட்டப்பட்டுள்ள தரமற்ற தடுப்பணைகள் லேசான மழைக்கே உடைவதாக, அந்தப் பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள். அதோடு, அந்தப் பகுதிகளில் ஆளுங்கட்சியினர் இரவுபகலாக மணல் கொள்ளையில் ஈடுபடுவதால், தடுப்பணைகளின் உறுதித்தன்மை உருக்குலைவதாகவும் அவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

புங்கம்பாடி தடுப்பணை
புங்கம்பாடி தடுப்பணை
`ஊரடங்கு முடியறதுக்குள்ள அள்ளிக் குவிக்கணும்!' -கரூரை கதிகலக்கும் மணல் கடத்தல்

கரூர் மாவட்டத்தின் தென்கோடி எல்லையாக இருக்கிறது, கடவூர். தனி தாலுகாவான இந்த ஊரைச் சுற்றி, 34 குக்கிராமங்கள் உள்ளன. கடவூர் மற்றும் 34 கிராமங்களையும் சுற்றி, இயற்கையே வட்ட வடிவில் அமைந்திருக்கிறது. மலைகளுக்கு மத்தியில் இருக்கும் இந்தக் கிராமங்களுக்கு வந்து செல்ல மூன்றே மூன்று வழிகள்தாம் உள்ளன. இந்தக் கிராமங்கள் அனைத்தும் வறட்சி மிகுந்தவை.

இங்கு காடுகளின் அளவு குறைவு என்பதால், மழை எப்போதாவதுதான் பெய்யும். அப்படி மலைகளில் பெய்யும் மழை நீர் பல்வேறு சிறு ஆறுகள், வாய்க்கால்கள், ஓடைகள் மூலம் இந்த 34 கிராமங்களிலும் உள்ள குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை நிரப்பி, அதன்மூலமாக இங்கே விவசாயம் செய்யப்படுகிறது.

உடைந்த புங்கம்பாடி தடுப்பணை
உடைந்த புங்கம்பாடி தடுப்பணை

அதோடு, கடவூர் மலைகளில் பெய்யும் மழையைத் தேக்கி வைத்து கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு விவசாயப் பாசனம் கொடுக்க, பொன்னணியாறு என்ற அணை கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடவூர் மலையிலிருந்து வரும் சிறு வாய்க்காலில் புங்கம்பாடி என்ற கிராமத்தின் அருகே கட்டப்பட்ட தடுப்பணையின் தடுப்புச் சுவர் ஒன்று கீழே சாய்ந்துவிட்டது. கடந்த 2018-19ம் வருடம்தான் இந்தத் தடுப்பணை கட்டப்பட்டதாகவும், அதற்குள் இந்த அணை உடையக் காரணம், தரமின்றி கட்டப்பட்டதும், மணல் கொள்ளை இரவும் பகலும் நிற்காமல் நடப்பதும்தான் என விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இது குறித்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலரிடம் பேசினோம். ``புங்கம்பாடி வாய்க்கால்ல எப்போவாச்சும்தான் தண்ணீர் வரும். அதை அங்கங்கே தடுப்பணைக் கட்டி தேக்குவதன் மூலம், அந்தந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவாங்க. அதோடு அங்குள்ள நீர்நிலைகளையும் நிரப்புவாங்க. அப்படித்தான், புங்கம்பாடியில் கடந்த 2019-ம் ஆண்டு 8.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தடுப்பணை ஒன்று கட்டினாங்க. அப்போ கடவூர் பகுதியில் பொதுப்பணித்துறை துணை பொறியாளராக தியாகராஜன் என்பவர் இருந்தார். இந்த அணையை முறையா கட்டலை. அதுல சில லட்சம் முறைகேடு நடந்ததாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில், கடந்த வாரம் இங்கே மழை பெய்தது. இந்த வாய்க்காலில் தண்ணீர் வந்தது. மறுநாள் பார்த்தா, தடுப்பணையின் பக்கவாட்டில் உள்ள தடுப்புச் சுவர் அப்படியே கீழே சாய்ஞ்சுட்டு. மொத்த தடுப்பணையும் வீக்காதான் இருக்கு. அதோடு, இந்தப் பகுதியில் மணல் கொள்ளையும் தொடர்ந்து நடக்குது. லோக்கல் ஆளுங்கட்சிப் புள்ளிகள்தான் அதில் ஈடுபடுறாங்க. வருவாய்த்துறையும் காவல் துறையும் கண்டுக்கிறதில்லை.

அதனாலும், இப்படி பல இடங்களில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் உடைய காரணமா இருக்கு. மழைக்காலம் தொடங்குவதற்குள் இந்தத் தடுப்பணையை சரி பண்ணணும். இதில் நடந்துள்ள முறைகேட்டைக் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கணும். இங்கு நடைபெறும் மணல் கொள்ளையையும் இரும்புக்கரம் கொண்டு தடுக்கணும். இல்லைன்னா, இங்கு நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும்" என்றனர் வேதனையுடன்.

திட்ட மதிப்பீடு
திட்ட மதிப்பீடு

இந்தத் தடுப்பணை கட்டப்பட்டபோது இங்கு பணியாற்றியவரும் தற்போது க.பரமத்திப் பகுதியில் பொதுப்பணித்துறை துணை பொறியாளராக இருக்கும் தியாகராஜனிடம் பேசினோம்.``அந்தப் பகுதியில் எந்தத் தடுப்பணையும் உடையவில்லை. எதிலும் முறைகேடு நடக்கவில்லை. எல்லா தடுப்பணைகளும் சிறப்பாக உள்ளன. சில தினங்களுக்கு முன்பு அனைத்து வாய்க்கால்களும் சிறு ஆறுகளும் ஓடைகளும் மழைநீரால் நிரம்பியது. அப்போது நாங்கள் சென்று புகைப்படம் எடுத்தோம்.

ஏரியல் ஷாட்டும் எடுத்துள்ளோம். எந்த அணையும் அதில் உடையவில்லை. நீங்கள் வேண்டுமானால் வந்து அந்த புகைப்படங்களை சோதனை செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு தகவல் கொடுத்த விவசாயிகள் பொய் சொல்கிறார்கள்" என்று குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

அடுத்த கட்டுரைக்கு