Published:Updated:

மனு கொடுக்க வரும் மாற்றுத்திறனாளிகள்; இலவச ஆட்டோ ஏற்பாடு செய்த ஆட்சியர்! - கரூர் நெகிழ்ச்சி

இலவச ஆட்டோ
இலவச ஆட்டோ

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, 2 இலவச ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. வாகன ஆய்வாளர் நிலையிலான அலுவலர் நியமிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பாக ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவைக்கும் பணியில் அவர் ஈடுபடுத்தப்பட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மனு கொடுக்க வரும் மாற்றுத்திறனாளிகள் வெயிலில் ஆட்சியர் அலுவலகக் கட்டடம் வரும்வரை அவதிப்படுவதை அறிந்த கரூர் மாவட்ட ஆட்சியர், அவர்கள் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து போக ஏதுவாக, ஆட்டோ ஏற்பாடு செய்திருப்பது, மாற்றுத்திறனாளிகளை நெகிழவைத்திருக்கிறது.

இலவச ஆட்டோ
இலவச ஆட்டோ
குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 11 பேர்; சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்! - நடந்தது என்ன?

கரூர் மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் வாரா வாரம் பொதுமக்களிடம் கோரிக்கை மனு வாங்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா பிரச்னை இருந்தபடியால், மனு நாள் முகாம் நடைபெறாமல் இருந்தது. அதன் பிறகு, தற்போதைய ஆட்சியராக இருக்கும் மருத்துவர் பிரபுசங்கர் பொறுப்பேற்ற பிறகு, வீடியோ கான்ஃபிரன்ஸ் முறையில் மக்களின் கோரிக்கையை ஆட்சியர் கேட்டுவருகிறார். தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் மனுப் பெட்டி ஒன்று வைக்கப்பட்டு, அதில் பொதுமக்கள் தங்கள் கைகளில் கொண்டுவரும் மனுக்களைப் போடும்படி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தநிலையில், கரூர் மாவட்டத்தில் கடுமையாக வெயில் அடிக்கும் சூழலில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு, கால்கள் செயல்படாத மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலகப் பேருந்து நிறுத்தத்திலிருந்து கைகளை ஊன்றியபடி ஆட்சியர் அலுவலகம் வந்தார். மேலும், இதுபோல மாற்றுத்திறனாளிகள் பலர் ஆட்சியர் அலுவலகப் பேருந்து நிறுத்தத்திலிருந்து சிரமப்பட்டு, ஆட்சியர் அலுவலகம் வருகின்றனர். இதனால், அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் சிலர், 'இது போன்ற மாற்றுத்திறனாளிகள் பேருந்து நிறுத்தத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் இருக்கும் ஆட்சியர் அலுவலகக் கட்டடம் வரை வந்துசெல்ல ஏதுவாக, வாகன ஏற்பாடு செய்ய வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தனர். இந்த விஷயம், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கவனத்துக்குச் சென்றது.

இலவச ஆட்டோ
இலவச ஆட்டோ

அதைத்தொடர்ந்து, கடந்த வாரம் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலக நுழைவாயிலிலிருந்து, ஆட்சியர் அலுவலகக் கட்டடம் வரை மாற்றுத்திறனாளிகளை அழைத்துவர, ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் சக்கர நாற்காலியுடன் ஊழியர் ஒருவரை தற்காலிகமாக நியமித்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த வாரம் நடந்த காணொலி மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர் பிரபுசங்கர், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளை ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லவும், அவர்கள் செல்லும் இடங்களுக்குக் கொண்டுபோய் விடவும் இலவச ஆட்டோக்களை ஏற்பாடு செய்ய உத்தரவிட்டிருந்தார்.

கரூர் அரசுப்பள்ளியைக் கண்டித்த ஆட்சியர்; `கடும் சொற்கள் தவிர்க்கப்படும்’ - விடுமுறை விவகாரப் பின்னணி

அந்த உத்தரவின் அடிப்படையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, இரண்டு இலவச ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. வாகன ஆய்வாளர் நிலையிலான அலுவலர் இந்தப் பணிக்கு நியமிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகளைப் பாதுகாப்பாக ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார். ஆட்டோ ஓட்டுநர்கள், ஆட்சியர் அலுவலகப் பேருந்து நிறுத்தத்திலிருந்து மாற்றுத்திறனாளிகளை ஆட்சியர் அலுவலகத்துக்குள் இறக்கிவிட்டனர். மேலும், மனு அளித்துவிட்டுத் திரும்பிய மாற்றுத்திறனாளிகளை ஆட்சியர் அலுவலகப் பேருந்து நிறுத்தம் லைட் ஹவுஸ், காந்தி கிராமம், கரூர் பேருந்து நிலையம் என்று 6 கிலோமீட்டர் தூரத்திலுள்ள இடங்களிலெல்லாம் சென்று இறக்கிவிட்டனர்.

'இனிவரும் காலங்களில் தொடர்ந்து திங்கள்கிழமைதோறும் இந்த இலவச ஆட்டோ சேவை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும்' என்று ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்திருக்கிறார். மாற்றுத்திறனாளிகள் படும் சிரமத்தைக் குறைப்பதற்காக, அவர்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் இலவச ஆட்டோ பயணத்துக்கு ஏற்பாடு செய்திருப்பது, பாராட்டைப் பெற்றிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு