Published:Updated:

``உங்க நிலைமை மாறும்.. அதற்கு நான் பொறுப்பு!" -ஓவியர்களை ஸ்பாட்டிலேய நெகிழவைத்த கரூர் கலெக்டர்

ஓவியர்களைப் பாராட்டும் ஆட்சியர்
ஓவியர்களைப் பாராட்டும் ஆட்சியர்

கொரோனா வைரஸ் பற்றிய ஓவியங்களை சாலைகளில் வரைந்த ஓவியர்களைப் பாராட்டிய கரூர் மாவட்ட ஆட்சியர், அவர்களின் ஏழ்மை நிலைமையைப் போக்க ஸ்பாட்டிலேயே ரூ.15,000 நிதி ஒதுக்கிய சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நகராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சி சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆட்டோ மூலம் ஒலிபெருக்கி வாயிலாகவும், கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா பரவலைத் தடுப்பது குறித்த துண்டுபிரசுரங்கள் வழங்கியும், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்களுக்குப் பிரத்யேகமாக கொரோனா பரவலைத் தடுக்கும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

பூரண குணமடைந்த 9 கொரோனா நோயாளிகள்.. நேரில் வந்து வழியனுப்பி வைத்த கரூர் ஆட்சியர்!
கொரோனா வைரஸ் ஓவியம்
கொரோனா வைரஸ் ஓவியம்

உளவியல் ரீதியாக தைரியமூட்டும் வகையிலுமான செய்திகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறதுன்றன. மேலும், உள்ளுர் கேபிள் தொலைக்காட்சிகளில் தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கொரோனா பரவல் தடுப்பு குறித்த படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில், தற்போது கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓவியர்கள் இணைந்து, பொதுமக்களுக்குக் கொரோனா தொற்று பரவல் குறித்தும், அதிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள அரசு தெரிவிக்கும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும் விளக்கும் விகையிலும், 'விழித்திரு, தனித்திரு, வீட்டிலிரு' என்ற விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தியவாறு சாலைகளில் வண்ணமயமான கண்ணையும், மனதையும் கவரும் வகையிலான ஓவியங்களை வரைந்து வருகிறார்கள். தற்போதைய நிலையில் ஓவியர்களுக்கு அதிக பணிகள் இல்லாததால், பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையில் இருந்தாலும், மக்களுக்குக் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 ஓவியர்கள் ஒன்றிணைந்து இந்த நல்ல காரியத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

ஓவியர்களைப் பாராட்டும் ஆட்சியர்
ஓவியர்களைப் பாராட்டும் ஆட்சியர்

ராயனூர், செல்லாண்டிபாளையம், புலியூர், வெள்ளியணை, கரூர் பேருந்துநிலைய மனோரா ரவுண்டானா, தாந்தோணி கோயில் நுழைவுவாயில், அரசுகலைக்கல்லூரி நுழைவுவாயில், திருமாநிலையூர், பசுபதிபாளையம் காவல்நிலையம் முன்புறம் எனக் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்துள்ளனர். அந்த வகையில், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக முகப்பில் இதுபோன்ற ஓவியங்களை வரையவேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் அனுமதி கேட்டுள்ளனர்.

'ஓவியம் வரையும்போது சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்' என்று அறிவுரை கூறி, அவர்களுக்கான அனுமதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் வழங்கினார். அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 13 ஓவியர்கள் இணைந்து வண்ணமயமான ஓவியத்தை வரைந்துகொண்டிருப்பதைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன், அவர்களை அழைத்துப்பேசி, 'பொதுமக்களின் நலன்கருதி ஓவியர்கள் ஒன்றிணைந்து விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டிருப்பது பாராட்டுக்குரியது' என்று வாழ்த்துக்கூறினார்.

அதோடு ஓவியர்களிடம், 'ஓவியங்களை வரைவதற்கு ஆகும் செலவினை யார் வழங்குகிறார்கள்?' என்று கேட்டார். அதற்கு ஓவியர்கள், 'ஒரு இடத்தில் இதுபோன்ற ஓவியம் வரைய சுமார் ரூ.5,000 ரூபாய் செலவாகும். பொதுமக்களின் நலன் கருதி நாங்களே இந்தச் செலவினை ஏற்றுக்கொள்கிறோம். ஓவியர்களுக்கென்று ஒருகாலத்தில் சங்கம் இருந்தது. தற்போது ஓவியம் வரையும் தொழில் நலிவடைந்துள்ளதால், வேறு தொழில்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். எங்க தொழிலே முற்றிலும் நலிவடைந்துவிட்டது. ஆனால், கொரோனா என்ற கொடிய நோயின் தாக்கத்தைப் பொதுமக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என்ற நோக்கத்தில் ஓவியர்கள் ஒன்றிணைந்துள்ளோம்" என்று தெரிவித்தனர்.

அன்பழகன் (கரூர் மாவட்ட ஆட்சியர்)
அன்பழகன் (கரூர் மாவட்ட ஆட்சியர்)

அவர்களின் தன்னலம் கருதாத பணியினைப் பாராட்டிய மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன், 'பேருந்து நிலையம், இரயில் நிலையம் அமைந்துள்ள பகுதிகளிலும் இதுபோன்ற விழிப்புணர்வு ஓவியங்களை வரையுங்கள்' என்று தெரிவித்ததோடு, ஒரு இடத்தில் ஓவியம் வரைவதற்கு தலா ரூ.5,000 வீதம் மூன்று இடங்களில் வரைவதற்கு ரூ.15,000 வழங்க அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டார்.

அதோடு, "ஓவியங்களை வரைய ஓவியர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். உங்க நிலைமை மாறும். அதற்கு நான் பொறுப்பு!" என்றும் ஓவியர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். இதனால், ஓவியர்கள் நெகிழ்ச்சி கலந்த மகிழ்ச்சியோடு, மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகனுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு