Published:Updated:

`சொந்த செலவில் குளிர்சாதன வசதி!’ -போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை நெகிழ வைத்த கரூர் ஆட்சியர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குளிர்சாதன வசதிகொண்ட அறையை திறந்து வைக்கும் அன்பழகன்
குளிர்சாதன வசதிகொண்ட அறையை திறந்து வைக்கும் அன்பழகன்

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் அறையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தனது சொந்த செலவில் குளிர்சாதன வசதி அமைத்து, நெகிழ வைத்திருக்கிறார்.

கரூர் நகரில் திருவள்ளுவர் மைதானம் அருகே அமைந்துள்ளது, மாவட்ட மைய நூலகம். இங்கு மாவட்ட நூலகராக இருக்கும் சிவக்குமார், நூலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். இங்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி, தனியார் பயிற்சி மையங்களைவிட தரம் வாய்ந்ததாக இருக்கிறது என்கிறார்கள் மாணவர்கள் சிலர். இந்த நிலையில்தான், கரூர் மாவட்ட மைய நூலகத்தில், 52-ஆவது தேசிய நூலக வார நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இளம்படைப்பாளர் விருது வழங்கி சிறப்பித்தார்.

மாணவர்களுக்கு விருது வழங்கும் அன்பழகன்
மாணவர்களுக்கு விருது வழங்கும் அன்பழகன்
Vikatan

அதோடு, கரூர் மாவட்ட மைய நூலக குறிப்புதவி பிரிவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்தி பயின்று வரும் மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்காக ரூ.66,000 மதிப்பில், 3 டன் அளவில் இரண்டு குளிர்சாதன இயந்திரங்களை தனது சொந்த செலவில் அமைத்துக் கொடுத்ததைத் திறந்து வைத்து, அப்பிரிவில் பயிலும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை ஒலி வடிவில் (Audio Format) பதிவு செய்யும் கருவியை கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் வழங்கி, மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களின் பாடத்திட்டங்கள் மற்றும் போட்டித்தேர்வு பாடத்திட்டங்களை ஒலி வடிவில் பதிவு செய்து உதவி வரும் தன்னார்வ தொண்டுள்ளம் கொண்ட வாசிப்பாளர்களான, வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்படனர். அதேபோல், கரூரில் உள்ள பிரபல தனியார் பள்ளி சாரண, சாரணிய மாணவர்கள் தங்களின் சிறுசேமிப்பின் மூலம் சேமித்த தொகை ரூ.10,000-த்தைக் கொண்டு அரசு பள்ளிகளில் பயிலும் 335 மாணவ, மாணவியர்களை மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினர்களாகச் சேர்த்தனர்.

ஆட்சியர் வழங்கிய குளிர்சாதன இயந்திரம்
ஆட்சியர் வழங்கிய குளிர்சாதன இயந்திரம்

அதன்படி, நகர்மன்ற கோட்டைமேடு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நூலக உறுப்பினர் சிறப்பு அட்டைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, கரூரில் உள்ள பிரபல துணிக்கடையின் உரிமையாளர் சண்முகசுந்தரம் சார்பில், நன்கொடையாக வழங்கப்பட்ட 250 மரக்கன்றுகளை நூலக வாசகர்கள், நூலகர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் வழங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய அன்பழகன், ``வாழ்கையில் பலரும் பல லட்சியங்களை வைத்து, அதற்கேற்றவாறு செயல்படலாம். தங்கள் லட்சியங்களை அடைய அனுதினமும் அவர்கள் கனவு கண்டுகொண்டிருக்கலாம். ஆனால், அந்த லட்சியம் கைகளில் சேர, இந்தப் போட்டித் தேர்வுகளில் வெல்வது முக்கியம். வாழ்கையை வசந்தமுள்ளதாக்குவதற்கான பிள்ளையார் சுழி, இந்தப் போட்டித் தேர்வுக்கு தயாராகும் அறையில்தான் முதலில் போடப்படுகிறது. அதனால், நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் லட்சியங்களை அடைய வேட்கையோடு படிக்க வேண்டும். நானும் உங்களைப்போல கீழ்நிலையில் இருந்து தணியாத அந்த வேட்கையின் மூலம் இந்த நிலைக்கு வந்தவன்தான்.

மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் ஆட்சியர்
மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் ஆட்சியர்

அதனால், உங்களுக்கு என்னென்ன தடைகள் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அதனால், உங்கள் லட்சியத்தை நிறைவேற்றுவதில் ஓர் அண்ணனாக உங்களோடு எப்போதும் இருப்பேன். தோள் கொடுப்பேன். இப்போதைக்கு நீங்கள் படிக்க ஏதுவாக போட்டித் தேர்வுக்கு தயாராகும் அறையில் எனது சொந்த செலவில் இரண்டு குளிர்சாதன இயந்திரங்களை அமைத்துள்ளேன். இதுபோல் உங்களது ஒவ்வொரு கஷ்டத்திலும் நான் பங்கெடுத்துக்கொள்ள தயாராகவே இருக்கிறேன்" என்று பேசி, மாணவர்களை உணர்ச்சிவசப்பட வைத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு