Published:Updated:

கரூர்: கொரோனா வார்டு மருத்துவருக்கு வீடியோ காலில் வாழ்த்து! - நெகிழவைத்த ஆட்சியர்

மருத்துவரிடம் வீடியோ காலில் பேசும் அன்பழகன்
மருத்துவரிடம் வீடியோ காலில் பேசும் அன்பழகன் ( நா.ராஜமுருகன் )

கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவரை வீடியோ காலில் வாழ்த்திய கரூர் ஆட்சியர், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரிடம் சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார்

கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கொரோனா வார்டில் பணியாற்றிய மருத்துவரை, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், அனைத்து மருத்துவர்களின் முன்னிலையில் போன் மூலம் பேசி நெகிழவைத்திருக்கிறார்.

மருத்துவரிடம் வீடியோ காலில் பேசும் அன்பழகன்
மருத்துவரிடம் வீடியோ காலில் பேசும் அன்பழகன்
நா.ராஜமுருகன்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை முறை குறித்தும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் நேரில் பார்வையிட்டு, திடீர் ஆய்வு செய்தார்.

கரூர்: `அவங்க குழந்தை மாதிரி!' - மனநலம் பாதித்த பெண்ணுக்கு உதவிய இன்ஸ்பெக்டர்

அப்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவரும் வார்டில் பணியாற்றும் மருத்துவரின் செல்பேசி எண்ணை மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் கேட்டுப் பெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர், அனைவரின் முன்னிலையிலும் தனது செல்பேசியிலிருந்து மருத்துவரை வீடியோ கால் மூலமாகத் தொடர்புகொண்டு பேசினார். `கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களைக் காப்பாற்றும் அர்ப்பணிப்புமிக்க பணியில் ஈடுபட்டுள்ள உங்களுக்கும், செவிலியர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் எனது வாழ்த்துகள்' என்று கூறி, அந்த மருத்துவரை நெகிழவைத்தார். அதோடு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உடல்நலம் குறித்தும் கேட்டறிந்தார்.

மருத்துவரிடம் வீடியோ காலில் பேசும் அன்பழகன்
மருத்துவரிடம் வீடியோ காலில் பேசும் அன்பழகன்
நா.ராஜமுருகன்

பின்னர், வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரிடம் வீடியோகால் மூலமாகப் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர், `உங்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை வழங்கப்படுகிறதா?’ என்றும், `மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அவ்வபோது பார்த்துக்கொள்கிறார்களா, உங்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக, சுவையானதாக இருக்கிறதா?' என்றும் கேட்டார். அதற்கு பதிலளித்த தொற்றால் பாதிக்கப்பட்ட நபர், `மருத்துவர்களும் செவிலியர்களும் நல்லமுறையில் கனிவாகப் பேசி கவனித்துக்கொள்கின்றனர். மேலும், எங்களின் பொழுதுபோக்குக்கு டி.வி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் தரமான, சுவையான உணவுகள் வழங்கப்படுகின்றன' என்று தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் இந்தச் செயல், அங்கு பணியாற்றிய மருத்துவர்களுக்கும், சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கும் புதுநம்பிக்கை அளிக்கும்விதமாக இருந்தது.

கரூர்: `அவங்க குழந்தை மாதிரி!' - மனநலம் பாதித்த பெண்ணுக்கு உதவிய இன்ஸ்பெக்டர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன், ``தொடர்ந்து 150 நாள்களுக்கும் மேலாக அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் தங்களது சுக, துக்கங்களை மறந்து, உற்றார் உறவினர்களைப் பிரிந்து,`கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டும்' என்ற உன்னத நோக்கத்தில், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில், `அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை முறையாக வழங்கப்படவில்லை’ என்றும், 'உணவு தரமானதாக இல்லை' என்றும் தவறான செய்திகளை வாட்ஸ்அப் போன்றவற்றில் சிலர் பதிவிட்டுவருகின்றனர். தங்கள் இன்னுயிரையும் துச்சமென மதித்து பணியாற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களின் மனம் புண்படும்படி தவறான தகவல்களைப் பதிவிடுவோர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அன்பழகன் (கரூர் மாவட்ட ஆட்சியர்)
அன்பழகன் (கரூர் மாவட்ட ஆட்சியர்)
நா.ராஜமுருகன்

உண்மைக்குப் புறம்பான செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவது சட்டப்படி குற்றம் என்பதை அனைவரும் உணர வேண்டும். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களின் உடல்நிலை குறித்து உறவினர்கள் தொலைபேசி வாயிலாகக் கேட்டு அறிந்துகொள்ளும் வகையில், உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 73390-31031 என்ற எண்ணில் தொடர்புகொண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகள் குறித்த விபரங்களையும் தெரிந்துகொள்ளலாம். மேலும், யாருக்கேனும் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளவும், இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு