Published:Updated:

`எங்க நிலைமையை யாருகிட்ட சொல்லி அழுறது?’ - கலங்கிநின்ற பார்வையற்ற தம்பதி; உதவிய கலெக்டர்!

 ஜானகி, காமராஜ்
ஜானகி, காமராஜ் ( நா.ராஜமுருகன் )

"எங்க ரெண்டு பேருக்கும் பிறவியில் இருந்தே கண் தெரியாது. கிடைக்கிற வேலையை செஞ்சு பிழப்பை ஓட்டிக்கிட்டிருந்தோம். 7 வருஷத்துக்கு முன்னாடி எங்களுக்கு கல்யாணமாச்சு. ஒரு குழந்தையும் பிறந்துச்சு. பொம்பளப்புள்ள.”

கொரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நீண்ட ஊரடங்கைப் பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கால், அன்றாடம் பொருள் விற்று, அந்த வருமானத்தில் சாப்பிடும் பார்வைச் சவால் கொண்டவர்கள், மாற்றுதிறனாளிகள் சாப்பாட்டுக்கே சிரமப்படும் நிலை உருவாகியுள்ளது.

கரூரில் கைக்குட்டைகளை விற்று பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த, பார்வைச்சவால் கொண்ட காமராஜ்- ஜானகி தம்பதிக்கும் அந்த நிலைதான். இவர்களின் நிலையை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டுசென்றது விகடன். உடனடியாக 10 நாள்களுக்குரிய உணவுப் பொருள்களை வழங்கிய ஆட்சியர், அவர்களை முழுப்பொறுப்பெடுத்து கவனித்துக் கொள்வதாகவும் நெகிழ்வோடு தெரிவித்தார்.

கரூர் மாவட்டம், பசுபதிபாளையத்தைச் சேர்ந்த காமராஜ், ஜானகி தம்பதியின் நிலை குறித்து வாசகர் சாதிக் அலி நம் கவனத்துக்கு கொண்டு வந்தார். உடனடியாக அவர்களைச் சந்தித்தோம். மிகவும் சோர்ந்து போயிருந்த ஜானகி நம்மிடம் பேசினார்.

"எங்க ரெண்டு பேருக்கும் பிறவியில் இருந்தே கண் தெரியாது. கிடைக்கிற வேலையை செஞ்சு பிழப்பை ஓட்டிக்கிட்டிருந்தோம். 7 வருஷத்துக்கு முன்னாடி எங்களுக்குக் கல்யாணமாச்சு. ஒரு குழந்தையும் பிறந்துச்சு. பொம்பளப்புள்ள. இப்போ 5வது படிச்சிக்கிட்டு இருக்கா. நானும் அவரும் தினமும் பேருந்து நிலையம், ரயில்வே ஸ்டேஷன் போய் கைக்குட்டைகள் விப்போம். தொண்டை காய பகல் முழுதும் கத்திக்கத்தி வித்தாகூட, ரெண்டு பேருக்கும் சேர்த்து 200 ரூபாய் வருமானம் வந்தா பெருசு.

ஜானகி
ஜானகி

ஆனாலும், அதை வச்சு ரெண்டு வேளை கஞ்சியாச்சும் பழுதில்லாமக் குடிச்சுக்கிட்டு இருந்தோம். ஆனா, இந்த கொரோனா வைரஸ் பரவி, எங்க பிழைப்புல மண்ணள்ளி போட்டுருச்சு. சாப்பாட்டுக்கே கஷ்டமாப்போச்சு.

பசி எடுக்கறப்ப விதியை நொந்துகிட்டு, வெறும் பச்சைத் தண்ணியைக் குடிச்சுகிட்டு கடந்திருவோம். ஆனா, எங்க பிள்ளை, 'அம்மா பசிக்குது'னு கண்கலங்குறப்ப நெஞ்சம் பதறுதுய்யா.
ஜானகி

இப்போ சுத்தமா வருமானம் இல்ல. ஊரடங்கு நடைமுறைக்கு வந்து ஒன்பது நாளாயிருச்சு. பாதி நாள் நாங்க சாப்பிடலை. எங்க நிலைமையை யாருகிட்ட போய் சொல்றதுன்னே தெரியலை. பசி எடுக்கறப்ப விதியை நொந்துகிட்டு, வெறும் பச்சைத் தண்ணியைக் குடிச்சுகிட்டு கடந்திருவோம். ஆனா, எங்க பிள்ளை, 'அம்மா பசிக்குது'னு கண்கலங்குறப்ப நெஞ்சம் பதறுதுய்யா.

அவ பசியெடுத்து அழும்போது, 'பேசாம இந்த கொரோனா வைரஸ் எங்க மூணு பேரையும் கொண்டு போனா தேவலாம்'னு மனசு நினைக்குது. புயல், மழை, வெள்ளம், கொரோனா வைரஸ்னு எது வந்தாலும், எங்கமாதிரி ஆளுகளோட பொழப்புதான் சீரழிஞ்சு போகுது. எங்களை இப்படி படைச்ச அந்த ஆண்டவனுக்கும் கண் இல்லை சார்" என்று கலங்குகிறார் ஜானகி.

மிகவும் கலக்கமாகப் பேசுகிறார் காமராஜ்,

"நான் தபேலா இசைப்பேன். ஆனா, அதுக்கான வாய்ப்பு கம்மி. நல்ல உடல்நிலை இருக்கிறவங்க வாசிக்கிறதுக்கே இங்கே மதிப்பில்லை. ஆர்க்கெஸ்ட்ரா மவுசு குறைஞ்சு, இப்போ எங்கும் ரெக்கார்டு டான்ஸ்தான். தபேலா வாசிக்க வாய்ப்பே கிடைக்காது. தபேலாவை மூலையில் வச்சுட்டு, தினமும் என் மனைவியோடு சேர்ந்து கைக்குட்டைகள் வித்துக்கிட்டு இருந்தேன்.

காமராஜ்
காமராஜ்

ஊசலாட்டமான பொழப்பா இருந்தாலும், தினமும் தொழிலுக்குப் போயிட்டு இருந்தோம். 10 நாளா ஊரடங்குனால போக முடியலை. வாடகை வீட்டுலதான் குடியிருக்கிறோம். ஏற்கெனவே நாலு மாசம் வாடகைப் பாக்கி. இப்போ பத்து நாளா சோத்துக்கே வழியில்லாம அல்லாடிக் கிடக்கிறோம். யாருகிட்டப் போய் உதவி கேட்கிறதுன்னும் புரியலை சார்" பேசும்போதே குரல் கம்முகிறது காமராஜ்க்கு.

காமராஜ்- ஜானகியின் நிலைபற்றி கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கவனத்துக்குக் கொண்டுசென்றோம். "காமராஜ், ஜானகி நிலை கலங்க வைக்கிறது. உடனே அவர்களுக்கு உதவ முயல்கிறேன்" என்றவர், இதுபற்றி கரூர் தாசில்தார் அமுதாவிடம் பேச, `உடனடியாக வேண்டிய உதவிகளை உடனே செய்யுங்க' என்று உத்தரவிட்டார்.

தாசில்தார் மூலம் உதவி
தாசில்தார் மூலம் உதவி

உடனடியாக, காமராஜ், ஜானகி தம்பதியின் வீட்டுக்குச் சென்ற தாசில்தார் பத்து நாள்களுக்குத் தேவையான அரிசி, காய்கறிகள், மளிகைச் சாமான்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ 2,000 அனைத்தையும் வழங்கினார்.

அடுத்த கட்டுரைக்கு